ஆண்களுக்கும் வேண்டுமா பிரசவ விடுப்பு..?



ஆபீஸுக்கு விடுமுறை விட்டாலும் நம்மை ஃபேஸ்புக் விடுவதில்லை. நாமெல்லாம் லைக் அண்ட் ஷேரில் பிஸியாகிக் கிடக்க, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் இரண்டு மாத பெட்டர்னிட்டி லீவில் போய்விட்டார். அது என்ன பெட்டர்னிட்டி லீவ்? பெண்களின் பிரசவ கால விடுப்பு மெட்டர்னிட்டி லீவ் என்றால், குழந்தை பெற்ற பெண்ணின் கணவருக்குத் தரப்படுவது பெட்டர்னிட்டி லீவ். வளர்ந்த நாடுகளில் இந்த லீவ் சகஜம். ஆண் என்பவன் வெறுமனே குடும்பத்துக்காக சம்பாதித்துப் போடும் மெஷின் மட்டுமல்ல... அம்மா, அப்பா இருவரின் அரவணைப்பும் ஒரு குழந்தைக்குத் தேவை என நினைக்கிறார்கள் அங்கே. மார்க் போன்ற ஒவ்வொரு நிமிடமும் பிஸியாக இயங்கும் உலகப் பிரபலங்களே மனைவிக்குத் துணையாக பிரசவ விடுப்பு எடுக்கிறார்கள்... இங்கே ஏன் குழந்தை வளர்ப்பில் ஆண்கள் பங்கெடுப்பது இல்லை?

‘‘அந்தக் காலக் கூட்டுக் குடும்பங்களில் பேறுகாலம் என்றாலோ குழந்தை வளர்ப்பு என்றாலோ குடும்பத்தில் உள்ள எல்லோரும் பங்கெடுத்துக்கொண்டார்கள். ஆனால் இன்றைய தனிக்குடித்தனங்களில் கணவன், மனைவி இருவர் மட்டுமே அனைத்துக்கும் பொறுப்பு. அப்படி இருக்கும்போது இம்மாதிரி விடுப்புகள் தந்தே ஆக வேண்டும்!’’ என்கிறார் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி.



மத்திய அரசு ஊழியர்களுக்கு, ‘மனைவியை இழந்த கணவர்களுக்கு குழந்தைப் பராமரிப்புக்காக பணிக்காலத்தில் இரண்டு வருடம் வரை விடுப்பு தர வேண்டும்’ என ஏழாவது சம்பளக் கமிஷன் சமீபத்தில் பரிந்துரைத்து இருப்பதையும் குறிப்பிட்டுப் பேசுகிறார் அவர்.
‘‘இன்றைய நிலைப்படி ஒரு தாய்க்கு கொடுக்கும் பேறுகால விடுப்பே குறைவுதான். மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, பத்து மாதம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு தாய்க்கு 6 மாதம் விடுப்புதான் இருக்கிறது. இதை 1 வருடமாக மாற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்திருக்கிறோம். அதே போல, பேறுகாலத்தின்போது ஒரு கணவனுக்கு 15 நாள் விடுப்புதான் மத்திய அரசு வழங்குகிறது. இதையும் 3 மாதமாக மாற்ற போராட்டங்கள் நடக்கின்றன.

இப்போது கூட சம்பளக் கமிஷனின் பரிந்துரை மனைவியை இழந்த கணவர்களுக்குத்தான் பொருந்துகிறது. ஏன்? மனைவி இருக்கும்போது கணவருக்கு குழந்தை வளர்ப்பில் பங்கே இல்லையா? மனைவியின் மருத்துவ சலுகைகள், மனைவியின் பயண விடுப்பு போன்றவற்றை கணவன்மார்களுக்கு மாற்றிக் கொடுக்கும் சலுகை போல குழந்தை வளர்ப்பு விஷயத்திலும் மனைவியின் மெட்டர்னிட்டி விடுமுறைகளை கணவன்களுக்கும் மாற்றிக்கொடுக்கும் நடைமுறையை அரசு கொண்டுவர வேண்டும்.  ஒரு குழந்தையை நல்ல சிட்டிசனாக வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்குமே சம  பங்கு பொறுப்பிருக்கிறது. இதை உணரும்போதுதான் இந்த விடுப்பு பிரச்னைகள்  முடிவுக்கு வரும்!’’ என்கிறார் அவர்.



