ஆகாயம் கனவு அப்துல் கலாம்



இந்திய ராக்கெட்டின் சரித்திரம் 10
சி.சரவணகார்த்திகேயன்

அந்நிய ஆதரவு

வாழ்ந்து கெட்ட குடும்பம், முன் சொந்தமாய் வைத்திருந்த வயலில் கூலிக்கு வேலை செய்வது போல் நூற்றாண்டுகள் முன் ராக்கெட் இயலில் உலகிற்கே முன்னோடியாய் இருந்த இந்தியா, அத்துறையைப் பயில ஓர் அந்நிய தேசத்துடன் ஒப்பந்தம் போட்டது.

சட் ஏவியேஷன் (Sud Aviation) என்பது ராக்கெட் தயாரிக்கும் பிரெஞ்சு அரசு நிறுவனம். 1964ல் இந்தியாவில் ராக்கெட்களை உருவாக்க அதனோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிறுவனம் சவுண்டிங் ராக்கெட், பயணிகள் விமானம் மற்றும் இதர வானியல் பொருட்களைத் தயாரித்து வந்தது. Centaure II B என்பது அவர்கள் தயாரித்த சவுண்டிங் ராக்கெட்களில் ஒன்று. தும்பாவில் ஆரம்ப காலத்தில் ஏவப்பட்ட அந்நிய ராக்கெட்களில் இதுவும் உண்டு.

வெளிநாட்டு ராக்கெட்களைச் சார்ந்திருப்பதிலிருந்து சுயமாய் இந்தியாவில் ராக்கெட் உருவாக்குவதை நோக்கிய சுருக்கு வழியாய் சாராபாயால் இத்திட்டம் வகுக்கப்பட்டது. ஏன் இந்த Centaure ராக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்டது? இந்தியாவில் சொந்தமாய் ராக்கெட் உருவாக்க வேண்டும் என்ற பணி மூன்று விஷயங்களைச் சார்ந்திருந்தது. 1) 100 முதல் 200 கி.மீ. உயரம் வரை பாயக்கூடிய ராக்கெட்டாய் இருக்க வேண்டும். அங்கிருக்கும் அயனியாக்க மண்டலத்தை ஆராய்வதே அப்போது நோக்கமாய் இருந்தது. 2) தொழில்நுட்பம் மற்றும் அதை அறிந்தவர்களின் இருப்பின் அளவு 3) குறிப்பிட்ட ராக்கெட் பற்றி ஏற்கனவே இருக்கும் அறிவு மற்றும் அனுபவம். நம்மிடம் அப்போது பழக்கமாகி இருந்தவை மூன்று ராக்கெட்கள். நைக் - அப்பாச்சி, ஜூடி - டார்ட் மற்றும் Centaure. இதில் ஜூடி - டார்ட் என்பது     சிறிய ராக்கெட். 70 கி.மீ உயரம் மட்டுமே போகக்கூடியது. நைக் - அப்பாச்சி ராக்கெட்களின் தயாரிப்பை நிறுத்தி விட்டிருந்தார்கள். அதனால் இயல்பாகவே Centaure  ராக்கெட்களை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று. கூடுதலாக, பிரான்ஸ் அரசும், சட் ஏவியேஷன் நிறுவனமும் இத்தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குப் பரிமாறத் தயாராக இருந்தனர்.

இது இரண்டு அடுக்கு திட செலுத்து பொருள் ராக்கெட். 130 கி.மீ. உயரம் வரை 60 கிலோ தாங்குசுமையை எடுத்துச் செல்ல வல்லது. முதலடுக்கு 280 மி.மீ விட்டமும் 94 எடையும் கொண்டது. பிவிசி (Polyvinyl Chloride - PVC) துகள்களால் ஆன இதன் பெயர் வீனஸ் (Venus). அடுத்த அடுக்கின் பெயர் பெலியர் (Belier). 205 மி.மீ. விட்டமும் 208 கிலோ எடையும் உடைய இது Vega என்ற துகளால் ஆனது. குரோமியம், மாலிப்டினம், வனேடியம் மற்றும் கொஞ்சம் கரி ஆகியவற்றாலான 15CDV6 என்ற கலப்பு உலோகத்துள் இவ்விரு செலுத்து பொருட்களும் திணிக்கப்பட்டிருக்கும். அவ்வளவுதான் இந்த ராக்கெட்!

சட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மொத்தம் இரு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. உதிரி பாகங்கள் கட்டுமானம் செய்தல் மற்றும் செலுத்துபொருளை ராக்கெட்டுக்குள் அடைத்து வைக்கும் நுட்பம் தொடர்பானது ஒன்று. இன்று பாபா அணு ஆராய்ச்சி மையமாக (Bhabha Atomic Research Centre - BARC) விஸ்தாரம் பெற்றிருப்பது அன்று ட்ராம்பே அணு சக்தி நிலையமாக (Atomic Energy Establishment Trombay - AEET) இருந்தது. இப்பொறுப்பை அது ஏற்றது. வி.டி.கிருஷ்ணன், டி.ஈஸ்வரதாஸ், ஸ்ரீகாந்த் இப்பணியில் ஈடுபட்டனர்.

