கைம்மண் அளவு



நாஞ்சில் நாடன்

அராஜகம் எனும் சொல், ‘ராஜ்யம்’, ‘ராஜகம்’ எனும் சொற்களின் எதிர்மறைப் பிறப்பு. ‘ஒரு தேசமானது அரசியல் அற்றிருத்தல்’ என்று பொருள் தருகிறது பேரகராதி. அதாவது, அரசியலே நடக்கவில்லை, அரசாட்சி நடக்கவில்லை என்பது பொருள். அரசாட்சி என்றால் ‘அறம் பிறழாத நல்ல ஆட்சி’ என பொருள்படும். ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்’ என்கிறது சிலப்பதிகாரம். ‘அரசியலில் பிழை செய்தால் அறமே எமனுமாகும்’ என்பது பொருள். அராஜகம் என்பது அரச நீதிக்கு எதிரான செயல் என்று பொருள் கொள்ளலாம். ஒரு காலத்தில் அராஜகம் என்ற சொல் இறை முறை பிழைத்த அரசுக்கு எதிரான கோஷமாக ஒலிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் பொதுவுடைமைக் கட்சி மேடைகளிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மறியல்களிலும்.

அயற்சொல் அகராதி ‘அராஜகம்’ எனும் சொல்லுக்கு வன்முறை, வன்செயல், அல்லரசகம் என மூன்று பொருட்கள் வழங்கும். அல்லரசகம் எனில் அரச நீதி இல்லாத ஆட்சி எனலாம். அதைத்தான் ராமலிங்க வள்ளலார், ‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக’ என்றார் போலும். நாற்றம் எனும் சொல் ஒரு காலத்தில் நறுமணம் என்று பொருள் தந்தது. ‘கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ’ என்றாள் ஆண்டாள். இன்றோ நாற்றம் எனில் கெட்ட வாடை என்பது பொருளாயிற்று. அரசாட்சி என்ற சொல்லும் அவ்விதமே திரிந்து பட்டது போலும்.

அரசாட்சியோடு மட்டும் நிறுத்திவிடாமல், இன்று நீதிக்கும் ேநர்மைக்கும் அறத்துக்கும் ஒழுங்குக்கும் அமைதிக்கும் எதிரான எச்செயலையும் நாம் அராஜகம் என்றே சொல்லிவிடலாம். எல்லோருமே, ‘செல்லும் இடத்து மட்டும் சினம் கொள்வது’ போல, இன்று அராஜகம் செயல்படுத்த யோசிப்பதில்லை. கத்தியால் குத்துவது, ரத்தம் பீறிட அரிவாளால் வெட்டுவது, உருட்டுக் கட்டையால் மண்டை பிளப்பது மாத்திரமே வன்முறை அல்ல. சக மனிதனுக்கு எதிரான, தன்னலம் கொப்பளிக்கும் எந்தச் செயல்பாடும் அராஜகம்தான்.
அரசு இயந்திரத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பவர் மட்டுமே அராஜகம் செய்ய இயலும் என்பதும் இல்லை. அரசு இயந்திரத்தின் கடைநிலை ஊழியன் வரை அராஜகம் செய்ய இயலும். ஏதாவது காரியத்துக்காக அரசாங்க அலுவலகம் நுழைய நேர்ந்தவர் இதை உணர்வார்கள். ஒரு காலத்தில் போலீஸ் ஸ்டேஷன் நுழைவதே மக்களுக்கு மானப் பிரச்னை. இன்று அதை எந்த அரசு அலுவலகத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

வாழ்க்கையின் கடைங்காணியில் ஓராண்டு முன்பு, கோவையில் சொந்த வீடு கட்டினேன். அனைத்து அனுமதிகளும் முறையாகப் பெற்றேன். குடிநீர் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தி, எட்டு மாதம் காத்திருந்து ஆணையும் பெற்றேன். இணைப்பு தருபவர்கள், மாநகராட்சியின் ஒப்பந்தக்காரர்கள். அவர்கள் கட்டணம் தனி. இணைப்பு தருவதற்கான வேலை நடந்து கொண்டிருக்கும்போது மூன்று நபர்கள் வந்து ‘‘வேலையை நிறுத்துங்க’’ என்றனர். ‘‘எழுத்து மூலம் ஆணை இருக்கு. எதுக்கு நிறுத்தணும்?’’ என்றேன். ‘‘அதெல்லாம் தெரியாதுங்க... உடனே வேலையை நிறுத்துங்க!’’ என்றார்கள். நாம் வேறென்ன செய்ய இயலும்!

