கைம்மண் அளவு



நாஞ்சில் நாடன் : ஓவியம்: மருது

இந்த நாட்டில் அரசியல்காரர்கள் பாம்பணையில் பள்ளி கொண்ட திருமாலாக சகல சௌபாக்கியங்களுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். சினிமாக்காரர்களுக்கு குபேர கடாட்சம் பரிபூரணமாக இருக்கிறது. வணிகர்கள் வாரிக் கூட்டுகிறார்கள், வரம்பற்ற செல்வம். தொழில் முனைவோர் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி கார்களில் அமோகமாக வாக்கிங் போகிறார்கள். மருத்துவர்கள், பொறிஞர்கள் பூத்துக் குலுங்குகிறார்கள். தொழிலாள வர்க்கம் சிறுசிறு புலம்பல்களுடன் படகு கவிழ்ந்து போகாமல் துடுப்புப் போடுகிறார்கள். விவசாயி என்பவன் கடன், நட்டம், தோல்வி, வறுமை எனும் கொடிய நரகங்களில் வீழ்ந்து கிடக்கிறான். அதன் காரணங்கள் எவை என ஆத்மார்த்தமாக எவரேனும் ஆராய்ந்து பார்த்தோமா?

இந்தியத் திருநாட்டில் 65 விவசாயப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. எத்தனையோ விவசாய ஆய்வு மையங்கள் உண்டு. எத்தனை ஆயிரம் விவசாய விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள், முது முனைவர்கள், வெறும் முனைவர்கள், இளங்கலை - முதுகலைப் பட்டதாரிகள்? மற்றும் இந்திய விவசாயத்தை முன்னேற்றி எடுக்க என்றே கடவுளால் அனுப்பப்பட்டிருக்கும் பன்னாட்டு உற்பத்தி, விற்பனை, வணிக நிறுவனங்கள்?

மத்திய, மாநில அரசுகளால் ஆண்டுதோறும் விவசாய அபிவிருத்திக்கு என்று வழங்கப் பெறும் மானியங்கள் எத்தனை ஆயிரம் கோடிகள்? சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் விவசாயக் கடன்கள் எத்தனை ஆயிரம் கோடிகள்? செயற்கை உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும், விதைகளுக்கும், விவசாய உபகரணங்களுக்கும், விவசாயப் பொருட்களின் கொள்முதலுக்கும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியிருக்கும் மானியங்கள் இதுவரை எத்தனை கோடிகள்? இத்தனைக்கும் பிறகும் ஏன் இந்திய விவசாயி எழுந்து நடமாட முடியாமல் தரையோடு தரையாகக் கிடக்கிறான்? ஏன் இத்தனை அதிக அளவிலான தற்கொலைகள்? ஏன் குடும்பம் குடும்பமாக கூலி வேலைக்கு நகரம் நோக்கி இடம் பெயர்கிறான்?

ஆய்க்குடி பக்கம் கம்பிளி என்னும் ஊர். சுற்றிலும் விவசாய நிலங்களும் ஆநிரை மேய்த்தலும் கறவைகள் பின் செல்தலும். என் நண்பர் இசக்கிமுத்து சொந்த ஊர் அது. அவர் சீனாவில், குவைத்தில், எகிப்தில் பணிபுரிந்து தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பவர். தீபாவளிக்கு கம்பிளி வந்தவர், நேற்று தொலைபேசியில் சொன்னார். ‘‘எங்கூர்ல விவசாயி ஒருத்தரு காலம்பற பஸ்சுக்கு நிக்காரு... ‘வெடியால எங்க போறேரு? வயக்காட்ல வேல இல்லியா’ன்னு கேட்டேன். ‘நடவுக்கு வய மொழுக்கிப் போட்டிருக்கு... நடவுக் கூலிக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு... ஆள் வரமாட்டங்கு... சும்ம என்னுண்ணு வீட்ல கெடக்கது? கூலிக்குப் பெயின்ட் அடிக்கப் போறேன்’னு சொல்லுதாரு’’ என்றார்.

