வில்லன்



குமாரகிருஷ்ணன்

ஹாலில் அமர்ந்து எல்லோரும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
‘‘அப்பா! வில்லன்னா யாரு?’’ - எட்டு வயது ரமேஷ் கேட்டான்.
‘‘வில்லன் அப்படின்னா... கெட்டவன்!’’ என்றார் அப்பா.
‘‘கெட்டவன்னா?’’
‘‘ சட்டத்தை மதிக்காம, அரிவாள், துப்பாக்கி எல்லாம் வச்சுக்கிட்டு கடைத் தெருவில் சண்டை போட்டு, பொருள்களை எல்லாம் நாசம் செய்வானே... அவன்தான்!’’
‘‘அப்புறம்?’’
‘‘உடம்பைக் கெடுக்கிற சிகரெட் பிடிப்பான். அது மட்டுமில்ல... சாராயம் குடிச்சிட்டு உளறுவான். பழிக்குப்பழி வாங்குவான்!’’
‘‘அப்படியாப்பா?’’
‘‘ஆமாம் ரமேஷ்!’’



‘‘ஏம்பா... அவங்க ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டாங்களா?’’
‘‘காலேஜுக்குப் போகாம, பொண்ணுங்களைக் கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க... லுங்கியைத் தலையில் தூக்கிப் போட்டுக்கிட்டு, உள்ளாடை ெதரியுற மாதிரி அசிங்கமா ஆடுவாங்க!’’
‘‘ஐயையோ...’’
‘‘ஏங்க! சின்னப் பையன்கிட்ட இதையெல்லாமா சொல்வீங்க?’’ என்று தாய் கடிந்துகொண்டாள்.
‘‘குழந்தைக்கு நல்லதும் தெரியணும்; கெட்டதும் புரியணும் இல்லையா? அதான் சொன்னேன்!’’ என்றார் அப்பா.
ரமேஷ் அமைதியாகக் கேட்டான்... ‘‘ஆனா நீங்க சொன்னதை எல்லாம் இந்தப் படத்தில் ஹீரோதானே செய்யுறார்..?’’
பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார் அப்பா.