குட்டிச்சுவர் சிந்தனைகள்



‘ஓ காதல் கண்மணி’ படத்துல living together கான்செப்ட்ட வச்சாலும் வச்சாங்க, ஆளாளுக்கு ‘ஆதரவு தரேன்’னும் ‘எதிர்ப்பு தெரிவிக்கிறேன்’னும் உச்சி வெயில்ல குச்சி நீட்டி கொடி புடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்த living together கான்செப்ட் எல்லாம் சினிமாவுக்கு புதுசு இல்ல கண்ணா, ரொம்பவே பழசு.

‘16 வயதினிலே’ படத்துல கோழி டாக்டர் மயில மோப்பம் புடிச்சு வந்து ஏப்பம் விடப் பார்க்கிறப்ப, தப்பிச்ச மயில் சப்பாணியோட வாழுறது living together இல்லையா? அட, ‘அக்னி நட்சத்திரம்’ படத்துல விஜயகுமாரும் சுமித்ராவும் பாதி படத்துல living togetherதானேப்பா. ‘அவன் இவன்’ படத்துல ஹைனெஸ் சம்சாரம், அவர விட்டுட்டு பேங்க் ஆபீசரோடதானே living together சமாச்சாரம்.

‘காதல் கொண்டேன்’ல தனுஷ் திவ்யாவ கடத்திக்கிட்டு போயி வாழுறதும், மனசளவில் living togetherதானேப்பா. ‘குணா’ படத்துல கமலும் அபிராமியும் குகையில வாழுறதுகூட ஒரு வகையில் குழந்தைத்தனமான living togetherதானே?

பல படங்களில் ஹீரோவும் ஹீரோயினும் பகல் முழுக்க living togetherதான். என்ன, ராத்திரிக்கு தூங்க அவங்கவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. இதையெல்லாம் மறந்துட்டு இப்ப புதுசா  கண்டுபிடிச்ச மாதிரி வர்றாங்க..? ஹய்யோ ஹய்யோ, ஒரே தமாஷால்ல இருக்கு!

சூப்பர்ஸ்டார் ஒரு படத்துல சொன்ன மாதிரி இந்த தும்மல், விக்கல், இருமல், கொட்டாவி, ஏப்பம், காசு, பணம், பதவி, புகழ் இதெல்லாம் எப்ப வரும்னும் சொல்ல முடியாது, ஏன் வருதுனும் சொல்ல முடியாது. வரப்பவும் தடுக்க முடியாது, அது போறப்பவும் கேட்க முடியாது. இதுங்களைப் போலவே, எப்ப வரும்னும் எப்ப போகும்னும் சொல்ல முடியாத இன்னமும் சில விஷயங்கள் இருக்கு.

உதாரணத்துக்கு  நம்ம பிரதமர் எப்போ வெளிநாடு போவாரு, எப்ப நம்ம நாட்டுக்குத் திரும்பி வருவாரு? ராகுல்காந்தி, சல்மான் கானுக்கு எப்போ கல்யாணம்? இந்த சுனாமி, பூகம்பம், சூறாவளி போன்ற இயற்கை அழிவுகள் எப்போ வரும்? காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் எப்போ கிடைக்கும்? கட்டின பொண்டாட்டின்னாலும், கோவம் எப்ப வரும்? ரஜினி சார் தன் ரசிகர்களுக்கு பிரியாணி போடுவாரா? த்ரிஷாவுக்கு எப்போ கல்யாணம்?

இதையெல்லாம்  கூட கொஞ்சம் அனுமானிக்கலாம்... ஆனா, அடுத்து வர ரெண்டை யாராலும் கணிக்கவே முடியாது. நம்ம சிம்பு நடிச்சு அடுத்த படம் எப்ப வரும்? பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்குல தீர்ப்பு எப்ப வரும்?

மிடில்கிளாஸ் மக்களை ஒருவழியா தூக்கிப் போட்டு முதுகுல மிதிச்சுட்டு அட்சய திரிதியை போயிடுச்சு. அட்சய திரிதியை அன்னைக்கு தங்கம் வாங்குனா வருஷமெல்லாம் தங்கம் சேரும்னு  சொன்னவன் மட்டும் கைல கிடைச்சா, பல புருஷனுங்க அவன் வாயில காலை விட்டு ஃபுட்பால் ஆடிடுவாங்க. அட்சய திரிதியைக்கு புது தங்கம் வாங்கணும்னு ஒரு பவுன் நகைய வித்துட்டு, செய்கூலி சேதாரத்தோட அரை பவுன் வாங்குன அறிவுஜீவி ஐன்ஸ்டீன்களை நான் பார்த்திருக்கேன்.

