நினைவோ ஒரு பறவை 6



நா.முத்துக்குமார் /  ஓவியங்கள்: மனோகர்

கல்யாணத் தேன் நிலா
மூத்தோர் சம்மதியின் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்!
காத்திருப்பேனோடி? - இது பார்
கன்னத்தில் முத்தம் ஒன்று!
- மகாகவி பாரதி

திருவிழா பார்ப்பது போல, தேர் பார்ப்பது போல, காலடியில் மண் சரியும் கடல் பார்ப்பது போல, சிறுவயதில் எங்களுக்குத் திருமணங்களுக்குச் செல்வதும் சந்தோஷமான ஒன்று. திருமணம் என்பது உறவினர்கள் ஒன்று கூடும் ஜமா. தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களும் ஒன்று கலக்கும் உற்சாக உற்சவம். ஞாபகங்களின் டிரங்குப் பெட்டியைத் திறக்கையில் சட்டென்று வெளிப்படும் ரச கற்பூர வாசனையின் கமகமா. தேக்கு மரக் கதவில் கட்டியிருக்கும் வெள்ளி மணிகள் காற்றில் ஆடும் கிண்கிணி. ஆணையும் பெண்ணையும் முன்வைத்து அனைவரும் இணையும் மானுட சங்கமம். ஒவ்வொரு திருமணத்தின்போதும் சொந்தக்காரர்கள் வீடு தேடி வந்து பாக்கு வெற்றிலையுடன் பத்திரிகை கொடுக்கும்போதே, அதை வாங்கும் அப்பாவின் விரல்கள் லேசாக நடுங்கத் தொடங்கும்.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, ‘‘ஏதாவது கல்யாணம் காட்சின்னா போட்டுட்டுப் போக இந்த வீட்டுல நகை நட்டு இருக்கா? எல்லாத்தையும் அடகு வெச்சாச்சி! எல்லோர் முன்னாடியும் எப்படி தலை காட்டுறது? நான் வரலை. நீங்க மட்டும் போயிட்டு வாங்க!’’ என்று வீட்டில் முணுமுணுக்க, அப்பா பீரோவைத் திறந்து அடகுக் கடை ரசீதுகளைத் தேடி எடுப்பார். பெரும்பாலும் மஞ்சள் அல்லது ரோஸ் வண்ணத்தில் இருக்கும் அந்த ‘கியான்லால் சந்த்’ அடகுக் கடை ரசீதுகளைப் பார்க்கும்போதெல்லாம் அப்பாவின் விரல்கள் மேலும் நடுங்கத் தொடங்கும்.



‘‘நாளைக்கு மீட்டுக்கலாம்!’’ என்று எல்லோருக்கும் கேட்கும்படி தனக்குத் தானே நம்பிக்கை ஏற்றிக் கொள்வார். அந்த நாளை என்பது ஜி.நாகராஜனின் நாவல் தலைப்பைப் போல ‘நாளை மற்றுமொரு நாளே.’ எனக்கென்னவோ ஜி.நாகராஜன் அப்பாவிற்காகவே அப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பாரோ என்று தோன்றும். ஏனென்றால் அப்பாவின் பேரும் நாகராஜன்தான்.

கல்யாணத்திற்கு முந்தைய நாள் காலையில் தயங்கித் தயங்கி அப்பா சொல்வார்... ‘‘நானும் எங்கெங்கோ பணம் கேட்டுப் பார்த்தேன், கெடைக்கலை! பக்கத்து வீட்டுல செயினோ, கம்மலோ இரவல் வாங்கிப் போட்டுட்டு வா! சீக்கிரம் மீட்டுடலாம்.’’
சமையலறையில் பாத்திரங்கள் சத்தமாக உருளும். என்ன செய்வது? இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டுமல்ல, கல்யாணத்தில் கலந்து கொள்வதையும்கூட நகைகள்தான் தீர்மானிக்கின்றன.

அந்த பாத்திர கோபம் அடுத்து என் பக்கம் திரும்பும். ‘‘தீபாவளி, பொங்கலுன்னு எடுக்குற புதுத்துணியை பெட்டியில வைடான்னா கேக்குறானா? தொரை டீக்கடைக்குப் போனாக் கூட புதுத்துணிதான் போட்டுட்டுப் போவாரு. போ! அந்தப் பழைய கட்டம் போட்ட சட்டையையும், சாயம் போன டிரவுசரையும் போட்டுட்டு வா! எல்லோரும் என்னைத்தான் குறை சொல்வாங்க!’’

