கைம்மண் அளவு



தேச விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் பாதி தாலுகாக்களைக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாயிற்று.

இந்த மாவட்டத்துக்காரர்கள் நெடுங்காலம் ரயில் பார்த்தது சினிமாக்களில்தான். திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் போக வேண்டும், ரயிலை நேரில் பார்க்க. புகைவண்டி என்றும், தொடர்வண்டி என்றும், இருப்புப்பாதை வண்டி என்றும், மின் தொடர்வண்டி என்றும், ரயில் காடி என்றும் அழைக்கப்பட்டும், இன்று கூட ‘ரயில்’ என்ற சொல் மக்கள் புழக்கத்தில் இருந்து மாயவில்லை.

ஏதோ ஒரு கல்யாணத்துக்காக, திருவனந்தபுரம் போன எங்கள் குடும்பம், ரயில் பார்க்க, திருவனந்தபுரம் தம்பானூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டேஷன் போனது. அங்கு ரயில் ஏறி, அடுத்த நிறுத்தமான பேட்டையில் இறங்கினோம். குடும்பத்தினர் 15 பேர் இருப்போம். பேட்டை ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது பரிசோதகர் டிக்கெட் கேட்டார்.

 ஐந்தாம் வகுப்பு தோற்ற பெருமை உடைத்த அப்பாவுக்கு, ரயிலில் ஏறிப் பார்க்க கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை. நிலைமை உணர்ந்த பரிசோதகர், மலையாளத்தில் தெறிகள் சொல்லி வெளியே அனுப்பினார். என்ன, ‘பாண்டித் தமிழம் மாரு’ என்று சொல்லி இருக்கலாம். எனக்கு அப்போது பத்து, பன்னிரண்டு வயதிருக்கும்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகள் பின்னரே எமக்கு முதல் மருத்துவக் கல்லூரி வந்தது. ரயில் பார்க்க பொன் விழா ஆண்டு வரை காத்திருந்தோம். ஏனெனில் நாம் ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்ற, நீதி வழுவாத மக்களாட்சி.

பி.யு.சி தேறியதும் பொறியியல் பட்டப்படிப்பு நேர்காணலுக்கும், பி.எஸ்சி தேறியதும் இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதவும், எம்.எஸ்சி கடந்ததும் வேலை தேடி பம்பாய்க்கும் என மூன்று முறை எனக்கு சென்னை நோக்கிய பயணம். அன்று ஊரிலிருந்து ஒன்றே முக்கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வரும் டவுன் பஸ் பிடித்து நாகர்கோவில் வந்து, அங்கிருந்து இன்னொரு பஸ் ஏறி 80 கி.மீ திருநெல்வேலி அடைந்து, பிறகு ரயிலேற வேண்டும்.

பின்னாட்களில் ரயில் பயணங்களும் பேருந்துப் பயணங்களும் என் வாழ்க்கை நெறி ஆயின. தால்சாவல் உண்பதற்கான மார்க்கமும். முன்பதிவுப் பயணமோ, பொது கோச்சோ, ரயிலில் ஏதோ ஒன்று. உலகப் பணக்காரர்கள், விமானத்தில் பெரும்பான்மையினர் பயணம் செய்யும் வகுப்பை ‘கால்நடை வகுப்பு’ என்கிறார்கள். நம்மூர் அன்ரிசர்வ்ட் கோச் பயணத்தை என்னென்பார்கள்? ‘பன்றித் தொழுவம்’ என்றா?

