இதுதாங்க கொள்ளை அழகு!



விநோத ரஸ மஞ்சரி

படங்களைப் பார்த்தாலே புரியுமே... அழகிப் போட்டிதான். ஆனால், சாதாரண அழகிப் போட்டியல்ல... சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிப் பெண்களில் யார் பியூட்டி புறா எனக் கண்டறியும் போட்டி. பிரேசிலில் உள்ள டலவேரா புரூஸ் எனும் புகழ்பெற்ற சிறைச்சாலையில் காணக் கிடைத்த சீன்கள் இவை!



உலகிலேயே அதிக சிறைவாசிகளைக் கொண்ட நாடுகளில் பிரேசிலுக்கு 4வது இடம். 6 லட்சம் பேர் அங்கே கம்பி எண்ணுகிறார்கள். இதன் பொருள், அங்கே குற்றங்கள் அதிகம் என்பதல்ல... அங்கே எல்லா குற்றவாளிகளையும் பிடித்து சிறையில் அடைத்து விடுகிறார்கள் என்பது. குற்றம் புரிபவர்களில் அங்கே பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. 2000-2014 ஆண்டுகளுக்குள் பிரேசில் நாட்டில் பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை 567 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இதனால் ஆல் வுமன் சிறைச்சாலையான இந்த டலவேரா புரூஸ், அநியாயத்துக்கு நிரம்பி வழிகிறது. இதை குறைக்கத்தான் இந்த அழகிப் போட்டி.



‘‘இந்தப் போட்டியில் அழகை மட்டும் பார்ப்பதில்லை. கேள்வி - பதில் செஷனில் எங்கள் கருணையையும் அன்பையும் சோதிக்கிறார்கள். இப்போது என்னை நான் முழுமையான பெண்ணாக உணர்கிறேன்!’’ என்கிறார் ‘மிஸ் டலவேரா புரூஸ் 2016’ பட்டத்தைச் சூடியிருக்கும் மிசேல் ராஞ்சல். பெரும் கொள்ளைக்காரியாக குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு வந்தவர் இவர்.

இவரோடு கொள்ளை அழகாய் அணிவகுத்து நின்ற அத்தனைப் பெண்களுக்கும் இப்படி ஒரு பேக்கிரவுண்ட் உண்டு. பிரேசிலின் முன்னணி மாடலும் நடிகையுமான கரோல் நாகாமுரா முன்னின்று நடத்த, 17 நடுவர்கள் சேர்ந்து மார்க் போட்டு மிசேலை அழகியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இன்றல்ல நேற்றல்ல... தொடர்ந்து எட்டு வருடமாக இதே பிரமாண்டத்தோடுதான் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. போன வருடம் இதே பட்டத்தை வென்ற அன்னா கரோலினாவுக்கு 22 வயதுதான் ஆகிறது. ஆனால், மிகப் பெரிய போதைக் கடத்தல் பேர்வழி அவர். மனதைத் திருடும் குற்றத்துக்கு இவர்களை என்ன செய்யலாம்!

- ரெமோ