நான் எதுவும் பேசாமல் மௌனமாக அதே பழைய கட்டம் போட்ட சட்டையையும், சாயம் போன டிரவுசரையும் போட்டுக்கொண்டு கிளம்புவேன். ஆயினும் தோழர்களே! ஆயிரம் வானவில்கள் வண்ணங்களால் குளிப்பாட்ட நான் கல்யாண மண்டபம் நுழைவேன். வாசலில் நின்று பன்னீர் தெளிக்கும் தாவணிப் பெண்களில் முறைப்பெண் மட்டும் தலைகுனிந்திருக்க, தூரத்து சகோதரிகள் சந்தனத்தையும், கற்கண்டு தட்டையும் நீட்டுவார்கள். ‘‘ஏன்... அவ கொடுக்க மாட்டாளா? கைல சுளுக்கா?’’ என்று நக்கலடித்து உள்ளே செல்கையில் தொடங்கும் கல்யாணக் கொண்டாட்டம்.



முழுதாய் பூத்த பூக்களை விட, பூப்பதற்கு முந்தைய கணத்தில் மொட்டின் இதழ்களுக்கு இருக்கும் அழகே தனி. உண்மையில் கல்யாணங்களை விட, கல்யாணத்திற்கு முந்தைய மாலைப் பொழுதே கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கின்றன.
அது மாப்பிள்ளை அழைப்போ, பெண் அழைப்போ... நூற்றாண்டுகளின் வௌவால் வாசம் படிந்த கோயில்களிலிருந்து ஜானவாச காரின் ஓரத்தில் அமர்ந்தோ, பெட்ரோ மாக்ஸ் வெளிச்சத்தில் நடராஜா சர்வீஸில் பயணித்தோ வந்த அந்த நாள் சந்தோஷங்கள் இப்போது கேட்டாலும் திரும்பி வாராதவை.

எல்லா கல்யாண வீடுகளின் மெல்லிசைக் கச்சேரிகளைப் போலவே வெள்ளை பேன்ட் - வெள்ளை சட்டை அணிந்து, நெற்றி முழுக்க விபூதி பூசிய ஒருவர் ‘பச்சைக்கிளி... முத்துச்சரம்...’ என்று டி.எம்.எஸ். குரலில் பாட, சுற்றிலும் ஒலிக்கும் கொலுசுகளின் தாளத்தில் நான் எம்.ஜி.ஆர். ஆகி, என்னைச் சுற்றி சரோஜாதேவிகள் நடமாடுவார்கள்.

பின்புக்கும் பின்பு எண்ணெய் வழிய வழிய, உடைந்த அப்பளங்கள் கூடைகளில் பயணிக்கும் பந்தியில் உண்டு முடித்து, அருகில் இருக்கும் திரையரங்குகளில் மாமாக்களுடனோ, சித்தப்பாக்களுடனோ ‘ரெண்டாம் ஆட்டம்’ பார்த்ததை எல்லாம் எப்படி மறக்க முடியும்? என் வாழ்வில் நான் பார்த்த ஆகச் சிறந்த படங்கள் அவை. ஏனெனில், அவை நினைவுகளுடன் கலந்தவை.

மண்டபத்து ஹாலிலோ, மொட்டை மாடியிலோ, கிடைத்த இடத்தில் கொஞ்சம் உறங்கி பவுடர் வாசமுடன் அதிகாலை முகூர்த்தம் தொடங்கும். மறுவீட்டு சீரும் முடிந்து, தலைக்கு மேல் ஓடுவதாக நடித்துக் கொண்டிருக்கும் மின்விசிறிகளின் கிறீச்சிடல்களின் ஊடே உறவினர்களுடன் பழைய கதை பேசிய காலங்கள் இன்று ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏதோ ஒரு பச்சைக்கிளியின் கழுத்திற்குள் ஒளிந்து விட்டன.