அந்த நாட்களில் எனது நிலையம் பம்பாய். பணி நிமித்தம் இரவுப் பயணங்கள் நாக்பூர், சோலாப்பூர், கோலாப்பூர், பரோடா, சுரேந்திர நகர் என... ஒற்றை ஆளாக. ஞாயிறு இரவு புறப்பட்டு அடுத்த ஞாயிறு காலை வருகை. ஏழு இரவுகளும் ஆறு பகல்களும். அதற்குத் தோதாக உடைகள், பிற அடங்கிய ஏர்பேக், தோளில். கையில் எமது நிறுவனத்தின் விலைப்பட்டியல்கள், கேட்டலாக், தகவல் கோப்பு, விசிட்டிங் கார்டு எனக் கொண்ட பெட்டி. பணம் கால்சட்டை பாக்கெட்டில்... இரண்டு மூன்று இடங்களில் பிரித்து! அன்றைக்கெல்லாம் செல்போன், சார்ஜர், லேப்டாப் போன்ற சுமைகள் இல்லை. வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. வாசிக்கப் புத்தகங்களும் பயணப்பொருட்களில் இருந்தன.

திருட்டுக்கு அஞ்சவில்லை. நம்மிடம் திருடிக் கொண்டு போக என்ன உண்டு? இருக்கும் அற்ப சொற்ப அறிவும் யாருக்கு வேணும்? இன்றும் சிலர் பகல் நேர வண்டியிலும் பயணப் பெட்டியைப் பூட்டி, அதைச் சங்கிலியால் பிணைத்து, பூட்டை இழுத்துப் பார்த்து பயணம் செய்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரலாம், ஆனால் அவருக்கு முன் அனுபவம் இருக்கும்தானே! நான் சிறுவனாக இருந்தபோது, ரயில் பயணங்களில் திருட்டு பயம் பற்றிய சுவாரசியமான செய்திகள் உண்டு-

‘பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுக்க வேண்டும். செலவாதிக்குப் போனாலும் கையிலே கொண்டு போகணும். ஒறங்கச்சிலே கள்ளப் பயக்கோ வந்து உள்ளங்காலை நக்குவான்... அல்லது ஊரல் எடுக்க என்னமாம் தடவுவான்... தலையத் தூக்கிப் பாத்தா பொட்டியைக் காணாது பாத்துக்கோ!’ எனும் ரீதியில்.

அன்றைக்கெல்லாம் தண்ணீர் போத்தல் விலைக்கு வரவில்லை. PET பாட்டில்களே பின்னாட்களில்தான் வந்தன. பெரிய ரயில் நிலையங்களில் தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும், அரக்கப் பரக்க ஓடிப் போய், குடிநீர்க் குழாயில் ஒரு கண், ரயிலில் ஒரு கண். கைக்குழந்தைகளுடன் பயணம் செய்வோர் பாடு சிரமம். குழந்தைக்குப் பால் அல்லது வெந்நீர் வாங்க ஓட வேண்டும். அன்று சிரமம் உணர்ந்து தண்ணீர் பிடித்துத் தர, பால் வாங்கி வர உதவும் பரோபகாரிகளும் நிறையப் பேர் இருந்தனர்.

முன்பதிவு செய்த என் பயணங்களில் கீழ் பெர்த் கேட்டு வாங்குவேன். நேரமற்ற நேரத்தில் வரும் என் நிலையத்தில் இறங்க ஏதுவாக இருக்கும். மேல் பெர்த்தில் வேறு வகையான அனுகூலங்கள் உண்டு. எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உறங்கலாம். எவரும் தொந்தரவு செய்து காலைச் சுரண்ட மாட்டார்கள். பெரும்பாலான என் பயணங்களில், தேர்ந்து கீழ்ப் படுக்கை வாங்கி இருந்தாலும், முகம் அவதானித்து வந்து கோரிக்கை வைப்பார்கள். கோரிக்கைகள் கீழ்க்காணும் விதத்தில் அமையும்.