‘‘சரிங்க! உங்க பேரு, பதவி மாத்திரம் சொல்லுங்க’’ என்றேன்.

‘‘எதுக்கு? கம்ப்ளெயின்ட் பண்ணவா?’’ என்றார்கள்.

‘‘மாநகராட்சிக்குத் தகவல் சொல்லாண்டாமா?’’ என்றேன்.

ஒப்பந்தக்காரர் அவர்களைத் தனியாகக் கூட்டிப் போய்ப் பேசி அனுப்பி வைத்தார். கண்டிப்பாகக் காசு கொடுத்திருப்பார். விசாரித்தபோது சொன்னார்கள், ‘ஆறு நாட்களுக்கு ஒரு முறை, ஒன்றே முக்கால் மணி நேரம், மிகக் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் திறந்து விடுகிறவர்கள் அவர்கள்’ என்று. மாநகராட்சி உயரதிகாரிகளுடன் ஒரே மேடையைச் சில முறை பகிர்ந்துகொண்டவன் நான். ஆனால் அடிமட்டத்து ஊழியர் ஒருவர் காசு ஒன்றைக் கருதி, நம் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடிகிறது. இது எந்த வகையிலான அரசாட்சி?

வட மாநிலங்களில் கடைவாயில் வெற்றிலைச் சாறு ஒழுக, கண்கள் கன்றிச் சிவந்திருக்க, சபாரி உடையில் ஒருவரைச் சந்தித்தால், அவரை அரசு அதிகாரி என்று சொல்லி விடலாம். அண்மையில் நண்பர் ஒருவர் கேட்டார், ‘‘நல்ல அதிகாரியா, ஊழல் ஆத்மியா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?’’

சொன்னேன், ‘‘எவன் ‘வாய்யா, போய்யா’ என்று அலுவலகத்தில் விண்ணப்பம் கொண்டு வருபவரை ஒருமையில் விளிக்கிறானோ, எவன் எப்போதும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் பேசுகிறானோ, எவன் இறுகிக் கனத்த முகத்துடன் கடுகடுக்கிறானோ, அவன் ஊழல் ஆத்மி!’’ என்று.

அரசு அலுவலகங்களில், ‘காசு போனால் போகட்டும்... காரியம் விரைந்து நடந்தால் போதும்’ என்று கருதுபவர்கள், நாம் மேற்சொன்ன அடையாளங்கள் கொண்ட அலுவலரை அணுகுவது சிறப்பு. கடுப்பைச் சார்ந்து ரேட்டும் அதிகமாக இருக்கும். எந்த அரசு அலுவலகத்திலும், நியாயமானதோர் கோரிக்கையுடன் ஒரு அலுவலர் மேசை முன் போய் நின்றால், அவர் உம்மை நிமிர்ந்து பார்க்க இருபது நிமிடங்கள் ஆகும். அத்தனை தீவிரமாக வேலை செய்வதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.



