நானும் ஃபேஷன் டிசைனர்!



மகிழும் மனிஷா யாதவ்
star hobby

‘‘மாடலிங் அனுபவம் எனக்கு நிறைய. அதனாலேயே லேட்டஸ்ட் ஃபேஷன், டிரெண்ட் எல்லாத்திலும் செம அப்டேட். ஒருத்தருடைய பர்சனாலிட்டிக்கு எது பொருத்தம்னு கச்சிதமா சொல்வேன். அதனாலதான் இந்த ஃபேஷன் டிசைனிங் துறையில் துணிஞ்சு இறங்கியிருக்கேன்!’’ - ஃப்ரெஷ் புன்னகையில் வெல்கம் கொடுக்கிறார் மனிஷா யாதவ். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் செம மாடர்ன் கேர்ளாக வந்த பொண்ணு! பெங்களூருவில் இவர் தொடங்கியிருக்கும், ‘மனிஷா சுரேஷ் டிசைன் ஸ்டூடியோ’வை நடிகை ப்ரணிதா திறந்து வைத்திருக்கிறார்.

‘‘என் பூர்வீகமே பெங்களூருதான். பி.காம் படிச்சிருக்கேன். அப்பா அம்மா ரெண்டு பேருமே கல்வித்துறையில இருக்காங்க. சினிமாவிற்கு வந்திருக்கறது நான்தான். காலேஜ்ல படிக்கும்போதே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஸோ, அப்பவே ஃபேஷன் மேல ஒரு Passion. எங்கேயும் இல்லாத மாதிரி தனித்துவத்தோட ஒரு யூனிக் பொட்டிக் தொடங்கணும்னு ஆசை அப்பவே வந்திடுச்சு. அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு. மும்பைல ஒரு மனிஷ் மல்ஹோத்ரா மாதிரி, சென்னையில ஒரு சைதன்யா ராவ் மாதிரி நானும் வரணும். அதுதான் லட்சியம்!’’ என்கிற மனிஷா, ஸ்டூடியோவின் இன்டீரியர்கள் அனைத்தையுமே தானே டிசைன் செய்திருக்கிறார்.



‘‘மனிஷ் மல்ஹோத்ரா டிசைன்ஸ் எல்லாம் மில்லியனர்களுக்கானது.  ஒரு கோடி ரூபாய்ல அவர் டிசைன் பண்ணினார்னா, அதுல பத்து லட்சம்  அவருக்கான பேமென்ட். ஆனா, நான் செய்யறது அவ்வளவு காஸ்ட்லி இல்ல. இது அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்கானது. ஆறில் இருந்து அறுபது வரை எந்த வயசுக்காரங்களுக்கும் காஸ்ட்யூம்ஸ் கிடைக்கும். ஒவ்வொண்ணுமே தனித்துவமானது. இங்க நல்ல டிசைனர்ஸ் டீம் அமைஞ்சிருக்கு. டெல்லி, லக்னோவில் உள்ள பெரிய பெரிய நிபுணர்கள்கிட்ட வொர்க் பண்ணின அனுபவம் உள்ள டீம் அது. ஃபேஷனுக்கு பேர் வாங்கின இடம் பெங்களூரு. ஸோ, இங்கே நிறைய ஃபேஷன் ஸ்டூடியோஸ் இருக்கு. ஆனாலும், அதிலும் தனித்துவமா தெரிய இந்த டீமால முடியும்.

ஒரு ஜாக்கெட் வாங்க வர்ற கஸ்டமர்ஸ்கிட்ட கூட அவங்க லுக், பர்சனாலிட்டி, ஃபிட்னஸ்... அதில் இருக்குற ப்ளஸ், மைனஸ் தெரிஞ்சு உடைகளை ரெகமெண்ட் பண்ணுறோம். அவங்களுக்கு எது பொருத்தமா இருக்கும்னு கிரியேட்டிவா டிசைன்ஸ் பண்ணி, நிறைய வொர்க் பண்ணி காட்டுறோம். நான் அதுக்காக ரொம்பவே ஹார்டு வொர்க் பண்ணுவேன். கவுன், ப்ளவுஸ், ஷர்ட்னு எல்லாமே என்னோட கற்பனையில உருவாக்குறதுதான். எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் டிசைனையும் காப்பி அடிக்கறதில்ல. ஒவ்வொரு வொர்க்கிலும் ஒரு புது விஷயம் இருக்கும்.



அதனால எங்களுக்கு இப்பவே நிறைய வெளிநாட்டு கிளையன்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. ஸ்கைப்ல டிசைன்ஸைக் காட்டி அவங்க சம்மதத்தை வாங்கிட்டு டிரெஸ் ரெடி பண்றோம். எங்களோட கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வச்சி ஒரு ஃபேஷன் ஷோ பண்ற ஐடியாவும் இருக்கு. இப்போ ஸ்டோர்தான் வச்சிருக்கேன். நிறைய தயாரிச்சு, மத்த பொடிக் ஸ்டோர்களுக்கும் எங்க டிசைனர் உடைகளை விற்கற ஐடியாவும் இருக்கு.

இப்ப சினிமாவுக்கு வருவோம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’விற்கு அப்புறம் அதே மாதிரி கேரக்டர்கள் தேடி வந்துச்சு. ‘வழக்கு எண்’, ‘ஆதலால் காதல் செய்வீர்’னு தமிழ்ல நான் நடிச்ச படங்கள் எல்லாமே ஒவ்வொரு விதமா இருக்கும். ஒரே மாதிரி ட்ராவல் பண்ணினா ஃபீல்டுல ரொம்ப நாள் இருக்க முடியாது. இப்போ ‘குப்பைக்கதை’னு ஒரு படம் முடிச்சிட்டேன். அடுத்து பரத் ஜோடியா ஒரு ஹாரர் காமெடியில கமிட் ஆகியிருக்கேன். சினிமா எனக்கு மெயின். அடுத்துதான் டிசைனர் ஸ்டூடியோ. ஷூட்டிங்குக்காக எங்கே ட்ராவல் பண்ணினாலும் அங்கே என்ன ஃபேஷன் டிரெண்ட்னு கவனிப்பேன். ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல என்னோட ஸ்டோர்ல கவனம் செலுத்துறேன்.

டிசைனிங் தவிர எனக்கு ‘ஹாபி’னு எதுவும் இல்ல. சினிமாவைத் தாண்டி நான் நேசிக்கற விஷயம் இதுதான்! அப்பா, அம்மா சப்போர்ட் இருக்கறதால பெங்களூருவில் இந்த ஸ்டோர் ஆரம்பிச்சேன். எதிர்காலத்துல சென்னை, டெல்லி, மும்பைனு மெட்ரோ நகரங்கள் எல்லாத்திலும் டிசைனர் ஸ்டூடியோ திறக்கணும்னு கனவுகள் இருக்கு. சர்வதேச அளவில் என்னோட டிசைன்ஸ் பத்தி எல்லா ஃபேஷன் வட்டாரத்திலும் பேசணும். இன்டர்நேஷனல் ஃபேஷன் ஷோக்களில் அதுக்கு மரியாதை கிடைக்கணும். அதான் என்னோட லட்சியம். அது நிறைவேறுவது நிச்சயம்!’’

- மை.பாரதிராஜா