பெயின்டிங் வேலைக்குப் போவது குறைச்சல் என்று சொல்ல வரவில்லை. அவனுக்குச் செய்து தீராத ஆயிரம் வேலைகள் உண்டு. வெளியில் நின்று பார்ப்பவருக்கு அவை புலப்படா! ஒரு இல்லத்தரசிக்கு காலை ஆறு மணிக்குப் பால் வாங்குவது தொடங்கி இரவு பத்தரை மணிக்கு கேட் பூட்டுவது வரைக்கும் எத்தனை வேலைகளோ அத்தனை வேலைகள் விவசாயிக்கும் தினமும். அவனுக்கு இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிறு, தேசிய விடுமுறைகள் கிடையாது. CL, SL, PL இல்லை. மெகா சீரியல் அவனுக்கு என்னவென்றே தெரியாது.

வயலுக்குப் போகும்போது, சாலையில் கிடக்கும் ஒரு குப்பம் மாட்டுச் சாணியைப் பிசைந்த சப்பாத்தி மாவு போல் உருட்டி எடுத்துச் செல்பவன் உழவன்; வயலில் கிடக்கும் சிறு வெட்டாங்கல்லைத் தூக்கித் தூர வீசுபவன் உழவன்; பயிரின் ஊடே வளர்ந்து நிற்கும் கோரையைப் பிடுங்கித் தூர வீசுபவன் உழவன்; தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கண்மணி குணசேகரன், ேகாரை எனும் களையுடன் விவசாயியின் போராட்டத்தை ‘கோரை’ எனும் தலைப்பில் நாவலே எழுதியுள்ளார். நமக்குப் பொருட்டின்றித் தோன்றுகின்ற சின்னஞ்சிறு வேலைகளையும் பொறுப்பாகச் செய்கிறவன் உழவன். சமூகத் தீமைகளையும் அறமற்ற செயல்பாடுகளையும் களை என்று பார்ப்பது விவசாய மனோபாவம். களையப்பட வேண்டியவை களைகள்தானே!

எனக்குத் தோன்றுகிறது, ‘இந்த மனோபாவம்தான் அவனை ஈடேற முடியாமல் செய்கிறது’ என்று. ‘அம்மணங்குண்டி ராஜ்ஜியத்தில் கோமணம் உடுத்தவன் பைத்தியக்காரன்’ என்பார்கள். எல்லோரும் எவ்வழியிலேனும் பொருள் ஈட்ட ராப்பகலாய் முனையும் காலகட்டத்தில், வஞ்சனையும், சூதும், அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் அநியாயமும் அறியாத உழவன் உய்வது எங்ஙனம்? நானொரு விவசாயியின் மகன். 26 வயது வரை நானே விவசாயிதான். என் அனுபவங்கள் சார்ந்தும் எனக்கு சில தீர்மானங்கள் உண்டு. அதன் அடிப்படையில் நான் பேசுகிறேன், இந்த நாட்டில் விவசாயி வஞ்சிக்கப்பட்ட இனம். முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்த, நேரடியாக மக்கள் பயன்பெற்ற இரண்டு காரியங்கள் உண்டு. ஒன்று, மாட்டுவண்டி போகும் ஊர்களை எல்லாம் சிற்றுந்து மூலம் இணைத்தது. இரண்டு, உழவர் சந்தை. பன்னிரண்டு வயதிலிருந்து வடசேரி கனகமூலம் சந்தைக்குப் போய்ப் பழகியவன் நான். எனக்கு அது விருப்பமான விஷயம். கோவையின் முதல் உழவர் சந்தை ஆர்.எஸ்.புரம் கெளலி ப்ரொவுன் சாலையில் அமைந்தபோது, நீலிக்கோனாம் பாளையத்திலிருந்து திருச்சி சாலைக்கு நடந்து வந்து, ஒண்டிப்புதூர் - வடவள்ளி நகரப் பேருந்து பிடித்து, 15 கி.மீ பயணம் செய்து, ஞாயிறு தோறும் காய்கறி வாங்கப் போவேன்.