அமைச்சர்கள் சம்பாதிக்கிறபோது, ‘அவுனுக்கு நாமென்ன கொறஞ்சவனா அறிவிலே, சாமர்த்தியத்திலே?’ என்று உயரதிகாரிகள் சம்பாதிக்கிறார்கள். அதே நோக்கில் கீழ் அதிகாரிகளும் எழுத்தர்களும் கடைநிலை ஊழியர்களும் அராஜகம் செய்கிறார்கள். இன்று மகத்தான மனிதன் என்று சகலரும் கொண்டாடும் அப்துல் கலாமே உயிரோடு வந்து தலைமுடியை வெட்டி, மீசை வைத்துக்கொண்டு, வேட்டி சட்டையில் போய் அரசு அலுவலகத்தில் நின்றால் என்ன சொல்வார்கள் தெரியுமா? ‘என்னய்யா? என்ன வேணும்? அதெல்லாம் முடியாது! சந்திர மண்டலத்துக்குப் போக விசா வச்சிருக்கியா? போ, போ... ஒரு வாரம் கழிச்சு வா’ என்பார்கள். இது அவர்கள் உபசாரம். சபரிமலை ஐயப்பனிடம் சிற்றன்னை, தகப்பனின் நோய் மாற்ற புலிப்பால் கொண்டு வரச் சொன்னது போல் சான்றுகள், ஆவணங்கள் கேட்பார்கள். கலாம் என்ன... கடவுளரே வந்தாலும் கதை அதுதான்.

காசு நிறையக் கொடுப்பதாக இருந்தால் இருப்பவனைச் செத்தவன் என்று சான்றிதழ் வாங்கலாம். வெட்டாத கிணற்றுக்கும் வாங்காத பசுவுக்கும் கடன் வாங்கலாம். ஆற்றை, குளத்தை, கடற்கரையை, சுரங்கத்தை, குன்றை பட்டா போட்டு வாங்கலாம். ஏன், தஞ்சை பெரிய கோயிலை, குற்றால அருவியைக் கூட பட்டா போட்டு வாங்கலாம். ஆனால், அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருந்தாலும் ஒரு ரேஷன் கார்டு வாங்க இயலாது, காசு கொடுக்காமல்! நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் முயன்று பாருங்கள். தோற்றுப் போவீர்கள்!

எனது வீட்டு மனையைத் தொண்ணூறுகளின் துவக்கத்தில் வாங்கினேன். எனக்கு விற்றவர் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம். பத்திரத்தில் மனை எல்லை குறிப்பிடும்போது மனை 27க்கும் மேற்கே என்பதற்குப் பதிலாக, மனை 28க்கும் மேற்கே என்று எழுதி விட்டிருந்தனர். திருத்தல் பத்திரம் போடாமல் அனுமதிகள் வாங்க இயலாது என்றனர். எனது வழக்கறிஞர் நண்பர்கள் சொன்னார்கள், ‘‘மனையை உங்களுக்கு விற்றவர் மீது வழக்கொன்று தொடர்ந்தால் சாதகமாகத் தீர்ப்பு வரும், அது போதும்’’ என்றார்கள். நீதிமன்றத்தில் வழக்கு என்றால், நமது போதாத காலம்... தீர்ப்பு வர கால் நூற்றாண்டு ஆகி விடும். தொண்ணூறு வயது வரை நான் இருக்கவா போகிறேன்?

ரியல் எஸ்டேட் நண்பர் ஒருவர் சொன்னார், ‘‘ஒண்ணும் பிரச்னை இல்ல சார். மூலப் பத்திரத்தைத் திருத்திடலாம். நம்மகிட்ட எக்ஸ்பர்ட்ஸ் இருக்கிறாங்க!’’

வேறொரு நண்பர் சொன்னார், ‘‘அதெல்லாம் வேண்டாங்க... மனைப் பத்திரத்தை மொதல்ல ஜெராக்ஸ் எடுங்க. அதுல 28 என்பதை 27ன்னு திருத்திரலாம். அதுக்கெல்லாம் நம்மட்ட ஆளிருக்கு. திருத்தப்பட்ட ஜெராக்ஸை பிறகு ஜெராக்ஸ் எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்துருங்க...’’
மிக எளிய வழிகள்தான். எனினும் தவறு! ‘‘அதிகாரபூர்வமாகவே திருத்தல் பத்திரம் போட்டு விடலாம்’’ என்றார் விஜயா பதிப்பகத்து அண்ணாச்சி. திருத்தப் பத்திரத்துக்கு 95 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்டாம்ப் ட்யூட்டி கட்ட வேண்டும் என்றார்கள். அது நிலம் வாங்கிய தொகைக்கு ஒன்றரை மடங்கு. பிறகு பத்திரப் பதிவு நிபுணர்களின் ஆலோசனை பெற்று, முறையாக, சட்டப்படி, சின்ன செலவில் செய்து முடித்தோம்.
 
