இயற்கைச் சீற்றங்களைக் குறைக்க இணையுமா உலகம்?



தமிழகத்தை நடுநடுங்க வைத்த பெருவெள்ளச் சேதங்கள் பற்றி ஒரு உலக மேடையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டியதாயிற்று! அது, 196 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட ‘பாரிஸ் பருவநிலை மாநாடு’. எல் நினோவின் விளைவால் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதையும், வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்து தீர்த்ததையும் மோடி இங்குதான் குறிப்பிட்டார்.

‘உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்புக்கும், இன்னொரு மூலையில் நிகழும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு இருக்கிறது’ என்கிறது கேயாஸ் தியரி. செழிப்பாக பயிர்கள் வளர வேண்டிய நேரத்தில் மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுவதற்கும், வெயில் அடிக்க வேண்டிய அறுவடைக் காலத்தில் பெரும் மழை பெய்து சீரழிப்பதற்கும் பருவநிலை மாற்றங்களே காரணம் என உலகம் கவலை கொள்கிறது. இப்படி புவி வெப்பமயமாதலைக் குறைப்பதற்காக ஐ.நா நடத்தும் இந்த மாநாடு, ‘உலக வரலாற்றில் மிக முக்கியமான சர்வதேச மாநாடு’ என குறிப்பிடப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து, இந்த உலகின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதே இந்த மாநாட்டின் இலக்கு! அது சாத்தியமாகுமா?

என்னதான் தமிழகம் பெருவெள்ளத்தில் தவித்தாலும், இந்த 2015ம் ஆண்டுதான் ‘உலகின் மிக சூடான வருடம்’ என கணிக்கப்படுகிறது. ‘புவி வெப்பமயமாதல்’ என ஒரு விஷயமே இல்லை என விஞ்ஞானிகளில் ஒரு கோஷ்டி அடித்துச் சொல்கிறது. என்றாலும் அதன் விளைவுகள் உலகத்தை பாதிக்கத் தவறவில்லை. பருவம் தப்பிப் பெய்யும் மழைகளும், எதிர்பாராத வறட்சிகளும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவைப் பெரிதும் பாதித்துள்ளன. ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனம், வளமான விளை நிலங்களை ஆக்கிரமிப்பது... கடல் நீர் மட்டம் உயர்வதால் பசிபிக் கடலின் குட்டி தீவு நாடுகள் பலவும் தங்கள் கரைகளை இழப்பது... மடகாஸ்கர், காங்கோ போன்ற நாடுகளில் காடுகள் காணாமல் போவது என விளைவுகள் அச்சுறுத்துவதாகவே உள்ளன.

சுற்றுச்சூழல் கேடுகளைக் குறைத்து, அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல உலகத்தை விட்டுச்செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ‘‘அதற்கான கடைசி வாய்ப்பாக இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னார். அடுத்த 25 ஆண்டுகளுக்குள் உலக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது இலக்கு. ‘அதற்கு ஒப்பந்தம் போட்டு, எல்லா நாடுகளையும் கட்டாயப்படுத்த வேண்டும்’ என அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டன.  
உலகில் கார்பன் டை ஆக்சைடு நச்சை வெளியேற்றி இந்த பூமியை வெப்பமாக்கும் விஷயத்தில் முதலிடத்தில் இருக்கிறது சீனா; அடுத்த இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கும் இதில் மூன்றாம் இடம். இதனால் இயல்பாகவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நெருக்கடி எழுந்துள்ளது. மாநாடு துவங்குவதற்கு முன்பே இந்தியாவை கடுமையாக விமர்சித்தது அமெரிக்கா. ‘‘யாரும் எங்களை மிரட்டிப் பணிய வைக்க முடியாது’’ என பதிலடி கொடுத்தார் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்.

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதில்தான் அதிக நச்சு வெளியேறுகிறது. சீனாவும் இந்தியாவும் இதைக் குறைக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் நெருக்குகின்றன. ஆனால், ‘‘இந்தியாவில் 30 கோடி மக்கள் இன்னமும் மின்சார வசதி பெறாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் தர வேண்டியது எங்கள் கடமை’’ என மாநாட்டில் சொன்ன பிரதமர் மோடி, இந்தியா இன்னும் பல அனல் மின் நிலையங்களை அமைக்கும் என சூசகமாகச் சொல்லிவிட்டார். சீனாவும் இந்த விஷயத்தில் பின்வாங்குவதாக இல்லை.



நச்சு வாயுக்களை வெளியேற்றி உலகை அசுத்தமாக்கும் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் முன்னணியில் இருந்தாலும், இந்த நாடுகளின் மக்கள்தொகையையும் கவனிக்க வேண்டும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் இவை. அமெரிக்காவின் மக்கள்தொகை இந்தியாவுடையதில் நான்கில் ஒரு பங்குதான். ஆனால் அது இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ‘உலகின் பணக்கார நாட்டு மக்களில் பத்து சதவீதம் பேரே, உலகின் 50 சதவீத நச்சுவாயு வெளியேற்றத்துக்குக் காரணமாக இருக்கிறார்கள்’ என்கிறது ஒரு ஆய்வு. ஆனாலும் பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.