இன்னொரு ஒப்பந்தம் திட செலுத்துபொருளைத் தயாரிப்பது தொடர்பானது. இதை AEETயின் ரசாயன பொறியியல் துறை ஏற்றது. ஆர்.கே.கர்க் தலைமையில் எம்.ஆர்.குருப், எம்.சி.உத்தம், பி.எஸ்.அரோரா ஆகியோர் இந்த வேலையில் பங்கேற்றனர். 1965ன் பிற்பகுதியில் பிரான்ஸிலிருந்து முதல் கட்ட தொழில்நுட்ப ஆவணங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. அவை யாவும் பிரெஞ்ச் மொழியில் இருந்தன. அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டி இருந்தது. வேலைக்குத் தேவையானவற்றில் பெரும்பாலானவை அதில் இருந்தன.

அக்கோப்புகளில் பிரான்ஸில் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து மூலப்பொருட்களை, இயந்திரங்களைப் பெறலாம் என்ற பட்டியலும் இருந்தது. அந்த மூலப்பொருட்களின் தகுதியைப் பரிசோதிக்கும் முறைகளும் கருவிகளும் அதில் விளக்கப்பட்டிருந்தன.
கட்டுமான வேலைகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மட்டும் அந்த பிரெஞ்ச் ஆவணங்கள் ஏதும் பேசவில்லை. காரணம் எளிமையானது. அவை ஒப்பந்தத்தில் இல்லை. ஆனால் அவை முக்கியமான சங்கதி.

செலுத்து பொருளின் மூலகங்கள் வெடிக்கும் தன்மை கொண்டவை. அவற்றை எந்த தூரத்தில் வைத்து எப்படிக் கையாள வேண்டும் என்பது அத்தியாவசியமான தகவல். நாக்பூரிலிருந்த வெடிபொருட்களுக்கான தலைமைக் கட்டுப்பாட்டாளர், டெல்லியில் அமைந்திருந்த வெடிபொருட்கள் சேமிப்பு மற்றும் போக்குவரத்து கமிட்டி ஆகியோர் வகுத்தளித்த அளவுகோல்களை இதற்குப் பின்பற்றியதன் மூலம் இப்பிரச்னை தீர்க்கப்பட்டது.



இன்னொரு விஷயமும் பகிரப்படவில்லை. அது செலுத்துபொருட்களின் அழிவிலாச் சோதனை (Non-Destructive Testing). அதாவது உண்மையாக வெடிக்க வைத்து அல்லது ஏவச் செய்து செலுத்துபொருட்களைப் பரிசோதிக்காமல் மின் காந்த அலைகள், புற ஊதாக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி செலுத்துபொருளின் தகுதியை மறைமுகமாகப் பரிசோதிப்பது. இதனால் காலம், காசு இரண்டும் மிச்சப்படும். குருப் 1965 - 1966ல் பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். அங்கு E’cole Nationale Supe’rieure des Poudresல் ஓராண்டு பயிற்சியும் போர்டா உற்பத்திக்கூடத்தில் (Bordeaux Plant) ஒரு மாத செய்முறைப் பயிற்சியும் பெற்றார். இடையே கர்கின் வழிகாட்டலில் உத்தம், அரோரா இருவரும் தும்பாவில் உற்பத்தியகம் அமைக்க விரிவான பொறியியல் வரைபடங்கள் தயார் செய்தனர். 1966ல் ஏவுகணை செலுத்துபொருள் உற்பத்தியகம் (Rocket Propellant Plant - RPP) கட்டும் பணிகள் தும்பாவில் தொடங்கின.

அந்த நேரத்தில் மிகச் சிறிய, மிக எளிய ராக்கெட்டை முழுமையாக தயாரிக்கும் வசதி கூட தும்பாவில் இல்லை. ஒவ்வொன்றாய் எல்லாம் உண்டாக்கப்பட்டன. குருப் பெற்ற பயிற்சியின் மூலம் RPPயில் என்னென்ன இயந்திரங்கள் தேவை எனப் பட்டியலிட முடிந்தது. அவர் இந்தியா திரும்பியதும் ட்ராம்பேயிலிருந்து தும்பாவிற்கு நிரந்தரமாய் மாற்றலானார். பிறகு அக்டோபர் 1967ல் உத்தம் பிரான்ஸ் சென்றார். அவரும் E’cole Nationale Supe’rieure des Poudresல் ஓராண்டு பயிற்சியும் பின் Saint Me’dard ப்ளாஸ்டோலைட் உற்பத்திக்கூடத்தில் ஒரு மாத செய்முறைப் பயிற்சியும் பெற்றார். (ப்ளாஸ்டோலைட் என்பது Centaure ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட செலுத்துபொருளாகும்.) அக்காலத்தில் அரோராவும் தும்பா மாற்றப்பட்டார். RPP உற்பத்தியகத்தில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் என்றால் அது உடனடியாய் பிரான்ஸில் இருந்த உத்தமுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர் அங்கிருந்த பொறியாளர்களிடம் கேட்டு அதைத் தீர்த்தார். 1968ல் உத்தம் இந்தியா திரும்பியபோது அவரும் தும்பாவில் பணியமர்த்தப்பட்டார்.