திருத்தப் பத்திரத்தில் கையெழுத்து போட, எனக்கு மனை விற்ற நர்மதா ராமலிங்கம் சென்னையிலிருந்து சொந்த செலவில் வந்து போனார். ஒரு எழுத்தாளனுக்காக இதைச் செய்வதாகச் சொன்னார். பத்திரப் பதிவு முடிந்த பிறகு, சார்பதிவாளர் கை குலுக்கி, தேநீர் வாங்கிக் கொடுத்து, மகிழ்ச்சி பொங்கக் கூறினார், ‘‘எம் மகன் உங்க தீவிர வாசகனுங்க... ஷெல்பு பூரா உங்க பொஸ்தகம்தான் வாங்கி அடுக்கி வச்சிருக்கான்!’’ என்று. கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே, குறுக்குச் சால் ஓடியது மனதில், ‘‘நண்பா, ஒரு எழுத்தாளன் என்றறிந்த பின்பும் என் தொடைக்கறியில் ஒரு பங்கு பெற்றாயே!’’ என்று.

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே! எங்கள் ஊரில் சொல்வார்கள், செத்துப் போன பிள்ளையைப் புதைக்கக் கொடுத்தால் அதிலும் பாதிப்பிள்ளை எடுத்துக் கொள்வார்கள் என்று. சொந்த மகன் அல்லது மகளிடமும் காரியம் செய்து கொடுக்க ரேட் பேசுவார்கள் போலும்.

அண்மையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க புத்தக வெளியீட்டு விழாவுக்கு தேனி போயிருந்தேன். நண்பர் ம.காமுத்துரை சிறுகதைத் தொகுப்பு, ‘புழுதிச் சூடு’ வெளியீட்டு விழா. எனக்கு அவசரமாக, ‘கைம்மண் அளவு’ தொடரின் 43வது வாரக் கட்டுரை குங்குமத்துக்கு அனுப்ப வேண்டி இருந்தது. நண்பர் பொன்முடி ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதியில் அவருடன் மதிய உணவு உண்ட பின் அவரை அனுப்பிவிட்டு ஜெராக்ஸ் கடை தேடினேன். காவல் நிலையம் எதிரே ஒரு கடை இருந்தது. ஏ4 அளவுத்தாளில் என் கையெழுத்தில் கருப்பு மையில் ஆறு பக்கங்கள். ‘‘மூணு செட்’’ என்றேன்.

நகல் எடுத்துத் தந்தார் ஒரு அம்மையார். வாங்கிப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. மிக மங்கலான பதிவு. அதன் மீது முகப்பவுடர் தடவியது போல் மேலும் மங்கல். உளவுத்துறையால் மட்டுமே வாசிக்க இயலும். ‘‘தெளிவா வாசிக்கும்படி ஒரு பிரின்ட்டாவது எடுத்துக் குடுங்கம்மா’’ என்றேன். முகத்தைச் சுளித்துவிட்டு மேலும் மூன்று செட் எடுத்தார். செம்மையாக இருந்தது. ‘‘எவ்வளவுங்கம்மா?’’ என்றேன். ‘‘அறுபது ரூவா’’ என்றார். ‘‘என்ன கணக்கு’’ என்றேன். ‘‘ஆறு முணு பதினெட்டு. பதினெட்டும் பதினெட்டும் முப்பத்தாறு காப்பி. காப்பிக்கு ஒண்ணார் ரூவா...’’ அப்போதும் ஐம்பத்தி நான்குதான் வரும். மிச்சம் சேவை வரி போலும். ‘‘ஏம்மா... நீங்க தப்பா எடுத்த பிரின்ட்டுக்கு தண்டம் நான் கட்டணுமா?’’ என்றேன். ‘‘பேப்பர் செலவு இருக்குல்லா?’’ என்றார்.

