நியூஸ் வே



முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதி காக்கும் தமன்னா, இப்போது செம ஜாலி பொண்ணு. ‘தோழா’ ஷூட்டிங்கில் அவரின் குறும்புகள் பார்த்து யூனிட்டே வியக்கிறது.

‘வீட்டிலும் கோயிலிலும் உள்ள தங்க நகைகளை வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்’ என்ற நோக்கத்தில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட தங்க முதலீட்டுத் திட்டம் படு ஃப்ளாப். முதல் இரண்டு வாரத்தில் அந்தத் திட்டம் மூலம் இந்தியா முழுக்க சேகரிக்கப்பட்ட தங்கம் வெறும் 400 கிராம்தான்!

பெங்களூருவில் இருக்கும் ‘பிஸ்ட்ரோ க்ளேடோபியா’ என்ற ரெஸ்டாரன்ட் ரொம்பவே கலையுணர்வு கொண்டது. அங்கே நாம் காபி அருந்தும் பீங்கான் கோப்பையில் நாமே ஓவியங்கள் வரைந்து மகிழலாம். இப்போது ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக்கில் நடித்து வரும் ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா ஆகியோர் சமீபத்தில் இங்கே சென்று வந்திருக்கின்றனர். கோப்பையில் அழகான பெயின்ட்டிங்கும் வரைந்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.



கவர்னர் மாளிகை என்றால் ஆடம்பரம் இருக்கும்... அதற்காக இந்தளவுக்கா என புருவம் உயர்த்த வைத்துள்ளது பெங்களூரு. அங்குள்ள கவர்னர் மாளிகையில் மசாஜ் செய்யும் மாஸ்டர்கள் மட்டுமே 5 பேர் இருக்கிறார்களாம். அவர்களுக்காக மாதம் 1 லட்ச ரூபாய் செலவு செய்யப்படுகிறது. 7 சலவையாளர்கள், 21 கிச்சன் வேலையாட்கள் என்றிருக்கும் அந்த மாளிகையில் மெயின் கேட்டில் இருந்து கடிதங்களையும் பேப்பர்களையும் எடுத்து வர சைக்கிளிஸ்ட் என்றொரு பணியாளரும் உண்டு!

ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள். ஆனால் ஆண்கள் வாங்குவது போல எல்லா துறைகளிலும் சம அளவு ஊதியம் பெண்களுக்கும் கிடைக்க இன்னும் 118 ஆண்டுகள் ஆகும் என்கிறது ஒரு கணக்கு!

காசி விஸ்வநாதர் கோயிலில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய டிரஸ் கோட் விதியின்படி பெண்கள் சேலை கட்டித்தான் உள்ளே வரவேண்டும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே ரூல்ஸ்தான் எனக் கடுமை காட்டுகிறது கோயில் நிர்வாகம்!

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என படங்கள் கைவசம் வைத்திருக்கும் சமந்தா சமூக சேவை பக்கம் திரும்பியிருக்கிறார். இந்த தீபாவளியைக் கூட ஆந்திராவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்ந்திருப்பவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு விசிட் அடிக்கிறாராம்!

திரைப்பயணத்தில் கொஞ்சம் டல்லாக இருந்தார் விஜய் சேதுபதி. இப்போது படங்களைத் தேர்வு செய்வதில் ரொம்பவும் கண்டிப்பு காட்டுகிறார். கொஞ்ச காலத்திற்கு இரண்டு ஹீரோ படங்களை செய்வதில்லை என முடிவு செய்துவிட்டார். அறிமுகம் செய்தவர் என்பதால் சீனு ராமசாமிக்கு மட்டும் மறுபடியும் கால்ஷீட்!



கேன்டீனை புதுப்பிப்பது, மீடியா அறை ஒன்று கட்டுவது என பாரதிய ஜனதா கட்சித் தலைமையகத்தில் கொஞ்சம் மாற்றம் செய்கிறார் அமித் ஷா. இது அவருக்கு அபாயச் சங்கு என்கின்றனர் சிலர். காரணம், இதற்கு முன் பி.ஜே.பி தலைவராக இருந்தவர்களில் யாரெல்லாம் தலைமையகத்தில் மாற்றங்கள் செய்தார்களோ அவர்கள் எல்லாம் பிரச்னைகளில் சிக்கினார்கள்... அல்லது தலைவர் பதவியை இழந்தார்கள். பங்காரு லக்ஷ்மண், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்காரி எனப் பலரும் இந்த துரதிர்ஷ்டத்துக்கு பலியானார்களாம். எந்த சிக்கலும் இல்லாமல் தலைவராக இருந்தவர் ராஜ்நாத் சிங்தான். அவர் தலைமையகத்தில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை!