1. அம்மாவால மேல் பெர்த் ஏற முடியாது. நீங்க மேல் பெர்த் எடுத்துக்கிறீங்களா?2. நானும் வொய்ஃபுமா ஊருக்குப் போறோம். எனக்கு பெர்த் இந்த கோச்லே! வொய்ஃபுக்கு S11. கைக்குழந்தை வேற... கொஞ்சம் ஒப்லைஜ் பண்ணுங்க!3. எங்கூர்ல அம்மன் கோயில்லே கொடை, கேட்
டேளா! நாலஞ்சு குடும்பமா ஊருக்குப் போறோம்... ஒருத்தன் S7லே மாட்டிக்கிட்டான்... சவம், சின்னப் பெய! கொஞ்சம்
ஒத்தாசை செய்யுங்களேன்....

4. அய்யாக்கு கால் மூட்லே ஆபரேஷன் பாத்துக்கிடுங்க... அப்பர் பெர்த் ஏற முடியாது... தயவு பண்ணுங்க ஐயா!
மேற்கொண்டும் சொல்லும் காரணங்களை அவரவர் கற்பனைக்கு விடுகிறேன். எனக்கென்று இல்லை, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கும் இவ்வனுபவங்கள் இருக்கலாம்.

கூடுமான வரை முகம் சுளிக்காமலும், ஈண்டையானும் மனிதன் என்பதால் சில சமயம் முகச்சுளிப்புடனும் இடம் மாறிக் கொடுத்திருக்கிறேன்.
ஒருமுறை பம்பாயிலிருந்து புறப்பட்ட தாதர்-மெட்ராஸ் விரைவு வண்டி.  எதிர் இருக்கைக்காரர் நாட்டியக் கலைஞர். பம்பாயில் நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். நாட்டியத்தில் வழுவூர் பாணி  பந்தநல்லூர் பாணி வேறுபாடுகளை விளக்கிக் கெண்டிருந்தார்.

பேச்சு நல்ல சுவாரசியத்தில் இருந்தது. அவர் கொணர்ந்திருந்த மிளகாய்ப் பொடி-  நல்லெண்ணெய் காப்பிட்ட இட்லி சில என்னுடன் பகிர்ந்து கொண்டார். புனேயில் ரயில் நின்று புறப்பட்டவுடன் என் முகம் நோக்கி ஒரு குரல். மேற்சொன்ன காரணங்களில் இரண்டாவது. என் தரப்பை நாட்டியக் கலைஞர் வாதிட்டார்.

‘‘இப்பிடி பாதிப் பிரயாணத்திலே வந்து கேட்டா எப்பிடிங்க?  லுங்கிக்கு மாறியாச்சு... இப்பப் போயி ‘சூட்கேசும் சோத்து மூட்டையும் எடுத்துக்கிட்டு S6க்கு போ’ன்னா எப்பிடி?’’வந்தவர், ‘‘தப்புதாங்க... வேற நிவர்த்தி இல்லே. கைப்பிள்ளையைக் கைமாத்தி வச்சுக்கிட வேற யாரும் இல்லே!’’
நான் புறப்படும் மனநிலைக்கு வந்துவிட்டேன்.

‘‘லக்கேஜ் நான் தூக்கிக்கிடுதேன் சார்’’ என்றார் நயந்த குரலில். நமக்கு வேறு மார்க்கமென்ன?இன்னொரு முறை, இடமாற்றம் ஒப்புக்கொண்டு போனதில், முன்பதிவில் இருந்து ஆர்.ஏ.சி இருக்கையில் போய் விழுந்தேன். கேட்டுக்கொண்டவரிடம் முறையிட்டதில், ‘‘எப்பிடியும் சோலாப்பூர்லே உங்களுக்கு பெர்த் கன்ஃபர்ம் ஆயிடும் சார்’’ என்றார். ‘என்ன தவம் செய்தனை?’ என்று உள்மனம் கேட்டது.

தனது துறையில் இடமாற்றம், கவுன்சிலிங் நடக்கும்போது பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பல இலக்கங்கள் தேத்தி விடுகிறார்கள் என்பது செவி வழிச் செய்தி! தமது துறையில், தம் கீழ் வேலை செய்வோரிடமே இடமாற்றத்துக்குப் பணம் கேட்கும் மனிதரைக் குறிக்க அகராதியில் சொல் உண்டா? தன் சதை அறுத்து, உப்பு மிளகு தூவி, தானே தின்னும் சமூகமாக மாறிப் போயிற்று நமது.