உழவர் சந்தையில் உட்கார்ந்திருக்கும் விவசாயியையும் வியாபாரியையும் பிரித்தறிய இயலும். மொழி, முகபாவம், தராசுத் தட்டு பிடிக்கும் விதம்... விவசாயி எனில் சொத்தைக் கத்தரிக்காய் கண்பட்டால் எடுத்துக் களைவான். சொத்தை, அழுகல், நசுங்கல் என அறிந்தும் வியாபாரி கண்டும் காணாமல் எடை போடுவான். விவசாயியிடம் வாங்கினால் ஒரு கிலோவில் நூறு கிராம் அதிகமாக இருக்கும். வியாபாரியிடம் நூறு கிராம் குறைவாக இருக்கும். விவசாயி வாழ்வானா, வியாபாரி வாழ்வானா? அண்மையில் கோவையில் சின்ன வெங்காயம் கிலோ அறுபது ரூபாய் விற்றது. பெரிய வெங்காயத்தின் பொடி ரகம் கிலோ 20 ரூபாய். என் வசிப்பிடத்தின் அருகே இருக்கும் வாரச் சந்தைக்குப் போனேன். வாரச் சந்தை என்பது, மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை நடக்கும். இரண்டு கிலோ சின்ன வெங்காயம் வாங்கினேன். மறுநாள் காலை, ஈரத்தைக் கொஞ்சம் உலர்த்தலாம், வெயில் முகம் காட்டலாம் என்று எடுத்தபோது தெரிந்தது, 20 சதமானம் அழுகல் என்பதும் 30 சதமானம் பொடி ரகப் பெரிய வெங்காயக் கலப்பு என்பதும்.

இதை விவசாயி ஒரு போதும் செய்ய மாட்டான். நாம் அரசியல் தலைவர்களின் ஊழல் பற்றியும் அரசு ஊழியர்களின் ஊழல் பற்றியும் பொருமிக் கொண்டிருக்கிறோம். ஒருவன் கறி அறுத்து மற்றவன் தின்னும் சமூகமாக நாம் மாறிப் போனோம். ஆனால், அவ்விதம் செய்ய விவசாயியின் மனம் ஒவ்வாது, ஒரு போதும். இன்றைய உலக நியதியின்படி, அவன் பிழைக்கத் தெரியாதவன்; அல்லது வாழத் தெரியாதவன். சமூகமோ அவன் தலையில் மல்லி, மிளகாய், தேங்காய், உப்பு, புளி, இஞ்சி வைத்து சம்மந்தி அரைக்கிறது, மசிய. உழவர் சந்தைக்குப் போவதென்றால் சந்தை ஓயும் நேரத்தில் போவேன். சற்று மலிவாக வாங்கும் உத்தேசம்தான். மிச்சமான காய்கறிகளை, அடுத்த நாள் சரக்குடன் கலந்து தள்ளி விடலாம் என்று வியாபாரி கட்ட ஆரம்பிப்பான். விவசாயி, ஒன்றரைக் கிலோ கத்தரிக்காய்க்கு ‘பத்து ரூவா குடுங்கண்ணா’ என்று கூறி, சாக்கை உதறி மடிப்பான். மிகச் சிறிய தேங்காய்கள் பதின்மூன்று மிச்சம் இருந்தது விவசாயியிடம். ‘இருவத்தஞ்சு ரூவா குடுங்கண்ணா’ என்றார். கண்ணீர் மல்கியது எனக்கு. எப்படிக் கட்டுப்படியாகும்? குற்ற உணர்வோடு வீட்டுக்குச் சுமந்து சென்றேன்.

இத்தனை பேர் இந்த நாட்டில் அமோகமாகப் பிழைத்துத் தழைக்கும்போது, விவசாய இனம் மட்டும் ஏன் வஞ்சனைப் பால் சோறு உண்டு பாழாய்ப் போகிறது? அவனுக்குத் தெரியும், தனது பயிர் பச்சைகள் பூக்க, காய்க்க வீசும் காற்றுக்கு விலையில்லை; மானாவாரியாகப் பெய்யும் மழைக்கு விலையில்லை; காயும் பகலவன் கதிர்களுக்கு விலையில்லை. இயற்கை தனக்கு வழங்கும் நியாயத்தைச் சமூகத்துக்கு திருப்பிச் செய்ய நினைப்பது அவன் மரபு, பண்பு. ஆனால், அண்டா பாலைத் துளி விஷம் கெடுப்பது போல, வணிகப் பெருஞ் சமூகம் அவனுக்கு விஷத்தைத் திருப்பித் தருகிறது, கைமாறாக. எத்தனை இலக்கம் விவசாயத் தற்கொலைகள் கடந்த ஆண்டுகளில். நானும் ‘யாம் உண்பேம்’ என்றொரு சிறுகதை எழுதினேன் அந்தப் பின்புலத்தில்.

