புதுமனை



வெ.இளங்கோ

தான் புதுசாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டிற்கு அவசர அவசரமாய் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்தான் சுகுமார். இன்னும் வீட்டு வேலைகள் முழுமையாய் முடியவில்லை. அதற்குள் கிரகப்பிரவேசமா? அந்தத் தெரு மக்களுக்கே இது ஆச்சரியமாய்த்தான் இருந்தது.

‘‘ஏங்க... இப்ப கிரகப்பிரவேசத்துக்கு என்ன அவசரம்?’’ எனக் கேட்டாள் மனைவி சுமதி. ‘‘பின்னாடி சொல்றேன்’’ எனச் சொல்லி வைத்தான் சுகுமார்.



மங்கள இசை ஒலிக்க, பசுவும் கன்றும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துச் செல்ல, உறவினர்கள் வந்து சேர்ந்தார்கள். வீட்டைச் சுற்றி வந்த நண்பர்களும் உறவினர்களும் ஆளாளுக்கு தங்களுக்குத் தெரிந்த யோசனைகளைச் சொன்னார்கள். எல்ேலாரும் போன பிறகு மனைவியிடம் பேசினான் சுகுமார்.

‘‘ஏன் வீட்டை கம்ப்ளீட் பண்ணாம கிரகப்பிரவேசம் வச்சீங்கனு கேட்டியே... இப்பப் பாரு, ஆளாளுக்கு எத்தனை விதமான யோசனைகள் சொல்லியிருக்காங்கன்னு. முழுசா கட்டி முடிச்சிருந்தாலும் ‘இப்படிக் கட்டியிருக்கலாமே’னு இவங்க யோசனை சொல்லத்தான் செய்வாங்க. ‘அடடா, செய்யாம விட்டுட்டோமே’னு நமக்கு மனசு அடிச்சிக்கும். இப்ப பிரச்னையே இல்ல. இவங்க சொன்ன அட்வைஸ்ல நல்லதை எடுத்துக்கிட்டு அதன்படி செய்யலாலாம். இதனாலதான் கிரகப் பிரவேசத்தை முன்கூட்டியே நடத்தினேன்!’’ என்றான் சுகுமார். அதில் உள்ள நியாயம் புரிந்தது சுமதிக்கு.