இப்போது யோசித்துப் பார்க்கிறேன், ரயில் பயணத்தில் ஒரு பெர்த் மாற்றிக் கொள்வதற்காக சில நூறுகள் கேட்டிருக்க மாட்டார்களா? எங்கோ வாசித்த நினைவு... வழக்கமாக பாலியல் தொழிலாளியிடம் கலவி செய்பவன், சொந்த மனைவியைக் கூடி விட்டு, அவள் தலையணையின் கீழே சலவைத் தாள்கள் வைத்தான் என்று!

சில சமயம் சுத்தமான புது கோச்சில் இருந்து, காற்றாடி சுழலாத டப்பா கோச்சினுள் தள்ளப்பட்டிருக்கிறேன். அமைதியான பெட்டியில் இருந்து கல்யாணக் கூட்ட ஆதாளியில் செலுத்தப்பட்டிருக்கிறேன். அல்லது திறக்கவோ, மூடவோ முடியாத சன்னல் இருக்கைக்கு.இன்று கணினி முன்பதிவு. இருபத்தோரு வயது காளைக்கு கீழ்ப் படுக்கையும், எழுபது வயது முதுமைக்கு மேற்படுக்கையும் போடும் அது. கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்தவரா, பாரித்த உடம்பா, மணிக்கு ஒரு தரம் உபாதை இறக்கப் போகும் நீரிழிவா என்பன எல்லாம் கணினியின் அக்கறைகள் அல்ல.

சென்ற ஆண்டில் கோவை விஜயா பதிப்பகம் வேலாயுத அண்ணாச்சியுடன் இரவில் சென்னையிலிருந்து சேரன் விரைவு ரயிலில் கோவை பயணம். இருவருக்குமே மேல் படுக்கை. அண்ணாச்சிக்கு 75 வயது, எனக்கு 67. கீழ்ப் படுக்கைகள் இரண்டிலும் கோவை கல்லூரி ஒன்றில் வாசிக்கும் இரு மாணவிகள். அண்ணாச்சி அவருக்கே உரித்தான கலகலப்புடன் கேட்டார், ‘‘ஏம்மா, ரெண்டு பேரும் மேலே போறீங்களா? தொந்தரவு இல்லாம தூங்கலாம்!’’

இருவரும் சேர்ந்திசை பாடும் குரலில் கொஞ்சிச் சொன்னார்கள், ‘‘இல்ல அங்கிள்... ஆங்கில்லே பிராப்ளம் இருக்கு!’’‘‘பரவால்ல அண்ணாச்சி, ஏறுங்க! நான் பிடிச்சுக்கிடுவேன்’’ என்றேன். அவர் எதையும் பெரிதாகப் பொருட்படுத்துபவர் இல்லை. அந்த வயதில், காலில் இருந்த புண்ணுடன், சற்றுப் பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, மேல் பெர்த் ஏறியது காணச் சங்கடமாக இருந்தது.

சில வாரங்கள் முன்பு, இரவுப் பயணமாக ரயிலில் திருவனந்தபுரம் போனோம். எனக்கும், மனைவிக்கும், இரண்டு வயது மகனுடன் இருக்கும் எம் மகளுக்குமாக இரண்டு மேல் படுக்கை, ஒரு சைடு அப்பர். கணினியின் மனிதாபிமானம்! யாரிடமாவது ஒரு கீழ்ப்படுக்கை கேட்டுப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மனைவிக்கு. கீழ் இரண்டு பெர்த்துகள் பிடித்திருந்த தம்பதியினரிடம் கேட்டாள் மனைவி. தமிழர்கள்தான். ‘‘உடம்பு சரியில்லீங்க!’’ என்று சொல்லி விட்டனர்.