கடந்த விளைச்சலின்போது உளுந்து, பாசிப்பயிறு, துவரம் பருப்பு என இந்திய விவசாயியிடம் கொள்முதல் செய்யப்பட்ட விலை, முதல் தரத்துக்கு ஐம்பத்தைந்து ரூபாய் முதல் அறுபத்தைந்து ரூபாய் வரை. சந்தையின் உச்சப்பொழுதில் விற்கப்பட்ட விலை நீங்கள் அறிவீர்கள். பதுக்கல் என்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகம் என்கிறார்கள். கண் முன் நடப்பதைக் காணும் விவசாயியின் மனநிலை எப்படி இருக்கும்?

விவசாயி உயர்வுக்கு என்று போராட்டம் நடத்துபவர்கள் இங்கு நகர் வாழ் மனிதனை மட்டுமே கருத்தில் கொள்கிறார்களேயன்றி, விவசாயியைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. உலக நாடுகளில் உணவுக்கு மனிதன் தினமும் எவ்வளவு செலவு செய்கிறான், இந்தியன் எவ்வளவு செலவு செய்கிறான் என்ற கவனமும் நமக்கு இல்லை. ஒரு தரமான தேங்காய்க்கு விவசாயி ஐந்து ரூபாய் விலை பெறும்போது, கடையில் ஏன் அதை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்ற கேள்வியும் நமக்குக் கிடையாது. விவசாயியின் மரணத்தில் தரகர்களும் வணிகர்களும் வாழ்கிறார்கள் என்றால் அது மிகையான கூற்றென்று கருதுவீர்களா?

நகர்ப்புறங்களில் கூலி வேலைக்குச் செல்வோருக்கு, குறைந்தது தினத்துக்கு நானூறு ரூபாய் சம்பளம். கட்டிடத் தொழிலாளியின் கூலி தினமும் நானூறு ரூபாய் எனில், விவசாயக் கூலிக்கும் அந்த ஊதியம் வேண்டும் என்பதில் நியாயமுண்டு. அந்தக் கூலி தருவதற்கு, விவசாயியின் விளைபொருள்கள் அதற்கான விலையில் விற்கப்பட வேண்டும்தானே! நியாயமான விலை தேங்காய்க்கு இருபது ரூபாய் விவசாயிக்கு எனில் சந்தையில் நூறு ரூபாய்க்கு விற்பார்கள். அதில் நமக்கு சம்மதம் இருக்காது. உடனே நாம் விலைவாசி உயர்வுப் போராட்டம் நடத்துவோம், ஆனால், இடைத் தரகர்களை, வணிகர்களைக் கேள்வி கேட்க மாட்டோம். அல்லது ெகாப்பரை, எண்ணெய் என இறக்குமதி செய்வோம். சாகித்ய அகாதமி விருது பெற்று, 2011 பிப்ரவரியில் சக இந்திய எழுத்தாளர்கள் மத்தியில் புதுதில்லியில் நான் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டேன், ‘விவசாயிகள் வாழத் தகுதி இல்லாத நாடாக இந்தியா ஆகிவிட்டது’ என்று. பிறமொழி எழுத்தாளர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

இன்றைய இந்திய மோசடி வணிகச் சூழலில் விவசாயி வாழ ேவண்டுமானால், வணிக உலகம் புரியும் அத்தனை மாய்மாலங்களையும் அவனே செய்ய வேண்டும். பக்காப் படிக்கு முக்காப்படி அளக்க வேண்டும். சொத்தையையும் நசுங்கலையும் அழுகலையும் விற்க வேண்டும். முதல் தரம் என்று கூவி மூன்றாம் தரம் தள்ளி விட வேண்டும். கலப்படம் செய்ய வேண்டும். ‘எவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, நோய்ப்பட்டுச் செத்தால் என்ன, கை கால், மூளை செயலற்றுப் போனால் என்ன, தன் பை நிறைந்தால் போதும்’ என்று எண்ண வேண்டும்.