இந்த சமபங்கு பொறுப்பு பற்றிப் பேசுகிறார் குழந்தை நல உளவியலாளர் விருதகிரிநாதன்...

‘‘பொதுவாக குழந்தைகள் தங்கள் தாய் - தந்தை இருவரின் குணத்தையும் கலந்தே பெற்றிருக்கும். ஆனால், ஆண் குழந்தை என்றால் அம்மாவின் குணத்தையும், பெண் குழந்தை என்றால் அப்பாவின் குணத்தையும் கொஞ்சம் அதிகம் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மரபணு  காரணங்களால் ஒரு குழந்தையின் குணத்தில் ஒருவித சமமின்மை நிலவும். இதைச் சரிப்படுத்த வேண்டும் என்றால் அம்மாவும் அப்பாவும் இணைந்து குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்க வேண்டும். ஒருவர் இல்லாமல் ஒருவர் வளர்ப்பது குழந்தையின் குணத்திலும், மற்ற பழக்கவழக்கங்களிலும் ஒரு சீரில்லாத தன்மையைத்தான் ஏற்படுத்தும். பேரன்டிங் என்றாலே இருவரும் சேர்ந்து குழந்தையை வளர்ப்பதுதான்!’’ என்கிறார் அவர்.

இப்படி நம்மூரில் யாரும் யோசிப்பதில்லை. குழந்தை வளர்ப்பு என்றாலே அது அம்மாவின் கடமை என்பது நம் சமூகக் கணக்கு. எனவேதான்  ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லை’ என்று ஒரு அப்பா விடுப்பு எடுப்பது நகைப்புக்கும் திகைப்புக்கும் உரியதாக இருக்கிறது. பரமக்குடியைச் சேர்ந்த அரசு அலுவலர் ரவிச்சந்திரனின் அனுபவம் இன்னும் உருக்கம்.

‘‘என் மனைவி இறந்து 3 வருஷம் ஆச்சுங்க. பையனுக்கு 7 வயசு. அவனுக்காக ராமநாதபுரத்துல இருக்குற எங்க அம்மாவோடதான் தங்கியிருக்கேன். அங்கிருந்து ஆபீஸ் வர ஒரு மணி நேரம் ஆகும். அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. அவங்களைப் பார்த்துக்கவே ஒரு ஆள் தேவைப்படுற கட்டம். பையனுக்கு இதுதான் துறுதுறு வயசு. பார்த்துக்க ஆளில்லாம அவன் என்னென்ன சேட்டைகள் செய்யிறானோ... அதுல என்னென்ன ஆபத்து வருமோனு எந்நேரமும் எனக்கு பதைபதைப்பா இருக்கும். வீட்ல இருந்து போன் வந்தாலே பதறிப் போயிடுவேன்.

வேலையில சேர்ந்து சில மாசங்கள்தான் ஆச்சு. அதனால சி.எல் மாதிரியான லீவுகளைத்தான் போட முடியும். சில நேரம் ஏதாவது எமர்ஜென்சின்னா வேலை முடியிறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி பெர்மிஷன் போட்டுட்டு அரக்கப் பரக்க வீட்டுக்குப் போகலாம். அரசுக் குழு பரிந்துரைச்சிருக்கிற மாதிரி வளர்ப்புக்காக ஆண்களுக்கும் விடுப்பு கொடுக்குற சலுகை வரும்போது என்னைப் போன்ற பல தகப்பன்களுக்கு அது பேருதவியா இருக்கும்!’’ என்கிறார் ரவிச்சந்திரன் சோகமாக. இப்படிப்பட்ட தகப்பன்களும் இருக்காங்க மக்களே!

‘‘மனைவியை இழந்த கணவர்களுக்குத்தான் சலுகைகள் தரச் சொல்கிறார்கள். ஏன்? மனைவி இருக்கும்போது கணவருக்கு குழந்தை வளர்ப்பில் பங்கே இல்லையா?’’

- டி.ரஞ்சித்