விடுமுறை



பாப்பனப்பட்டு வ.முருகன்

சென்னையை மூழ்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்கொண்டு அடைமழை பெய்தது. அலுவலகம் புறப்பட்டுக்கொண்டிருந்த அரசு ஊழியர் அன்பரசுவின் காதில் டி.வி செய்தி வந்து விழுந்தது. ‘கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’.

கேட்டதும் ஏகத்துக்கு எரிச்சலான அன்பரசு, ‘‘இது என்ன நியாயம்? மழைக்கு்னு விடுற லீவுல வாத்தியாருங்க வீட்டுக்குள்ளயே சொகுசா இருக்க, மத்தவங்க  மழையில ஆபத்தான பயணம் செஞ்சு ஆபீஸுக்குப் போயே ஆகணுமா?’’ என்று மனைவியிடம் புலம்பித் தீர்த்துவிட்டார்.



‘‘அது அப்படி இல்லீங்க! நீங்க ஒரு வேலையை ஒரு வருஷத்துக்கு மேலயும் இழுத்தடிச்சி முடிச்சித் தரலாம். ஆனா, வாத்தியாருங்க ஒரு வருஷத்துக்குள்ள முடிக்கவேண்டிய போர்ஷன முடிச்சே ஆகணும்! அதேமாதிரி, உங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போனாலும் அந்த வேலைய இன்னொருத்தர்கிட்ட ஒப்படைச்சிட முடியும்.

ஆனா, வாத்தியார் வேல அப்படி இல்ல! கணக்கு வாத்தியார் லீவுன்னு அந்தப் பாடத்த தமிழ் வாத்தியாரால நடத்த முடியாது! இன்னொரு முக்கியமான ரீஸன், உங்க வேலை டிலே ஆனா ஒருத்தரோ, ரெண்டு பேரோதான் பாதிப்படைவாங்க. ஆனா, வாத்தியாருங்க வேலை தாமதமானா ஒரு தலைமுறையே பாதிப்படைஞ்சிடும்..!’’

மனைவியின் பேச்சிலிருந்த நியாயத்தை உணர்ந்து மறுபேச்சின்றி அலுவலகம் கிளம்பினார் அன்பரசு.