தேர்வு சமயங்களில் நான் கலந்துகொள்ளாத திருமண வீடுகளின் பந்தியிலிருந்து தனக்கு வைத்த பலகாரங்களை முந்தானையில் முடிந்து வீட்டிற்கு எடுத்து வந்து ஆயா ஆசையுடன் தின்னத் தரும். அந்த முந்தானையில் உடைந்தும், உதிர்ந்தும் இருந்தவை மெதுவடையோ, பாதுஷாவோ, லட்டோ அல்ல... ஆயாவின் அன்பு.

உறவினர்கள் திருமணங்கள் தவிர்த்து, கல்லூரிக் காலங்களில் நண்பர்களின் அண்ணனுக்கோ, அக்காவிற்கோ நடக்கும் திருமணங்களின் கேளிக்கைகள் வேறு விதமானவை. திருமணத்தில் பரிசளிப்பதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பால் குக்கரும், சுவர்க் கடிகாரமும் வாங்க ஆளாளுக்கு ஐந்தோ, பத்தோ நிதி திரட்ட அன்று நாங்கள் பட்ட பாடுகள்... அந்த அனுபவங்கள்தான் இன்றைய என் பாட்டுகள். இது தொடர்பாக இருபது வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...

வெட்கத்தை நிரப்பி
ஒரு கடிதம்
ஆருயிர் ஆனந்த்
வருத்தமும் வருத்த நிமித்தமுமாய்
இக்கடிதம்.
உன் தங்கை திருமணத்தில்
அந்த சம்பவம்
நடக்காமல் இருந்திருக்கலாம்.
பொதுவாகத் திருமணங்கள்
அதுவும்
வெளியூரில் எனில்
நண்பர்கள் நிலைமை
தண்ணீர் தெளித்த மாடு.
சாவகாசமாய் புரட்டுகையில்
வரிக்கட்டங்களில்
மனிதர்கள் சிறைப்பட்ட
எண்பது பக்க மொய் நோட்டில்
எங்கள் பெயர் இல்லாதது
உன்னை மேலும் வருத்தியிருக்கும்!
வீட்டில் பணம் வாங்கியிருந்தும்
எங்கள் மனத் தெளிவில்
கல்லெறிந்தது சுரேஷ்.
‘‘நாம வேலையா செய்றோம்,
ஸ்டூடன்ட்ஸ்தானே?’’
ஆகையால் தண்ணியடித்ேதாம்.
ஆம்லெட் உபயம்,
எனது மொய்ப் பணம்.
நீயே சொல்.
பாசி தேங்கிய நீரில்
கலந்து குடித்த
மெக்டொவல் பிராந்தியும்
மிளகாய்த்தூள் மிதக்கிற
கத்தரிக்காய் சாம்பாரும்
என்றாவது ஒத்துப் போகுமா?
கல்யாணப் பந்தியில்
குமட்டிய வாந்திக்கு
காரணம் இதுதான்.
நண்பா...
உனக்கு நாங்கள்
எந்த விதத்திலும் உதவவில்லை!
வாசலில் நின்று
பன்னீர் தெளித்திருக்கலாம்.
வியர்வையுடன்
அன்பும் வழிய
பந்தி பரிமாறியிருக்கலாம்.
குறைந்தபட்சம்
சீட்டாட்டம் தவிர்த்து
தாம்பூலப் பையில்
தேங்காயாவது நிரப்பியிருக்கலாம்!
எல்லாவற்றிற்கும் மேல்,
கேசவன் கேலி செய்தது
உனது அத்தைப் பெண்ணாமே?
மன்னிப்பிற்கு இல்லை இக்கடிதம்.
மன்னிக்க மாட்டாய், தெரியும்!
வீடு தேடி வந்து
உதைத்து விட்டுப் போ!

"திருமணம் என்பது உறவினர்கள் ஒன்று கூடும் ஜமா. தெரிந்த முகங்களும், தெரியாத  முகங்களும் ஒன்று கலக்கும் உற்சாக உற்சவம். ஞாபகங்களின் டிரங்குப்  பெட்டியைத் திறக்கையில் சட்டென்று வெளிப்படும் ரச கற்பூர வாசனையின்  கமகமா."

"என்ன செய்வது? இங்கு பெரும்பாலும் கல்யாணத்தை மட்டுமல்ல, கல்யாணத்தில் கலந்துகொள்வதையும்கூட நகைகள்தான்
தீர்மானிக்கின்றன."

(பறக்கலாம்...)