குடும்பம்



கே.என்.எஸ்.மணியன்

தீபக்... என்னடா சொல்றே? என்னைப் பிரிஞ்சு போகப் போறியா? வேற யாரையாவது கல்யாணம் செய்துக்குற ஐடியாவா? துரோகி’’ என ஆத்திரப்பட்டாள் புவனா.

‘‘இல்லை புவனா... எனக்கு வேலை போயிடுச்சு. இப்போ நான் வேலையில்லாத உதவாக்கரை. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில நம்ம காதல் வளர்ந்துடுச்சு. உன்னைப் பிரிஞ்சிருக்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா, வருமானமில்லாத நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் சம்பளத்துலதான் என் வீட்டுல இருக்குற ரெண்டு ஜீவன்களை காப்பாத்தணும்!’’ - தீபக் தலைகுனிந்தபடி சொன்னான்.



‘‘சே, இதுக்குப் போயா பிரியணும்னு சொன்னே? நீ வேற, நான் வேறயாடா? ஏன்டா இப்படிப் பிரிச்சுப் பார்க்கறே? உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் உன் குடும்பத்தை நான் காப்பாத்த மாட்டேனா?’’

‘‘ப்ச்... அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது!’’

‘‘ஏன், தீபக்? நான் வேணும்னா உங்க அப்பா அம்மாகிட்ட வந்து பேசட்டுமா?’’

‘‘இங்கதான் தப்பு நடந்து போச்சு புவனா. எங்க வீட்ல இருக்குற ரெண்டு பேரை என் அப்பா, அம்மானு நீ நினைச்சிக்கிட்டு இருக்குறே. அது, என் மனைவியும் குழந்தையும். அந்த உண்மையை இனிமேலும் நான் மறைக்க முடியாது!’’