பிரான்ஸின் துலூஸ் (Toulouse) என்ற இடத்திலிருந்த சட் ஏவியேஷன் உற்பத்திக் கூடத்திலும் இந்தியப் பொறியாளர்கள் பயிற்சி பெற்றனர். இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட செலுத்துபொருளான ப்ளாஸ்டோலைட் என்பது அம்மோனியம் பெர்க்ளோரேட் (AP), டைசிடைல் தாலேட் (DOP), லித்தியம் ஃப்ளூரைட் (LiF), பிவிசி (PVC), ட்ரைபேசிக் லெட் சல்ஃபேட் ஆகியவற்றால் ஆனது. ஆரம்பத்தில் இவை யாவும் இறக்குமதி செய்யப்பட்டாலும் பின் ஒவ்வொன்றாய் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். உதாரணமாய் பம்பாயின் விம்கோ நிறுவனம் தம்மிடமிருந்த சுவிட்சர்லாந்து லைசென்ஸைக் கொண்டு AP தயாரித்துக் கொடுத்தது. இதற்கென அம்பர்நாத்தில் தனித் தொழிற்சாலை தொடங்கியது. அங்கு தீர்ந்தபோது கேரளாவின் ஆலப்புழையில் இஸ்ரோவே உற்பத்தியைத் தொடங்கியது.

சென்னையிலிருந்த கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் பி.வி.சி. தயாரித்துக் கொடுத்தது. DOP என்பது பிளாஸ்டிக் தயாரிக்க உதவியாய் இருக்கும் மூலப்பொருள். பி.வி.சி. கொண்டு சில பொருட்கள் தயாரிக்க அது பயன்பட்டதால் இந்தியாவில் பரவலாகக் கிடைத்தது. இன்டோ நிப்பான் நிறுவனம் இதைத் தயாரித்து அளித்தது. சிக்கல் LiF தயாரிப்பதில்தான் வந்தது. காரணம், இது குறைந்த அளவில்தான் தேவைப்பட்டது. அதாவது சில கிலோக்கள். குறைந்த அளவில் தயாரிப்பது தொழிற்சாலைகளில் சாத்தியமில்லை. ஆனால் மஃபத்லால் கெமிக்கல்ஸ் நிறுவனம் இதைத் தயாரித்துத் தர முன்வந்தது.

செலுத்துபொருள் தயாரித்த பின் அதை பி.வி.சி. குழாய்க்குள் அடைக்க வேண்டும். ஆரம்பத்தில் இந்தக் குழாயும் பிரான்ஸிலிருந்து தருவிக்கப்பட்டது. காரணம், இந்திய நிறுவனங்கள் பி.வி.சி. தகடுகளைத்தான் தந்தன. அவர்களிடம் பி.வி.சி. குழாய்களைத் தயாரிக்கும் வசதி இல்லை. பின்னர் தும்பாவின் RPPயில் இந்த தகடுகளை மடக்கி அவற்றின் ஓரங்களில் வெல்டிங் வைத்து இணைத்து குழாய் உருவாக்கினர்.
முக்கியமான பணிகளுக்கு ஒன்றுக்கு இரண்டாய் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. அவசரத் தேவையின்போது ஒரே நேரத்தில் இரட்டிப்பாய்த் தயாரிக்கலாம். ஒன்று பழுதுபட்டு இருக்கும்போது தயாரிப்பை நிறுத்தாமல் மற்றொன்றில் செய்யலாம்.

இந்த அனுபவங்கள் இந்தியப் பொறியாளர்களுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தையும் அதை நிர்மாணித்து ஏவும் முறைமைகளையும் அதிதீவிரமாய்க் கற்றுத் தந்தன. இதில் எதிர்கொண்ட சிக்கல்களும், சந்தித்த தோல்வி களும் பிற்பாடு முழுமையான உள்நாட்டுத் தயாரிப்பாய் ராக்கெட்களை உருவாக்கியபோது உதவிகரமாய் இருந்தன. இப்படியாய் பெரும்பாலும் உள்நாட்டு உட்பொருட்களைச் சுமந்துகொண்டு இந்தியப் பொறியாளர்களின் கரங்களில் தவழ்ந்தபடி Centaure எனும் குழந்தை தயாரானது. வெற்றிகரமாய் விண்ணில் ஏவப்பட்டாலும் அது ஒரு பிழையுடன்தான் நடந்தேறியது.

"ஆபத்தான செய்முறைகள் கொண்டதால் ராக்கெட் தயாரிப்பு தொடர்பான பணிகள் நடக்கும் கட்டிடங்கள் மற்றவற்றிலிருந்து தள்ளியே அமைக்கப்பட்டன."

(சீறிப் பாயும்...)