நமக்கெல்லாம் அட்சய திரிதியை அன்னைக்கு வாங்குற கடனும் திட்டும்தான் வருஷம் முழுக்க துணை வரும். மத்தபடி ஒண்ணும் வராது. பல லட்சம் மக்களின் தாகத்தையும் பாவத்தையும் ஜலசாந்தியடைய வைக்கிற டாஸ்மாக் கூட பத்து டூ பத்துதான் திறந்து வைக்கிறாங்க. ஆனா, இந்த அட்சய திரிதியை அன்னைக்கு பல நகைக்கடைங்க மொத நாள் ராத்திரில இருந்தே திறந்து கிடந்துதுங்க.

பத்து இல்ல... நூறு இல்ல... மக்களே, இந்த வருஷம் அந்த ஒரு நாளில் மட்டும் தமிழர்கள் வாங்கிக் குவித்த தங்கம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட நாலு மாருதி ஆல்டோ காரின் எடை, கிட்டத்தட்ட 1100 பொறந்த குழந்தைகளின் எடை, 225 கேஸ் சிலிண்டர்களின் மொத்த வெயிட், ஃபிப்டி கே.ஜி தாஜ்மஹாலான 64 ஐஸ்வர்யா ராய்கள், சரி... சரி... எவ்வளவு சேல்ஸ் ஆச்சுனு சொல்லிடுறோம். 3200 கிலோ! இப்போ தெரியுதா, தமிழக மக்கள் ஏன் தங்கமானவங்கன்னு..!

இப்பவெல்லாம் அரசியல் விளையாட்டா போயிடுச்சு, விளையாட்டு அரசியலா போயிடுச்சு. இன்னமும் சொல்லப் போனா, அரசியல்ல விளையாட்டுத்தனம் ஜாஸ்தியாயிடுச்சு, விளையாட்டுத் துறைல அரசியல் அதிகமாயிடுச்சு. சரி, இந்த ஐபிஎல் சீசன்ல, நாம அரசியலையும் விளையாட்டையும் ஒட்டுக்கா சேர்த்து ரெண்டு அவார்ட கொடுத்துட்டுப் போவோம்.

யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு ஏலம் எடுத்து, இப்ப தெருக் கோடில நிற்கும் டெல்லி அணி உரிமையாளர்களுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால நம்பி ஓட்டு போட்டு இப்ப குழம்பிக் கிடக்கும் டெல்லி மக்கள் வழங்கும் ‘அமெரிக்க மாப்பிள்ளைன்னு போனியேடி’ விருது. கிரிக்கெட் கிரவுண்டுல 360 டிகிரியும் சுத்தி சுத்தி அடிக்கும் டிவில்லியர்ஸுக்கு, 360 டிகிரிலயும் உலகத்தை சுத்திய நம்ம பிரதமர் வழங்கும் ‘வரலாறு மிக முக்கியம் அமைச்சரே’ விருது.

‘டெல்லி டீம போட்டுத் தள்ளி ஆளா ஆயிட்டேன், நான் முன்ன போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்’னு டங்காமாரி போட்டு வரும் சென்னை அணியின் நெஹ்ராவுக்கு, அமித்ஷா வழங்கும் ‘என்னப்பா ரொம்ப செழிப்பா இருக்க போல’ விருது. ஆறு மேட்ச் ஆடியும் இன்னமும் 30 ரன்னுக்கு மேல போகாத மேக்ஸ்வெல்லுக்கு, ராகுல்காந்தியை வைத்துக்கொண்டு முழி பிதுங்கும் காங்கிரஸ் வழங்கும் ‘பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ விருது.

எவ்வளவு ரன் அடிச்சாலும் தோற்றுப் போகும் மும்பை அணிக்கு எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் தமிழக பாஜக வழங்கும் ‘போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு’ விருது. கொத்து கொத்தா சிக்ஸ் அடிக்கிற கெயிலு இப்ப ஒத்தை ஒத்தையா சிக்ஸ் அடிக்கிறத பார்த்து, சுப்ரமணியசாமி தரும் ‘இதுக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான்’ விருது. எல்லா டீமையும் இழுத்துப் போட்டு அடிக்கும் ராஜஸ்தான் டீமுக்கு, மொத்த ஐபிஎல் அணிகளும் சேர்ந்து தரும் ‘ஒரு ரூபா தரேன்... ஓடிப் போயிடு’ விருது.