விரைந்து நலம் பெற பிரார்த்தனை செய்து விட்டு மனைவியைப் பார்த்தேன். ‘‘பெட்ஷீட் வச்சிருக்கேன்... தரையிலே விரிச்சுப் படுக்க வய்க்கேன்!’’ என்றாள்.உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த சைடு லோயர் மலையாளி, ‘‘இவிடக் கிடந்தோழின்’’ என்றார். ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’.

கண்முன்னே, இரு சக்கர வாகனத்தில் அடிபட்டுக் கிடப்பவனைப் பொருட்படுத்தாது வேகமெடுத்துப் போகின்றன ஊர்திகள். தன் பங்கோடு நில்லாமல் ஏமாளி பங்கையும் பறித்துக்கொள்ள முண்டுகிறது உலகம். ‘ஏபி நெகட்டிவ் ரத்தம் உடனடியாக இருபது யூனிட் வேண்டும், அவசரம்’ என்று விளம்பரங்கள் வருகின்றன. கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல் என தானம் கோருகின்றனர்.

தமக்கு ஒன்று என்றால் உலகமே எதிர் நின்று, ஏந்தல் மாந்தல் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். முதுகில் புத்தகச் சுமையுடன் நெடுஞ்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் நடக்கும் சிறுவரை ஏற்றிக்கொள்ளலாம் என எவரும் நினைப்பதில்லை. பென்ஸும், ஆடியும், ஸ்கோடாவும் அவர் ஏறினால் அழுக்காகி விடும்!

‘செத்தார்க்கு நோற்பார் பல நாள்’ என்கிறது சிறுபஞ்சமூலம். செத்துப் போனவனுக்குப் பல நாட்கள் நோன்பிருப்பார்கள். பல்வகைப் பதார்த்தங்கள் படைத்து சாமி கும்பிடுவார்கள். ‘நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயார்’. உயிர் வாழ்வார்க்கு எந்த சகாயமும் செய்ய மாட்டார்கள். சகாயம் என்றவுடன் கவலையுடன் அச்சமும் சேர்ந்து கொள்கிறது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் உலகாளும் பரம்பொருள் உடன் நின்று பேணட்டும்.
‘காக்க காக்க கனகவேல் காக்க!’

கண்முன்னே, இரு சக்கர வாகனத்தில்  அடிபட்டுக் கிடப்பவனைப் பொருட்படுத்தாது வேகமெடுத்துப் போகின்றன ஊர்திகள்.  தன் பங்கோடு நில்லாமல் ஏமாளி பங்கையும் பறித்துக்கொள்ள முண்டுகிறது உலகம்.

ஹேர்... ஹோமியோ!

தினமும் இயற்கையாக ஒருசில முடி உதிர்வதும் வளர்வதும் இருக்கும். ஆனால் வளர்பருவத்தில் இருக்கும் முடி கொட்டினால் அதை கவனிக்க வேண்டும். இதை எப்படிக் கண்டுபிடிப்பது? விழுந்த முடியை வெள்ளைத்தாளில் வைத்துப் பாருங்கள். முடியின் அடிப்பகுதி பழுப்பு நிறத்தில் இருந்தால், அது வளர் பருவத்தில் விழுந்துள்ளது. இயல்பான நிறத்தில் இருந்தால், அது சிதை பருவத்தில் இயல்பாக விழுந்துள்ளது என அர்த்தம்.

உப்பு நீர், குளோரின் நீர் குளியல், அதிக ஷாம்பு, சோப்பு, பொடுகு, சத்துக்குறைவான உணவு, நோய்கள், ஹார்மோன் பிரச்னை, டென்ஷன், நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என முடி உதிர எதுவும் காரணமாகலாம். பழக்கவழக்கங்களை மாற்றினாலே பாதி சரியாகிவிடும். பலன் கிடைக்காதநிலையில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

(கற்போம்...)

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது