வேன்



கீர்த்தி

‘‘ஏங்க... மணி ஏழே முக்கால் ஆகப் போகுது... குழந்தைகளை வேனில் ஏத்தி விட்டுட்டு வந்திடுங்க!’’ - சொன்ன மனைவி செளம்யா மீது சற்று கோபம் வந்தது திவாகருக்கு.
‘‘ஏன் செளம்யா... எட்டரை மணிக்கு புறப்பட்டா கூட பசங்க ஸ்கூலுக்கு சரியான நேரத்துக்குப் போயிடலாம். இந்த வேன் டிரைவர் கணேசன் காலையில எட்டு மணிக்கே வந்து படுத்தறார். பசங்க அடிச்சு பிடிச்சுக்கிட்டு கிளம்ப வேண்டியிருக்கு! அவர் சீக்கிரமே குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு, அவரோட மெக்கானிக் கடையைத் திறக்கப் போகணும். அவரோட சுயநலத்துக்காக நாம சங்கடப்படணுமா? எட்டரைக்கு புறப்படுற வேன் எதுவும் இல்லையா?’’



‘‘இருக்குங்க! ஆனா, நான் யோசனை பண்ணித்தான் இந்த வேனை தேர்ந்தெடுத்தேன்!’’
‘‘என்ன யோசிச்சுட்டே?’’ - எரிச்சலோடு கேட்டான் திவாகர்.
‘‘அரை மணி நேரம் சீக்கிரமா புறப்படறதுக்கு நீங்க சங்கடப்படறீங்க. ஆனா, இதனாலதான் நம்ம குழந்தைங்க சீக்கிரமா எழுந்திருக்கிறாங்க. அதுமட்டுமில்ல, சீக்கிரமே புறப்பட்டுப் போனா பார்த்து நிதானமா வேனை ஓட்டிட்டுப் போகலாம். இதுல எல்லாருக்கும் பாதுகாப்புதானே. கூடவே, கணேசன் அவரோட சொந்தக் குழந்தைகளையும் இதே வேனில்தான் கூட்டிட்டு போறார். அப்போ எவ்வளவு கவனமா கூட்டிட்டு போவார்... சொல்லுங்க!’’ - செளம்யா சொல்ல, மனத் திருப்தியுடன் சட்டையை எடுத்துப் போட்டான் திவாகர்.