எதிரே காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கலாம். ஒருவேளை அவர்கள் வந்து தர்மம் உணர்ந்து நியாயம் வழங்கலாம். எலியின் அராஜகத்துக்கு அஞ்சி, புலியின் அராஜகத்தினுள் நுழைவதும் ஆகலாம். சொல்வார்கள், ‘மாப்பிள்ளை புடிச்ச காசு, பிள்ளை அழிக்க ஆச்சு’ என்று. இந்த அராஜகத்தை என்னவென்று சொல்ல?

கோவையில் புகழ்பெற்ற உணவு விடுதி ஒன்றில் சாம்பார் வடை சாப்பிட்டேன். மும்பையில் அதனை வடா சாம்பார் என்பார்கள். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற  நாவல் Old man and the sea-யை ‘கடலும் கிழவனும்’ என்றும், ‘கிழவனும் கடலும்’ என்றும் மொழிபெயர்த்ததைப் போல. கடைசிச் சொட்டு சாம்பாரையும் கரண்டியில் வடித்தெடுத்தபின் பார்த்தால், தட்டின் மத்திய பாகத்தில் புதிய ஒற்றை ரூபாய் நாணயம் அளவுக்கு கரிய நிறத்தில். கரண்டியால் சுரண்டினேன். ‘கரகர’வென சத்தம் வந்தது. விரலினாலும் தொட்டுப் பார்த்தேன். திருப்திப்படாமல், தம்ளரில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் ஊற்றி, அலசி, மறுபடி தம்ளரில் வடித்தபின் பார்த்தேன். துருவேதான். கடுப்புடன் எச்சில் தட்டை எடுத்துக்கொண்டு, பில்லுக்குப் பணம் வாங்குபவர் மேசை மேல் கொண்டு வைத்தேன். சாம்பார் வடைக்கு முப்பத்தைந்து ரூபாய் வாங்குகிறவர்கள். இனாமாக நாம் சாப்பிடுவதில்லை.

பதற்றமும் கோபமுமாக ‘‘என்னங்க இது?’’ என்றார். ‘‘நீங்களே பாருங்க’’ என்றேன். உற்றுப் பார்த்தவருக்குத் தெரியாமலா போகும். ‘‘சாரி சார்... மாத்தச் சொல்றேன்’’ என்றார். ஆயிற்றா? இரும்புத் துருவில் ஊறிய சாம்பாரைச் சுரண்டி எத்தனை பேர் குடித்தார்களோ? இதுபோல் எத்தனை தட்டுக்களோ? ‘எவன் கேக்கறதுக்கு இருக்கு’ என்ற அலட்சியம்தானே! உணவு விடுதி முதலாளியை பேசக் கூப்பிட்டால் சுத்தம், சுகாதாரம் என்று ஆணித்தரமாகப் பேசுவார்தானே!

மொத்த சமூகமே ஒருத்தர் மீது மற்றவர் ஈவிரக்கம் இன்றிச் செய்யும் அராஜகமாக இருக்கிறது. தன் வாசலின் குப்பையைக் கூட்டி அடுத்தவர் வாசலில் தள்ளுவதில் தொடங்குகிறது இது. பாலில் கலப்படம் செய்பவர் பிள்ளைக்கு நோய் வந்தால் மருந்தில் கலப்படம் செய்து கொடுக்கிறார். மருந்தில் கலப்படம் செய்தவர் வீடு கட்டினால் வீடு கட்டும் ஒப்பந்தக்காரர் கலப்படம் செய்கிறார். ஒப்பந்தக்காரர் பிள்ளைகளின் கல்வியில் கல்வித் தந்தையர் கலப்படம் செய்வார். பள்ளிக்கூடம் நடத்துபவர் பிள்ளைகளின் உணவில் வியாபாரி கலப்படம் செய்வார். வியாபாரி கடையில் சுகாதாரம், எடைப் பரிசோதனை, தொழிலாளர் நலம், விற்பனை வரி என ஆய்வு செய்ய வரும் அரசு அதிகாரி அராஜகம் செய்வார். அரசு அதிகாரம் செய்யும் அலுவலர் பிள்ளைகளிடம் டாஸ்மாக் கலப்படம் செய்யும். இப்படி நீள்கிறது நமது அராஜகங்களின் தொடர்ச்சி.

