ரஜினி விஜய் தோற்கலையா?



பிரகாஷ்ராஜ்

பேட்டி என்ற பதம் பிரகாஷ்ராஜுடனான சந்திப்புகளுக்குப் பொருந்தாது. தன்மையான நண்பருடனான உரையாடலாகவே ஒவ்வொரு சந்திப்பும் நினைவில் நிற்கும். டி.வி சேனலில் மழை பற்றிய செய்திகளை கவலையுடன் கவனித்துக்கொண்டே இருப்பவர் முகத்தில் இனிமையின் சுவடுகள் இல்லை. மழையிலிருந்தே தொடங்குகிறது பேச்சு...

‘‘ஏரி இருந்த இடங்களில் வீடு கட்டினால் வேற எப்படியிருக்கும்! மழை பெய்தா அது இஷ்டத்திற்குத்தான் பெய்யும். அதை அதோட இடத்தில் சேர விடணும். இந்த மழைக்குத் தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா எப்படி? செய்யிறதையும் செய்துட்டு இந்த மழையால் மக்களுக்குக் கஷ்டம்னு பேசிட்டு இருக்கோம். நாம் என்ன தப்பு செய்தோம்னு நினைச்சுப் பார்க்கிறதே இல்லை. மழை போற பாதையெல்லாம் சிமென்ட் போட்டு மூடி வச்சிட்டு அழுது தவிச்சா எப்படி?’’ புன்னகைக்கிறார் பிரகாஷ்ராஜ்.

‘‘என்ன திடீரென்று நிறைய படங்களில் நடிக்க ஆரம்பிச்சிட்டீங்க?’’

‘‘எல்லாமே செய்வோம். நல்ல படங்களா தேர்ந்தெடுக்கிறது ஒரு காலகட்டம். ஆறு மொழிகள் களம் என்பதால் தேர்ந்தெடுக்க முடியுது. திடீர்னு மணி சார் கூப்பிட்டு ‘ஓகே கண்மணி’ அமைஞ்சது. பிரியதர்ஷனின் அருமையான படம் ஒண்ணு வந்திருக்கு. ‘காஞ்சிவரத்தில்’ நமக்கு விருது வாங்கிக் கொடுத்தவராச்சே... மறக்க முடியுமா! கமல் நம்மை நம்பி ‘தூங்காவனத்’தில் இடம் கொடுத்தார். அவங்க கூப்பிடுகிற நேரம்தான் நமக்கு அமையணும். அது நம்ம கையில  இல்லை. உதாரணமா மணிரத்னம்கிட்ட போய் ‘எனக்கு சான்ஸ் கொடுங்க’னு கேட்க முடியாது. அவருக்கே என்னை எப்பக் கூப்பிடணும்னு தெரியும். நடிகன்னா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும். அப்படியில்லன்னா கால வெள்ளத்தில அடிச்சிட்டுப் போயிடுற மாதிரி ஆகிடும்!’’



‘‘அடிபட்டாலும் நல்ல சினிமாவை தயாரிக்கிறதை மட்டும் இன்னும் விடலை...’’

‘‘அதிலிருந்து எப்படி நான் மாறுவேன்? அது என் அடையாளமாச்சே! எனக்குக் கிடைத்த புகழும், பொருளும், மரியாதையும், நம்பிக்கையும் அதுலதானே வந்தது. 20 ஆண்டு காலம் ஒரு மனுஷனை ஏன் தொடர்ந்து பார்க்கிறாங்க! அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் பண்ணக் கூடாது. அப்படிச் செய்தவங்க அசிங்கப்பட்டதையும், தொலைஞ்சு போனதையும் பார்த்திருக்கோம். நல்லா வரலைன்னா கூட விடுங்க, அந்த முயற்சியில் உண்மை இருக்கணும். வித்தியாசம் காட்டுவார்னு ஒரு நம்பிக்கையை தெரிஞ்சோ தெரியாமலோ வளர்த்து வச்சிருக்கேன். நல்ல ஒரு லைசென்ஸ் கொடுத்து வச்சிருக்காங்க. அதில் இதுவரைக்கும் புகார் கிடையாது. அதற்கு நடிகனுக்கு பசி, ஆர்வம், தேடல் இருக்கணும். எனக்கென்னவோ யாரா இருந்தாலும் தப்பு பண்ணினா சுழற்ற ஒரு சாட்டையை மக்கள் மறைச்சு வச்சிருக்காங்கனு தோணுது!’’