இதற்கு மாற்றாக ஏழை நாடுகள் கேட்கும் ‘தொழில்நுட்ப பரிமாற்றம்’ என்ற விஷயத்தில் அவை இறங்கி வர மறுக்கின்றன. உதாரணமாக, நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதைவிட சூரிய சக்தியிலும் காற்றாலையிலும் மின்சாரம் தயாரிப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த விஷயம். ஆனால் இந்த இரண்டுக்குமே செலவு அதிகம். அதோடு, சூரிய மின்சக்தியை சேகரிக்கும் பேனல்களும் பேட்டரிகளும் அடிக்கடி பழுதாகி
விடும். இப்படி பழுதாகாத நல்ல பொருட்களைத் தயாரிக்கும் டெக்னாலஜி வளர்ந்த நாடுகளில் இருக்கிறது. அவை அந்த டெக்னாலஜியை கற்றுக்கொடுத்தால், ஏன் கஷ்டப்பட்டு நிலக்கரியை எரித்து நாம் மின்சாரம் தயாரிக்க வேண்டும்? ஆனால், ‘இதில் காப்புரிமை பிரச்னை இருக்கிறது’ என சொல்லி, வளர்ந்த நாடுகள் தர மறுப்பதுதான் சிக்கல். இதேபோல ஆப்ரிக்க நாடுகளில் காற்றாலை மின்சாரம் தயாரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முதலீடு செய்யவோ, இப்படிப்பட்ட உற்பத்திச் செலவைத் தாங்கவோ அந்த நாடுகளால் இயலவில்லை. அவை பண உதவி கேட்கின்றன. அதற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

வளர்ச்சித் திட்டங்களை விடுங்கள்... தனிநபர் மனநிலையில்கூட வித்தியாசம் இருக்கிறது. பணக்கார நாட்டு மக்களின் வாழ்க்கை முறையே அதிக நச்சுவாயுக்களை வெளியிடுவதாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு இந்தியரைவிட அமெரிக்கக் குடிமகன் ஒருவர் 175 மடங்கு அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு இந்தச் சூழலைச் சிதைக்கிறார் என்கிறது ஒரு ஆய்வு. ஆனால் சொந்த நாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், வளரும் நாடுகளை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது அமெரிக்கா. எனினும், இப்படி சூழலைச் சிதைப்பதால் நாம் எங்கோ இருக்கிற அமெரிக்கர்களுக்கு மட்டுமில்லை, நம் சொந்த வீட்டினருக்கும் வாழத் தகுதியில்லாத இடமாக இந்த பூமியை ஆக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். அகமதாபாத் ஐ.ஐ.எம்.மைச் சேர்ந்த நிபுணர் அமித் கார்க் ஒரு கணக்கெடுப்பு செய்தார்.

அதன்படி, ‘உலகம் வெப்பமானதை சமாளித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கைச்சூழலை மாற்றிக்கொள்ள இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்யும் செலவு, சுமார் 6 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய். அத்தனை சைபர்களையும் போட்டுக் கணக்கிட்டுப் பார்த்தால் மூச்சே நின்றுவிடும்! இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இது மூன்றரை மடங்கு உயரும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

கடந்த கோடைக்காலம் வரை வியர்க்காத வீடு இந்த ஆண்டில் தாங்க முடியாதபடி மாறினால் ஒரு ஏ.சி. வாங்கி மாட்டி, நம் அறையைக் குளிரானதாகவும், இந்த பூமியை இன்னும் வெப்பமானதாகவும் மாற்றுகிறோம் அல்லவா? அது இந்த வகை செலவே! தேனியில் இருக்கும் ஒரு விவசாயி, தனது ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் தீர்ந்து போய், இன்னும் 20 அடி ஆழமாகத் தோண்டுகிறானே, அது இந்த வகை செலவு! நம் மொத்த வருமானத்தில் ஐந்து சதவீதம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சூழலுக்கு நம்மை மாற்றிக்கொள்வதற்காகவே இப்படிச் செலவிடுகிறோமாம். இது எவ்வளவு பெரிய வேதனை.

‘‘இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழந்தை பிறக்கும்போது ஒரு மரம் நடுகிறார்கள்’’ என பாரிஸ் மாநாட்டில் மோடி சொன்னார். அவர் சொன்னதைப் பொய்யாக்காமல் நிஜமாக்கினால் நம் செலவுகள் குறையும்!

"உலகம் வெப்பமானதை சமாளித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் வாழ்க்கைச்சூழலை  மாற்றிக்கொள்ள இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்யும் செலவு, சுமார் 6  லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய்!"

- அகஸ்டஸ்