‘ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே!’ என்கிறது ‘நல்வழி.’ எத்தகு பெருவாழ்வும் வீழ்ந்து போகும்! பிறகு எதற்குச் சேர்க்கிறார்கள்? கரை கடந்த புன்செல்வம். எத்தனை நீதி நூல்கள், சமய நூல்கள், ஆலய வழிபாடுகள், குலசாமிக்குப் பொங்கல், கடாவெட்டு? எதுவுமே உறைக்காதா மனதுக்கு?

ஒளவையாரின் தனிப் பாடல் ஒன்று பேசுகிறது, ‘எண்ணாயிரத் தாண்டு நீரில் கிடந்தாலும் உண்ணீரம் பற்றாக் கிடையே போல்’ என்று. ‘எட்டாயிரம் ஆண்டு தண்ணீரில் கிடந்தாலும், உள்ளே ஈரம் பற்றாது கிடக்கும் பொருள் போல’ என்று பொருள். சமூகத்துக்கு எதிராக அராஜகம் செய்து ஆயிரம் கோடிகள் ஈட்டி, பத்து கோடி தர்மம் செய்து கணக்கை நேர் செய்துவிடலாம் என்று நம்புகிறார்களே! சமகால வள்ளல்களும் ஆகிவிடுகிறார்களே ஐயா!

‘அறிந்தும் அறியாதவர் போல் நடித்து, சமூகத்துக்கு அராஜகம் செய்து வாழ்வோர் சிறக்கத்தானே செய்கிறார்கள்’ என்று கேட்கிறார்கள் சிலர். எதுவும் பயனற்றுப் போவதில்லை, நல்வினையும் தீவினையும்! அவசரப்பட்டு ஐந்ெதாகை  போடாதீர்கள்! இன்றில்லாவிட்டால், நாளை தீர்ப்பு வரும். கண்ணிலும், கையிலும், சிரிப்பிலும், மெய்யிலும் தீத்தான் வைத்துக்கொண்டு இருக்கும் கடவுளை வழிபட்டால் போதும், தாம் செய்யும் வஞ்சகம், சூது, துரோகம், எல்லாவற்றையும் கண்டும் காணாமலும் இருந்து விடுவான் என நம்புவது எத்தனை பெரிய அறியாமை. நக்கீரன் கேட்டான், ‘சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?’ என்று. அவர் சொன்ன சங்கு கடலில் விளையும் சங்கு. அராஜகவாதிகள் அறுப்பது கழுத்து எனப் பொருள்படும் சங்கு.

ஒருகாலத்தில் போலீஸ் ஸ்டேஷன் நுழைவதே மக்களுக்கு மானப் பிரச்னை. இன்று அதை எந்த அரசு அலுவலகத்துக்கும் பொருத்திப்
பார்க்கலாம்.

காசு நிறையக் கொடுத்தால் தஞ்சை  பெரிய கோயிலை, குற்றால அருவியைக் கூட பட்டா போட்டு வாங்கலாம். ஆனால்,  அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருந்தாலும் ரேஷன் கார்டு வாங்க இயலாது.

எந்த அரசு அலுவலகத்திலும், நியாயமானதோர்  கோரிக்கையுடன் ஒரு அலுவலர் மேசை முன் போய் நின்றால், அவர் உம்மை  நிமிர்ந்து பார்க்க இருபது நிமிடங்கள் ஆகும்.

 
அறிந்தும் அறியாதவர் போல் நடித்து,  சமூகத்துக்கு அராஜகம் செய்து வாழ்வோர் சிறக்கத்தானே செய்கிறார்கள் என்று  கேட்கிறார்கள் சிலர். எதுவும் பயனற்றுப் போவதில்லை, நல்வினையும் தீவினையும்!

- கற்போம்...