ஃபேன்டஸி கதைகள்



அளவான திருட்டு

சமீபத்தில்தான் அந்தச் சந்தேகம் அவனுக்கு எழுந்தது. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே அவன் வீட்டிலிருந்து அடிக்கடி பணம் காணாமல் போவதாகத் தோன்றியது. கிட்டத்தட்ட அது உண்மையாகவும் இருந்தது. ஆனால், வீட்டில் அவனைத் தவிர வேறு யாருமே இல்லை. வேறு யாரும் வீட்டிற்குள் வந்து எடுத்துச் செல்லவும் எந்த வழியும் இல்லை. பெரும்பாலும் இவன் பணத்தினைக் கண்ட இடத்திலெல்லாம் போட்டு வைப்பதில்லை என்பதால், எப்பொழு தேனும் வீட்டிற்குள் வருபவர்களும் எடுத்துச் சென்றதாக சந்தேகப்படக்கூட வாய்ப்பில்லை. பின்னே யார்தான் எடுக்கிறார்கள்?

பணம் காணாமல் போவது ஒரு பக்கமிருக்க, நூற்றிசொச்சம் ரூபாய்தான் திருடு போவதால் குழப்பம் இன்னும் அதிகரித்தது. ‘அவ்வளவு சிரமப்பட்டு வந்து இவ்வளவு குறைவாகத் திருடிச் செல்கிற வினோதத் திருடன் எவன்’ என்கிற பெரும் குழப்பமும் ஏற்பட்டுப்போனது.
முதலில் சந்தேகம் எழுந்தபோது, இதைக் கண்டுபிடிப்பதற்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தினை ஹாலில் இருந்த ஒரு டேபிளில் வைத்திருந்தான். மொத்தப் பணமும் திருடப்படுகிறதா? இல்லை, அதே நூற்றிசொச்சம் ரூபாய்தானா என்று கண்டுபிடிக்க இந்தச் சோதனை. முதல் இரண்டு நாட்கள் பணத்தினை யாருமே திருடவில்லை. மூன்றாம் நாள் எண்ணும்போது 120 ரூபாய் குறைந்திருந்தது.



முந்தின இரவில் எண்ணும்போதுகூட பத்தாயிரம் ரூபாயும் அப்படியே இருந்தது. காலையில் குறைந்திருக்கிறது! அப்படியானால் இரவுக்குப் பிறகுதான் திருட்டு நடந்திருக்க வேண்டும். ஆனால், திருடன் வந்து போனதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இத்தனைக்கும் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் அவன் விழித்திருந்தான். புதிதாக வந்த திரைப்படம் ஒன்றினை இணையத்திலிருந்து தரவிறக்கிப் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கும் மேலாகத்தான் தூங்கவே செய்தான். இரண்டு மணியிலிருந்து காலை ஆறு மணிக்குள்ளான நேரத்தில் திருட்டு நடந்திருக்கிறது. யாரும் உள்ளே வரவில்லை. அப்பொழுது யார் எடுத்தது? அதுவும் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 120 ரூபாயை மட்டும் எதற்காகத் திருடிச் செல்ல வேண்டும்? மேலும் மேலும் குழம்பினான்.

பெருமளவில் பணம் திருடு போகவில்லை என்றாலும், அந்த வினோதத் திருடன் யாராக இருக்கும் என்ற பெருங்குழப்பம் அவனைத் தூங்க விடாமல் செய்தது. ‘சரி, எப்பொழுதெல்லாம் பணம் திருடு போகிறது’ என்று அறிவதற்காக, தன்னிடமிருந்த மொத்த பணத்தினையும் எண்ணி வைத்துக்கொண்டு, எல்லா வரவு செலவுக் கணக்குகளையும் தனது டைரியில் எழுதி தினமும் சரிபார்த்துக் கொண்டான். எப்பொழுதெல்லாம் பணம் குறைகிறதோ, அந்த நாட்களையெல்லாம் தனியாகக் குறித்துக் கொண்டான். இந்தத் திட்டமிடுதலில் அவனுக்கு ஒரு ஆச்சர்யமான உண்மை தெரிய வந்தது. பணம் திருடு போகிற அனைத்து தடவைகளிலுமே 120 ரூபாய்தான் திருடு போயிருந்தது. ஒரு ரூபாய்கூட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திருடப்பட்டிருக்கவில்லை. இது அவனை இன்னும் குழப்பியது. ஏதாவது மந்திரமா? பேய், பிசாசு? அதன்பிறகும் அவனுக்கு அந்த அறையில் இருக்க பயமாக இருந்தது. இதற்கெல்லாம் என்னவோ காரணம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று வேறொரு இடத்திற்குக் குடிபெயர்ந்தான்.



