Like and Share



அப்பா‘டெக்’கர்

ஆப்பிள் வாட்ச்சே அஃபிஷியலாக இந்தியாவுக்கு வந்தபாடில்லை. ஜூன், ஜூலை என ரிலீஸை இழுக்கிறார்கள். அதற்குள் அதற்கான தமிழ் ஆப்கள் ரெடி. முழுமூச்சாய் இந்த முயற்சியில் இறங்கியிருப்பது இளம் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

அவர் நடத்தி வரும் ‘கார்க்கி ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ சார்பில் ‘அகராதி’ எனும் பெயரில் ஒரு தமிழகராதியும் ‘குறள்’ எனும் திருக்குறள் ஆப்பும் ஆப்பிள் வாட்ச்சில் இயங்கத் தயாராகிவிட்டன.

செல்போனை விடவும் ஆப்பிள் வாட்ச்சுக்கான ஆப்களில் 50 சதவீதம் சிறிய எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்பதால் இதன் வடிவமைப்பு சவாலாக இருந்ததாம். அகராதி ஆப்பில் 2.6 லட்சம் வேர்ச்சொற்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மதன் கார்க்கி. இப்போதைக்கு ஆப்பிள் ஸ்டோரில் ‘அகராதி’ இலவசம். ‘குறள்’ மட்டும் 60 ரூபாயாம்!

அண்ணே ஒரு விளம்பரம்...

மீன் பைத்தியம் பிடித்து அலைகிறது ஒரு பஞ்சாபி வாண்டு. பையன் ஸ்விம் பூட் போட்டபடியே தூங்குகிறான். சிப்பிகள், மீன்கள், அக்வாரியம் என அட்ராசிட்டி பண்ணுகிறான். ‘ஃபைண்டிங் நீமோ’வில் வரும் கில் கேரக்டர் மீதுள்ள அபிமானத்தில் தன் பேரையே குஷ்மீத் சிங் கில் என்று சொல்கிறான்.

அப்படிப்பட்ட மகனை கோவாவுக்கு பீச் ட்ரிப் அழைத்துப்போக டிக்கெட் புக் செய்கிறார் அப்பா. மகிழ்ச்சியில் திளைக்கிறான் கில். அந்நேரம் கோவாவில் புயல் அடிக்க, டிக்கெட் கேன்சல் ஆகிறது.

சோகத்தின் எல்லைக்கே பையன் போக, அப்போது, டிக்கெட்டை அன்கேன்சல் செய்து வேறு தேதியில் பயணிக்கலாம் என்ற தகவல் வருகிறது. ‘மேக் மை ட்ரிப்’பின் புதிய அன்கேன்சல் ஐடியாவுக்கான விளம்பரம்தான் என்றாலும் மேக்கிங்கில் மிரட்டுகிறார்கள். மூன்றரை நிமிடத்தில் சிரிக்கவும் நெகிழவும் சிலாகிக்கவும் வைக்கிறது இந்த க்யூட் குறும்படம்!

வாட்ஸப் Wow..!!

அடிக்கடி தூங்குவது முதுமையைத் தவிர்க்கும், குறிப்பாக டிரைவிங் செய்யும்போது!
ஒரு குழந்தை இருந்தால் நீங்கள் பெற்றோர்; இரண்டு இருந்தால், சண்டைகளின்போது நீங்கள் நடுவர்!திருமண உறவில் இருவர்... ஒருவர் சொல்வது எப்போதும் சரி; இன்னொருத்தர் பெயர், கணவர்.புது யூனிஃபார்ம் தைத்த பிறகுதான் ஒரு குழந்தை மிக வேகமாக வளர்கிறது.

தவறான ஆட்சியாளர்கள், ஓட்டு போட வராத நல்ல குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.உலகத்தில் மிகச் சிறந்த குழந்தை ஒன்றே ஒன்றுதான். அது, ஒவ்வொரு அம்மாவுக்கும் அவரவர் பிள்ளை!உலகத்தில் மிகக் கச்சிதமான மனைவி, அடுத்த வீட்டுக்காரரின் மனைவி!

ஒரு போனின் கான்டாக்ட்ஸ் லிஸ்ட்டிலிருந்து புது போனுக்கும் மாற்றப்படும் பேறு பெற்றவர்களே உண்மையான நண்பர்கள்!தங்களைப் பார்த்து அடிக்கடி சிரித்துக் கொள்ளத் தெரியாதவர்கள், அந்த வாய்ப்பை அடுத்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறார்கள்.சேமிப்பு மிகச் சிறந்த பழக்கம், உங்களுக்காக உங்கள் பெற்றோர் சேர்த்து வைத்திருந்தால்!

யூத் டியூப்

பேட் மேன் மட்டும் சென்னையில் இருந்தால்...
அவன் பைக்கில் தினமும் அப்பாவை டிராப் செய்ய வேண்டியிருக்கும்...

முகத்தில் பெயின்ட் அடித்த அந்த ஜோக்கர் வில்லனைப் பார்த்து எல்லோரும் ‘ஹேப்பி ஹோலி’ சொல்வார்கள்...பைக்கில் போகும்போது எல்லோரும் பேட்மேனைப் பார்த்து ‘‘துப்பட்டா பத்திரம்’’ என்பார்கள்...
வில்லனை பேட்மேன் விசாரித்துக்கொண்டிருக்கும்போது டாஸ்மாக் பையன் வந்து ஆர்டர் கேட்பான்...டிராஃபிக் போலீஸ் டிரங்க் அண்ட் டிரைவில் பேட்மேனை மடக்குவார்...

கடைசியில் பேட்மேனுக்கு ஏற்ற ஒரு கேட்வுமனாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்துவிடுவார்கள்.இந்த விசித்திர சிந்தனையை வீடியோவாக்கியிருக்கிறது Put Chutney எனும் யூ டியூப் சேனல். எளிய ஆங்கிலத்தில் வரும் வசனங்கள் தமிழை விடவும் அதிகம் சிரிப்பு மூட்டுகின்றன. கிட்டத்தட்ட 20 லட்சம் ஹிட்ஸ் என்றால் சும்மாவா?