‘‘இன்னமும் வெகுஜன தயாரிப்புக்குத்தானே எதிர்பார்ப்பு இருக்கு...’’

‘‘அதுலயே எவ்வளவு பணம் வீணாகியிருக்கு! கணக்கு பார்த்தா ரஜினி, விஜய், சூர்யா படமெல்லாம் பார்க்காத தோல்வியா... படம் நல்லாயில்லைன்னா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடுறாங்களே. மக்கள்கிட்டயிருந்து ஒரு சின்ன மிரட்டல் இருந்துக்கிட்டே இருக்கே! வேற வழி இல்லை. இங்கே நல்லதும் இருக்கும்... கெட்டதும் இருக்கும். ஆர்ப்பாட்டமும் இருக்கும்... உங்களுக்குப் பிடிக்காததும் ஜெயிக்கும். ஆர்ப்பாட்டமா இருக்கிறதையே அடையாளமா வச்சிருக்கிறவங்க இருந்துக்கிட்டுத்தானே இருக்காங்க. அவங்களுக்குனு ஒரு மேடை, முயற்சி இருக்கே. ‘சின்ன பட்ஜெட்டில் எடுத்திருக்கேன்... பாருங்க’னு யாரிடமும் கெஞ்சிக் கேட்க முடியாது. மக்களுக்கு பிடிச்சாத்தான் அதைப் பார்ப்பாங்க. மக்களுக்கு பிடிக்காத படத்தை எடுத்துட்டா வருத்தப்படத்தான் வேணும்!’’

‘‘ஒரு படத்தை எப்படி எடுக்கணும்ங்கிற விஷுவல்... செய்நேர்த்தி இப்ப குறைஞ்சு போச்சே?’’

‘‘ஆமா, 100 படம் ரிலீசானால் 80 படங்களில் அது இல்லை. ஓரளவு தெரிஞ்சவங்க எல்லாம் சினிமாவுக்கு வந்து படம் எடுத்துடறாங்க. ஆனா, அதையும் சும்மா தூக்கிப் போட முடியாது. அவன் முயற்சியை எக்ஸ்பெரிமென்ட் மாதிரி கொஞ்சம் பாக்கத்தான் வேணும். எழுதி, எழுதி... எடுத்து எடுத்து கத்துப்பாங்க. அப்படி அடிபடுவதற்கும் ஒரு இடம் தரணும். ஆபாசத்தையோ, வக்கிரத்தையோ எடுத்தா மட்டும் கண்டிக்கணும். ஒரு நல்ல விஷயம் தோல்வி அடையும்போது அதை பாடம்னு சொல்லணும். ஆனால், இளைஞர்கள் வாசிக்கணும். அப்டேட்ஸ் வேணும். வாசிக்கிறது உண்மையா இருந்தால் நிக்கலாம். இப்பவெல்லாம் வளர்ச்சி பொறுப்பா வந்தால்தான் வளர்ச்சி!’’



‘‘எந்த இடையூறும், சமரசமும் இல்லாமல் தமிழ் சினிமா எடுக்க முடியுமா?’’

‘‘இந்தியாவில் இல்லை, உலகத்தின் எந்த மூலையிலும் அப்படி ஒரு படம் எடுக்க முடியாது. பிஸினஸ் சம்பந்தப்பட்டதால் இந்தத் தொந்தரவு இருக்கும். ஒரு சின்ன பட்ஜெட்டுக்கு நல்ல நடிகன் கிடைக்கிறது கஷ்டமா இருக்கும். விரும்பிய நடிகனுக்கு சம்பளம் ஏறியிருக்கும், டேட்ஸ் கிடைக்காது. இங்கே ஒரு தடவை சம்பளம் ஃபிக்ஸ் ஆகிட்டா அதிலிருந்து இறங்குவது கஷ்டம். கௌரவம், அது இதுனு நிறைய விஷயம் இருக்கு. நான் பிடிச்சுப் போய் சம்பளம் கம்மி பண்ணியிருக்கேன். சிறுவர் படம்னா ஓடோடிப் போய் நடிச்சிருக்கேன். சிலரை வாழ வைக்க வேண்டிய அவசியமும் இருக்கு. நானே எங்கோ சில நல்ல படங்களைத் தவற விட்டதை உணர்ந்திருக்கேன்.