புது வீட்டில் அவன் எல்லா பொருட்களையும் அடுக்கி வைத்து செட்டில் ஆவதற்கே சில நாட்கள் ஆனது. ஆனாலும் பணத்தைக் கணக்காக வைத்தான். பணம் திருடு போகவில்லை என்பது அவனுக்கு ஆறுதல் தந்தது. ஆனால், நான்கைந்து வாரங்களுக்குப் பிறகு இங்கேயும் அதே கதை தொடர்ந்தது. இப்பொழுது ரொம்பவுமே பயந்துபோனான். பேய் ஏதேனும் தன்னைத் தொடர்ந்து வருகிறதா? எப்படி சரியாக 120 ரூபாய் மட்டும் திருடு போகிறது? எத்தனை பாதுகாப்பான இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தாலும் காணாமல் போகிறது!
புதிய அறையிலும் வினோதத் திருட்டு தொடர்ந்ததால், அந்தப் பழைய அறையில் தயாரித்த பட்டியலில் இருந்த சில ஒற்றுமைகளைக் கண்டுபிடித்தான். பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் மட்டுமே பணம் காணாமல் போயிருந்தது. மற்ற நாட்களில் காணாமல் போயிருந்தாலும் கூட இவன் அலுவலகம் சென்ற நேரத்தில் யாரோ திருடி விட்டதாகச் சொல்லலாம். ஆனால், விடுமுறை நாட்களில் இவன் வெளியே எங்கேயுமே போவதில்லை. வீடே கதியெனக் கிடப்பவன். அப்படி யிருக்கையில் எப்படி இந்த வினோதத் திருட்டு?

சரி, புதிய அறைக்கு வந்த ஆரம்பத்தில் ஏன் பணம் காணாமல் போகவில்லை? யோசித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் அப்படி என்னதான் நடக்கிறது? எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலுமே அதிக நேரம் தூங்குவதுதான் அவனது ஒரே கொள்கையாக இருந்தது. அதைத் தாண்டி, புதிய  படங்கள் வந்திருந்தால் அவற்றை திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பான். வேறெதுவும் செய்வதில்லை. இதற்கும் பணம் காணாமல் போவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

120 ரூபாய் மட்டும் காணாமல் போகிறது என்பதும், புதிய படங்களைத் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பதும் இணையும் புதிர் முடிச்சுகளாக அவனுக்குத் தோன்றின. புதிய அறைக்கு வந்த ஆரம்பத்தில் அவனுக்கு ப்ராட்பேண்ட் இணைப்பு கிடைக்கவில்லை. அப்பொழுது படங்கள் எதையும் டவுன்லோடு செய்யவுமில்லை. பணம் காணாமல் போகவுமில்லை. அதன்பின் அவன் திருட்டுத்தனமாக படத்தை டவுன்லோடு செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு டிக்கெட்டின் அளவிற்கு நிகரான 120 ரூபாய்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டுகொண்டான். அதன்பிறகு புதுப்படங்களை திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்க்கும் அவனது குணத்தினை மாற்றிக் கொண்டான். அவன் பணமும் காணாமல் போகவில்லை.

அனைத்து தடவைகளிலுமே 120 ரூபாய்தான் திருடு போயிருந்தது. ஒரு ரூபாய் கூட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திருடப்பட்டிருக்கவில்லை. ஏதாவது மந்திரமா? பேய், பிசாசு?