விஜய்யின் ‘தெறி’, தெலுங்கில் ‘மெருடி’ என்ற பெயரில் வருகிறது. ‘‘சூப்பர் ஸ்டார் விஜய் களமிறங்கிவிட்டார்... ‘தெறி’ ஷூட்டிங்கில் இருக்கேன்!’’ என்று எமி ஜாக்சன் ட்வீட்டி இருப்பது லேட்டஸ்ட் பரபரப்பு. இதனால் விஜய்யின் அடுத்த படத்திலும் எமி கமிட் ஆகலாம் என்கிறது கோலிவுட்.

‘பசங்க 2’ படம் இம்மாதத் தொடக்கத்தில் வருவதாக இருந்தது. வெள்ளம் மற்றும் பரீட்சைகள் காரணமாக படத்தை டிசம்பர் 24ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். இதனால் இயக்குநர் பாண்டிராஜ் ‘கதகளி’ வேலையில் மூழ்கிவிட்டார்.



‘மிருதன்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்து ஜீவாவுடன் ‘ஜெமினி கணேசன்’ படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் லட்சுமி மேனன். இதற்கிடையே லட்சுவின் ஆர்வம் போட்டோகிராபி மீது திரும்பியுள்ளது. அஜித்துடன் ‘வேதாள’த்தில்நடித்தபோது, தொற்றிக் கொண்ட ஆர்வமாம்!

பீகார் மாநிலம் ஜஹானாபாத்தைச் சேர்ந்த அனில் ஷர்மாவுக்கு 53 வயது. நிதிஷ்குமாரின் தீவிர ஆதரவாளரான இவர், ஒவ்வொரு முறை நிதிஷ் முதல்வராகப் பொறுப்பேற்கும்போதும் தனது கை விரல்களில் ஒன்றை வெட்டிக்கொண்டு ஆதரவைக் காட்டுவார். இதுவரை நிதிஷ்குமார் மூன்று முறை முதல்வராகியிருக்கிறார்!

காஸ்ட்லிக்கெல்லாம் காஸ்ட்லி ரோல்ஸ் ராய்ஸ் காரை இதுவரை தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் மட்டும் வைத்திருந்தார்கள். இப்போது அதில் தனுஷும் சேர்ந்திருக்கிறார். 2 கோடியே 48 லட்சம் விலை கொண்ட இந்தக் காரை இந்தியாவுக்குக் கொண்டு வர வரியாக மட்டும் 2 கோடி செலுத்தியிருக்கிறார் தனுஷ்.



‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் மலையாளத்தில் மம்முட்டி நடித்து பெரிய வெற்றி. அதை அஜித் படமாக ரீமேக்க முயற்சி நடக்கிறது. இதற்கிடையில் சத்யஜோதி நிறுவனம் பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்து அஜித்தின் அடுத்த கால்ஷீட்டை வாங்கிவிட்டது. ரீமேக்கா, டைரக்டர் யார், பட்ஜெட் என்ன, ஹீரோயின் யார் - இப்படி எல்லாவற்றையும் அஜித் முடிவு செய்வார்.

சென்னையில் வீடெடுத்துத் தங்கியிருந்த ஓவியா, இப்போது கேரளாவிற்கே சென்றுவிட்டார். ‘‘அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அதனாலதான் கேரளா திரும்பிட்டேன்!’’ என ஃபீல் ஆகிறது பொண்ணு!

லண்டனில் இருக்கும் இந்தியத் தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள், கார்ல்டன் ஹவுஸ் டெரேஸ் என்ற பிரமாண்ட மாளிகையை 10 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கினர். பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த 67 ஆயிரம் சதுர அடி பங்களாவை புதுப்பித்தனர். ஆனாலும் இதில் அவர்கள் குடியேறவில்லை. பிசினஸ் சந்திப்புகளுக்கும், விருந்தினர்களைத் தங்க வைப்பதற்கும் மட்டுமே. இதில் பாதி சைஸில் இருக்கும் பழைய வீட்டில்தான் இருக்கின்றனர். காரணம், அது ராசியான வீடாம்! இந்தியாவின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபு போன்றவர்களுக்கு சொந்தமாக இருந்த பங்களா இந்த கார்ல்டன் ஹவுஸ்!

கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஒன்லைனை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார். இப்போது அலைபேசி அழைப்பிற்காகக் காத்திருக்கிறார்.

ஜெய்ப்பூர் ஆர்ட் ஃபேர்கலைக் கண்காட்சியில் ஒரு கிரியேட்டிவ் காட்சி... உயரப்பறக்கும் ஒரு வெப்பக்காற்று பலூனில் பிளாஸ்டிக் பசு மாடு ஒன்று தலை தொங்கிய நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை விளக்கியது. ஆனால், இது பசுவை இழிவுபடுத்துவதாக நினைத்து போலீஸ்காரர்கள் அதை அவசரமாகத் தரையிறக்கி இருக்கிறார்கள். உடனடியாக பொதுமக்கள் அதை வணங்கவும் செய்திருக்கிறார்கள். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவையே வருந்த வைத்த சம்பவம் இது. சகிப்பின்மைக்கு இன்னோர் எடுத்துக்காட்டு!