தீப்பேறு என்னவெனில், அது அவனால் இயலாது என்பதே! அதற்கான தொழில்நுட்பம் தெரியாது. வஞ்சனை தெரியாது. தரகருக்கும் வணிகருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அரசியல் ஆதரவும் இல்லை. வேறு என்னதான் செய்யலாம்? கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்யலாம். ஊடகங்கள் நிபுணர்களை அழைத்து விவாதங்கள் நடத்துவார்கள். அறிஞர்கள் கட்டுரை எழுதுவார்கள். அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யும். பிறகென்ன? மறுபடி அவர்களுக்கு வேறு செய்தி, வேறு விவாதம், வேறு ஆர்ப்பாட்டம்.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகத் துறைகள், பட்டிமண்டப மேடைகள், கருத்தரங்குகள் யாவும் உழவன் பெருமையைப் பேசும். அவனுக்காகக் கண்ணீர் சிந்தும். அனைத்து மத்திய, மாநில நிதிநிலை அறிக்கையிலும் ‘விவசாய மேம்பாடு’ பற்றி ஒரு பத்தி வாசிக்கப்படும். ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்றும் ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்றும் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றும் திருக்குறள் மேற்கோள் காட்டப்படும். வெட்டுப்படப் போகும் ஆட்டுக் கடாவைக் குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம், திருநீறு அப்பி சாமி சந்நிதானத்தில் நிப்பாட்டித் தழையைக் கடிக்க நீட்டுவதைப் போல, கொலைக் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது இந்திய விவசாயம். ‘விவசாயம் இல்லாவிட்டால் என்ன, இறக்குமதி செய்துகொள்ளலாம்’ என்று நினைக்கிறது அறிவுலகம். அல்லது உணவுப் பொருட்களை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் போலும்.

எதற்கு விவசாய நிலம், எதற்கு விவசாய நீர் ஆதாரங்கள், எதற்கு விவசாயி? அவன் செங்கல் சுமக்கவும் பெயின்ட் அடிக்கவும் சாலைப் பணிகளுக்கும் போவான். அவன் பெண்டிர் உணவு விடுதிகளில் தட்டுக் கழுவலாம். நமது அரசியல்காரர்களுக்கும் ‘கர்நாடகமே தண்ணீர் தா’, ‘ஆந்திரமே தண்ணீர் தா’, ‘கேரளமே தண்ணீர் தா’ என்று இரந்து கூவி தொண்டைப் புண் ஏற்படாது. நமக்குத் தாராளமாக செல்போன், வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக், வெப்சைட் சேவைகள் உண்டு. மெயிலில் ஆர்டர் செய்தால் ஃபிளாட் கதவைத் தட்டுவார்கள் பீட்சா, பர்கர், புரோட்டா, சப்பாத்தி, பிரியாணி, குளிர்பானங்கள் கொண்டு வந்து. நமது சந்ததியினர் அரிசி காய்க்கும் மரம், வாழைப்பழம் காய்க்கும் கொடி, ஆப்பிள் ஆரஞ்சுக் கிழங்குகள் காய்க்கும் புதர் எனத் தேடித் திரிவார்கள்.

அருங்காட்சிக் கூடங்களில், கண்ணாடிக் கூண்டுக்குள் கறுப்பாகக் குள்ளமாக இரு ஆண் பெண் உருவங்களை, இலை தழை ஆடைகளுடன் பழங்குடிகள் என்று நிறுத்தி வைத்திருப்பார்கள். எதிர்காலத்தில் வேட்டி உடுத்து, தலையில் துண்டு கட்டிய ஆணையும்... பிரா, பிளவுஸ் போடாத கண்டாங்கி உடுத்த பெண்ணையும் கையில் மண்வெட்டி, பன்னருவாள், கூடை எனக் கொடுத்து கண்ணாடிக் கூண்டுக்குள் நிறுத்தி ‘விவசாயி’ என எழுதி வைப்பார்கள். நமது சந்ததியினர் பார்த்து நிற்பார்கள், பிழைக்கத் தெரியாமல் அழிந்து போன இனம் என்று வியந்து!

"எல்லோரும் எவ்வழியிலேனும் பொருள் ஈட்ட ராப்பகலாய் முனையும் காலகட்டத்தில், வஞ்சனையும், சூதும், அடுத்தவன் வயிற்றில் அடிக்கும் அநியாயமும் அறியாத உழவன் உய்வது எங்ஙனம்?"

"ஒருவன் கறி அறுத்து மற்றவன் தின்னும் சமூகமாக நாம் மாறிப்போனோம். ஆனால், அவ்விதம் செய்ய விவசாயியின் மனம் ஒவ்வாது, ஒருபோதும்."

"ஒரு தரமான தேங்காய்க்கு விவசாயி ஐந்து  ரூபாய் விலை பெறும்போது, கடையில் ஏன் அதை இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்க  வேண்டும் என்ற கேள்வி நமக்குக் கிடையாது."

- கற்போம்...