குறைவா சம்பளம் வாங்கிட்டு, டேட்ஸ் கவலைப்படாம கொடுத்திட்டு அதில் கொஞ்சம் ஏமாற்றமும் நடந்திருக்கு. என் ஜட்ஜ்மென்ட் தவறினதை நான் புத்தி கொள்முதல் மாதிரிதான் எடுத்துக்குவேன். மக்கள் ரசனை மாறிப்போச்சுன்னு பெரிசா கவலைப்பட்டுக்க வேண்டாம். இங்கே எல்லாத்துக்கும் இடம் இருக்கு. ஒரு நல்ல சினிமா, கெட்ட சினிமானு முடிவு செய்கிற பட்சத்தில் அதுவே தராசு ஆகிடும். எது வேணுமோ அதை ஜனங்கள் எடுத்துக்கட்டும். ஒவ்வொண்ணுக்கும் மக்களை குறை சொல்லிட்டே இருக்கக் கூடாது. நானே பத்து வருஷத்திற்கு முன்னாடியிருந்த பிரகாஷ் இல்லை. அப்பப்போ  களை எடுத்திட்டு, பக்குவமாகி வந்திருக்கேன். பழைய பிரகாஷ்ராஜை வச்சிக்கிட்டு காலம் தள்ள முடியாது. அதுக்குப் பிறகு இன்னும் பக்குவமான இன்னொரு பிறவி எடுத்துத்தான் வந்திருக்கேன்!’’

‘‘கிராமத்தை தத்து எடுத்து இருக்கீங்களே..?’’

‘‘எங்கோ ஒரு இடத்தில் நாம் திருப்பிக் கொடுக்கிற நேரம் வந்தாச்சுனு தெரிஞ்சிக்கிட்டேன். கொஞ்சம் கடன் இருக்கு. அது சினிமாவே தந்தது. அதுவே திருப்பிக் கொடுத்திடும். எந்த நாட்டுக்குப் போனாலும், எந்த இடத்திற்குப் போனாலும் ஜனங்கள் என்னை பார்த்துக்கிற அக்கறை, அந்த கனிவான சிரிப்பு, எதையும் வாங்க விடாமல் உபசரிக்கிற அழகு, கை குலுக்கல்... இதுக்கெல்லாம் ஏதாவது திருப்பித் தரணும். 130 ரூபாய் மட்டும் வச்சிக்கிட்டு சென்னைக்கு வந்து கிடைச்சது எல்லாம் அதிகம்தானே! உலகத்தையே பறவை மாதிரி வலம் வந்தால் பத்தாது, கீழே குனிஞ்சு பார்க்கணும். அப்படிப் பார்த்ததால் வந்த பாடம்தான் இது. தத்து எடுத்ததை பிச்சை போடுறேன்னு நினைச்சா அது பாவம். எனக்குக் கிடைத்த நன்மை எல்லோருக்கும் கிடைக்கணும். கடனைத் தீர்க்கணுமே! இதில் பெருமைக்கு வேலை கிடையாது... கடமை!’’

‘‘வாழ்க்கை எப்படியிருக்கு..?’’

‘‘நேத்தை விட இன்னிக்கு அழகாயிருக்கு. ரிலேஷன்ஷிப்பை நல்லா வச்சிருக்கிறது நம்மோட தேவை. அது உயிரோட இருக்கிற நதி. அதில் எப்பவும் வெள்ளம் ஓடிக்கிட்டே இருக்கணும். பெரிய பொண்ணு ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கிறா. ஃபாரீன்ல இருந்து நாள் தவறாமல் பேசுறா. அவ நடிகையா இருந்திருந்தா எனக்கு பாரமா கூட இருந்திருப்பா. அதைத் தாண்டி அவளுக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கிட்டு சந்தோஷமா இருக்கா. நடிப்புன்னா விலாவாரியா பேசுவேன். எனக்கு மியூசிக், பெயின்டிங் பத்தி சொல்லிக் கொடுக்கிற டீச்சர் மாதிரி ஆகிட்டா. மேகனா பத்தாவது படிக்கிறா. எதை செலக்ட் பண்ணணும்ங்கிற இடத்தில் வந்து நிற்குது குழந்தை. விருப்பமானதை எடுத்துக்கட்டும். அவ வானமும் பெரிசா இருக்கட்டும். மேகனா பறக்கிற நேரமும் அழகாவே இருக்கும்!’’

"யாரா இருந்தாலும் தப்பு பண்ணினா சுழற்ற ஒரு சாட்டையை மக்கள் மறைச்சு வச்சிருக்காங்கனு தோணுது!"

- நா.கதிர்வேலன்
படங்கள்: ஆர்.சி.எஸ்