உப்பு கருவாடு விமர்சனம்



சினிமாவில் ஜெயிப்பதற்குப் போராடும் இளைய இயக்குநரின் கதையே ‘உப்புகருவாடு’. முதல் படம் வெளியாகவில்லை, இரண்டாவது படம் பாதியில் நிற்கிறது. தன் காதலியை ஹீரோயின் ஆக்கி, மூன்றாவது படத்தையே முதல் படமாக உருவாக்க நினைக்கிறார் கருணாகரன். ஆனால், புரொடியூஸரின் கண்டிஷன், தன் மகளை கதாநாயகி ஆக்குவது. கருணாகரனின் கனவு என்ன ஆனது? முழுப் படத்தை அவர் எடுத்து முடித்தாரா? என்பதுதான் மீதிக் கதை.

போன தடவை ‘கௌரவக் கொலைகள்’ என்ற சென்சிடிவ் பிரச்னையை கையில் எடுத்து லைக்ஸ் வாங்கினாலும் கையைச் சுட்டுக்கொண்ட ராதாமோகன், இந்தத் தடவை லைட் ஹார்ட் காமெடியை அள்ளியிருக்கிறார். இந்தக் காலத்து சினிமா பயணப்படுகிற திசையை ஒரு டாபிக்கல் காமெடியில் முடிச்சிட்டு, அதிலேயே அதகளம் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவின் வேடிக்கைகளைக் கிள்ளிச் சொன்ன வகையிலும், சாதாரணமான... இன்னும் நடு வழியில் நிற்கும் நடிகர்களிடமே நல்ல நடிப்பைக் கொண்டு வந்த வகையிலும் ராதாமோகனுக்கு பாராட்டுப் பூங்கொத்து!

கொஞ்சம் அடர்த்தியும், அழுத்தமான பெர்ஃபார்மன்ஸும் தேவைப்படும் ஹீரோவாக கருணாகரன் தேறிவிட்டார். முழுப் படத்திலும் அலட்டிக்கொள்ளாமல் ஒரு சினிமாவை வடிவிற்குள் கொண்டு வரும் முயற்சியில் நல்ல அக்கறைப் பாங்குடனான நடிப்பு. கருணாகரனின் உதவி இயக்குநர்கள், மற்றும் நண்பர்களாக சாம்ஸ், மயில்சாமி, நாராயணன், டவுட் செந்தில் எல்லோரும் கலகலப்பு! ‘கருணாகரன் அன் கோ’வை வைத்துக்கொண்டு படம் தயாரிக்க முன்வரும் எம்.எஸ்.பாஸ்கர், நுணுக்கமான உடல்மொழியில் ஒரு தந்தையின் உணர்வுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.



‘மொழி’, ‘பயணம்’ படங்களில் பளிச் வசனத்தில் விஜியோடு ஈர்த்த ராதாமோகன், இந்தத் தடவை பொன்.பார்த்திபனோடு களம் இறங்கியிருக்கிறார். விஜிக்கு சற்றும் குறைவில்லாத வசனங்களில் அவ்வளவு ஈர்ப்பு... சுவாரஸ்யம்... துடிப்பு! தமிழ் சினிமாவின் நகைப்புக்குரிய இடங்களை நுணுக்கமான கிண்டலில் கிள்ளுகிறார் பார்த்திபன்.

ராதாமோகனின் படங்களில் மட்டுமே தலைகாட்டும் குமரவேல், தேர்ந்த நடிப்பு. ராதாமோகனைத் தவிர யாரும் அவரைப் பயன்படுத்த மாட்டேன் என்று நினைத்திருப்பது என்ன பிடிவாதமோ! பொய் சாமியாராக வரும் சரவணன், எதிர்பாராத கலகலப்பு. சாமியாராக இருந்துகொண்டே நடிப்பில் காலூன்ற நினைக்கும் இடங்களிலும், ‘தேவர் மகன்’ சிவாஜி, ‘மௌன ராகம்’ கார்த்திக் மேனரிசங்கள் காட்டும் இடங்களிலும் தியேட்டர் கலகலக்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் உதவியாளராக இருந்து படத்திற்கு சீன் சொல்லும் குமரவேல், ‘அடுத்து கதையில் என்ன திருத்தம் சொல்லப் போகிறார்’ என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்.

பாஸ்கரின் மகளாக, கதாநாயகி ரோலுக்கு என்ட்ரி ஆகும் நந்திதா, சுவாரஸ்யம். ஆனாலும் படத்திற்குள் அவர் நடிக்கும் காட்சிகள் அதிகமாவதால் சலிப்பு. இறுதியில் அந்த எதிர்பாராத ட்விஸ்ட் ஆச்சரியம். திரும்பத் திரும்ப திரைப்படச் சூழல்களிலேயே சுற்றி வருவது கொஞ்சம் தலை சுற்றல்! ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி கவனம் ஈர்க்கிறார். மீன்பிடி இடங்களின் மொத்த சுறு சுறுப்பையும் பாடல் காட்சியில் அள்ளித் தருவது சிறப்பு. ஸ்டீவ்  வாட்ஸின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால், பின்னணியில் ஈர்க்கிறார்.
‘மொழி’ அளவிற்கு எதிர்பார்த்துவிடாமல் வந்தால் இந்த ‘உப்புகருவாடு’ நல்ல ஜாலி ரைடுதான்!

- குங்குமம் விமர்சனக் குழு