கலாமின் கனவு பத்திரிகை..!



பில்லியன் பீட்ஸ்... அப்துல் கலாம் நடத்திய இணைய பத்திரிகை இது. கலாமின் நேரடிப் பார்வையில், இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தது இந்தப் பத்திரிகை. இப்போது முதன்முறையாக அச்சு வடிவில் கலாம் குடும்பத்தினரே இதனைக் கொண்டு வருகிறார்கள். குழந்தைகள் தினத்தில் கலாமின் சகோதரர் மரைக்காயர் இந்தப் பத்திரிகையை வெளியிட... ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள... ஒரே நெகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான்!

‘‘கடந்த 2007ம் வருஷம் இந்த இணைய பத்திரிகையை கலாம் சார் கொச்சின்ல ஆரம்பிச்சார். இது அவருடைய கனவுகள்ல ஒண்ணு!’’ என நினைவுகளை நம்மிடம் பகிர்கிறார் கலாம் உதவியாளர் பொன்ராஜ்.



‘‘அவர் போய் வந்த நாடுகள்ல, ஊர்கள்ல பார்த்த, பேசிய நல்ல விஷயங்களையும், அனுபவங்களையும் மத்தவங்ககிட்ட பகிர இப்படியொரு பத்திரிகை தேவைப்பட்டுச்சு. ஆனா, அதை மட்டுமே அவர் விரும்பலை. மத்தவங்களும் பத்திரிகையில பங்களிக்கணும்னு ஆசைப்பட்டார். தனி மனித சாதனைகள், அறிவியல் ஆய்வுகள், விஞ்ஞானம், விவசாயிகளின் வெற்றிக் கதைகள்... இப்படி எல்லாத்துக்கும் இடம் கொடுத்தார். எதையெல்லாம் அவர் சாதனைனு நினைச்சாரோ, எதையெல்லாம் மக்களுக்கு கொடுக்கணும்னு அவருக்குத் தோணுச்சோ அதையெல்லாம் அவரே வாசிச்சு, எடிட் பண்ணி வெளியிட்டார். லட்சக்கணக்கானவர்கள் இந்த இணையப் பத்திரிகையை தொடர்ந்து பார்த்துட்டு வந்தாங்க.

அவர் மறைஞ்ச பிறகு, நான் ஃபேஸ்புக்ல ‘கலாம் பில்லியன் பீட்ஸ்’னு ஒரு பக்கத்தை உருவாக்கி நடத்துறேன். அதுல, நிறைய பேர் எழுதுறாங்க. அந்த எழுத்துக்கள்ல சிறப்பா இருக்கிற விஷயங்களை மட்டும் கலாம் வெப்சைட்ல போடுறேன். தினமும் பத்து பேராவது அதில் பங்களிப்பு செய்றாங்க. அவர் ஆசைப்பட்ட மாதிரியே இளைஞர்கள் உத்வேகமா வொர்க் பண்றதைப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கு. அப்போ எங்களுக்குப் பிரின்ட் பண்ண டைம் இல்ல. இப்போ, அவர் குடும்பம் அச்சு வடிவுல இதைக் கொண்டு வர்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!’’ என்கிறார் பொன்ராஜ் உற்சாகமான குரலில்!  



‘‘கலாம் தாத்தா இருக்கிற வரைக்கும் நேரடியா மாணவர்களை சந்திச்சு, நிறைய விஷயங்களைப் பேசினாங்க. எல்லாருக்கும் ஒரு உந்துசக்தியா இருந்தாங்க. இப்போ அவங்க நம்மகிட்ட இல்லை. ஆனா, இந்தப் பணிகளெல்லாம் தொடரணும்ங்கிறது தாத்தாவோட ஆசை. அதை நாங்க இப்போ பண்ணிட்டு இருக்கோம். தாத்தாவுக்கு மாணவர்கள்னா ரொம்ப பிடிக்கும். அதனால அவங்ககிட்ட இருந்தே ஆரம்பிச்சிருக்கோம்’’ என உருகுகிறார் கலாமின் பேரன் சலீம்.

‘‘இந்தப் பத்திரிகையோட நோக்கம் தேசிய வளர்ச்சியாதான் இருக்கும். டேப்லாய்டு சைஸ்ல நாலே பக்கம்தான். இதுல, தேசிய தலைவர்கள், பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், விண்வெளித் துறையில இருக்கிறவங்கனு எல்லார்கிட்டயும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமான விஷயங்களை கலெக்ட் பண்ணி போடப் போறோம். அப்புறம், பொதுமக்களும் இதில் பங்களிக்கலாம். எங்க இ-மெயில்க்கு கட்டுரை அனுப்பினா போதும். அதில், சிறந்ததைத் தேர்ந்தெடுத்து பிரின்ட்ல கொண்டு வருவோம்.

இதன் இ-பேப்பரை ‘houseofkalam.org’ வெப்சைட்லயும் படிக்கலாம். 2016 ஜனவரி 1ல் இருந்து இது தொடர்ந்து வெளிவரும். முதல்ல, இந்தியாவுல உள்ள எல்லா ஸ்கூலுக்கும் ஆங்கிலப் பதிப்பை இலவசமா அனுப்பப் போறோம். அடுத்து தமிழ்லயும் கொண்டு வர்ற ஐடியா இருக்கு. இனி கலாம் தாத்தா, பத்திரிகை வழியா மாணவர்கள்கிட்ட பேசப் போறாங்க’’ - மெல்லிய புன்னகையோடு சந்தோஷமாக முடிக்கிறார் சலீம்!

"இனி கலாம் தாத்தா, பத்திரிகை வழியா மாணவர்கள்கிட்ட பேசப் போறாங்க!"

- பேராச்சி கண்ணன்
படங்கள்: சத்யராஜ்