சிபாரிசு



‘‘நாளைக்கு நான் இன்டர்வியூக்கு போகப்போற கம்பெனியோட எம்.டி. வெற்றிவேல், உங்க முன்னாள் மாணவராம். நீங்க ஒரு வார்த்தை சொன்னா போதும். எனக்கு இந்த வேலை கிடைச்சிடும்!’’ - ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கந்தசாமியிடம் தயக்கத்துடன் பேசினான் அவர் மகன் மனோஜ். சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்த கந்தசாமி, ‘‘விலாசத்தைக் கொடு. இப்பவே போய் பார்க்கிறேன்’’ என்றார்.

வீட்டுக்கு வந்த கந்தசாமியை உற்சாகமாய் வரவேற்ற வெற்றிவேல், பழைய பள்ளிக்கூட கதையெல் லாம் அசை போட்டார். திடீரென ஏதோ ஞாபகம் வந்தவராய், ‘‘உங்களுக்கு ஒரு பையன் இருந்தானே! என்ன பண்றான் சார்?’’ என்றார். ‘‘பி.இ. முடிச்சிட்டு வேலை தேடிக்கிட்டிருக்கான்!’’ எனத் தயக்கத்துடன் பதில் சொன்னார் கந்தசாமி.

சில வினாடிகள் பேசாமல் இருந்த வெற்றிவேல், உறுதியான குரலில் பேசினார். ‘‘உங்க பையனை நம்ம கம்பெனியில கூட வேலைக்கு வைக்கலாம் சார். ஆனா, உங்களுக்குத்தான் சிபாரிசுங்கற வார்த்தையே பிடிக்காது. வேற ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?’’‘‘ஒண்ணுமில்லப்பா... உன்னை சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்’’ என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தார் கந்தசாமி.

ஜெ.கண்ணன்