குறும்படங்களுக்கு ஒரு கலக்கல் மேடை!‘‘சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால் திறமை மட்டும் போதாது. ‘என்னிடம் திறமை இருக்கு’ என காண்பிக்க நல்ல ஸ்டேஜ் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அதனாலேயே திறமையான நிறைய பேர் முகவரி கிடைக்காமல் தொலைந்து போகிறார்கள். அந்தக் குறையைத் தீர்க்கவே இந்த இணையதளம்!’’ - பெருமிதத்துடன் சொல்கிறார்கள் நண்பர்கள் மகாராஜன் மற்றும் செல்வம்.
அப்படி என்ன அப்பாடக்கர் இணையதளம் இது?

www.shortfundly.com - இதுதான் அது. குறும்படங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் இணையதளம். திண்டுக்கல்லை அடுத்த வேலாம்பட்டி கிராமம் மகாராஜனின் சொந்த ஊர். ஐ.டி துறையில் பணியாற்றும் இவர், வெப் டெவலப்மென்ட்டில் கில்லாடி. பிழைப்பு நிமித்தம் சென்னை வாசம். செல்வம், சிவகாசி அருகே இருக்கும் ஆலங்குளம் கிராமத்துக்காரர். இணையதள விளம்பர நிபுணர். இவர்கள் இருவரையும் இணைத்திருப்பது, ‘ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்கிற ஆர்வமும் ‘லிங்க்டு இன்’ சோஷியல் நெட்வொர்க்கும்.
‘‘சினிமா ஒரு மாயக் கோட்டை.  இதில் ஜரிகைக் கனவுகளுடன் தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைய முயல்கிறார்கள்.  அதில் சிலர் மட்டுமே இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெறுகிறார்கள். ஜெயித்தால் லக்கு என சொல்லிவிட்டு நகரும் சமுதாயம், தோற்றுவிட்டால் மக்கு என ஏளனம் செய்யவும் தவறாது.

நகரத்து இளைஞர்களுக்கு சினிமாவில் நுழைய நிறைய வாய்ப்புகளும் வழிகளும் கிடைக்கின்றன. தனியார் தொலைக்காட்சிகள் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு மக்களின், தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் ஈர்க்கிறார்கள்... திரைப்பட வாய்ப்பையும் பெறுகிறார்கள். ஆனால் கிராமத்து இளைஞர்கள் தங்கள் திறமையை அடையாளப்படுத்திக்கொள்ள நல்ல களமில்லாமல் தவிப்பதை உணர்ந்திருக்கிறேன். பெரிய டி.வி போட்டிகளில் கலந்துகொள்வதெல்லாம் அவர்களுக்கு எட்டாக்கனி. அதற்கான வழியும் தெரியாது. இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் லிங்க்டு இன் நெட்வொர்க்கில் மகாராஜனை சந்தித்தேன். அவரது எண்ணமும் என் விருப்பமும் ஒன்றாக இருந்ததால் உடனே வேலையில் இறங்கிவிட்டோம்!’’ - தங்கள் இணையதளம் உருவான கதையை உற்சாகமாக விவரிக்கிறார் செல்வம்.‘‘சினிமாவுக்குள் நுழைய இன்றைக்கு விசிட்டிங் கார்டு குறும்படங்கள்தான். ஆர்வமுடன் குறும்படங்களை எடுக்கும் எல்லா இளைஞர்களுக்கும் அதை பொதுத்தளத்தில் வெளியிட்டு, தங்களின் படைப்புகளில் உள்ள நிறை குறைகளைத் தெரிந்துகொள்ள வழி இல்லை. அதற்கான தீர்வாகத்தான் இந்தத் தளத்தை உருவாக்கினோம். இந்தியாவில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் இந்தத் தளத்தில் குறும்படங்களைப் பதிவேற்ற முடியும். விசேஷம் என்னவென்றால், இதில் பதிவேற்றும்போதே படத்தின் அடிப்படைத் தகவல்களையும் இதில் பங்கேற்றுள்ள படைப்பாளிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் கேட்கும். படம் எந்த வகையைச் சேர்ந்தது என்கிற விவரங்களையும் அளிக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் பார்வையாளர்களுக்கு படைப்பாளியைப் பற்றிய விவரம் தெரிய வரும்.
 
பார்வையாளர்கள் படத்திற்கு தரும் மதிப்பெண், படம் பற்றிய அவர்களது விமர்சனங்களைப் பதிவிடவும் வசதிகள் உண்டு. படத்தைப் பற்றிய பொதுவான கருத்தாக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவு, லைட்டிங், வசனம் என படத்தின் எல்லா பிரிவுக்கும் மதிப்பெண் வழங்க வசதி செய்திருக்கிறோம். இதன் மூலம் ஒரு படைப்பாளிக்கு தனது படத்தில் எது பலம், எது பலவீனம், எதைச் சரிசெய்ய வேண்டும் என்கிற தெளிவும் வழிகாட்டுதலும் கிடைக்கும். அதோடு சினிமா துறையில் ஆர்வமுள்ள யாரும் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் இந்தத் தளத்தில் வழி செய்திருக்கிறோம்.

படைப்பாளிகள் குறும்பட விழாக்களுக்கும் போட்டிகளுக்கும் படத்தை அனுப்ப வேண்டி இருந்தால் இந்த தளத்தின் லிங்க்கை அனுப்பினாலே போதும். படத்தின் மொத்த விவரமும் விமர்சனமும் போட்டிகளை நடத்துபவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். இதுவரை இந்த இணைய தள உதவியுடன்  இரண்டு குறும்பட விழாக்களை நடத்தி இருக்கிறார்கள். காமெடி, ஹாரர், த்ரில்லர், அனிமேஷன், லவ் என 32 தலைப்புகளில் குறும்படங்கள் உள்ளன. 45 நிமிடங்களுக்குள் இருக்கும் படங்கள் மட்டுமே பதிவேற்ற முடியும். அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 22 ஆயிரம் குறும்படங்களும் தமிழில்  15 ஆயிரம் குறும்படங்களும் இந்தத் தளத்தில் பதிவேறி உள்ளன. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளார்கள்!’’ எனப் புள்ளிவிவரங்களையும் அடுக்குகிறார்
மகாராஜன்.

‘‘இந்த இணையதளம் மூலமாக நல்ல படைப்பாளிகள் வெளிச்சத்திற்கு வந்து தங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்று உச்சத்திற்கு வந்தால் போதும். எங்கள் லட்சியம் வென்றதாகிவிடும். அதில் கிராமத்து இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறதென்றால் எங்களுக்குக் கூடுதல் சந்தோஷம். ஏனென்றால் எங்கள் தாய்மடியும் கிராமம்தானே!’’ - நெகிழ்கிறார்கள் இருவரும்.

"சினிமா துறையில் ஆர்வமுள்ள யாரும்  தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளவும் இந்தத் தளத்தில் வழி செய்திருக்கிறோம்!"

- எஸ்.ஆர்.செந்தில்குமார்