சென்னை மழைக்குக் காரணமாக இருந்த குழந்தை!



எல் நினோ விளைவு

எல் நினோ - சென்னையை மூழ்கடித்துச் சூறையாடிய கனமழைக்குக் காரணகர்த்தாவான குற்றவாளியாக பயத்தோடு செய்திகளிலும், கலவரத்தோடு வதந்திகளிலும் குறிப்பிடப்படும் பெயர் இதுதான். ஆறுகளைக் குறுக்கி கட்டிடங்களை எழுப்பியது, ஏரிகளைத் தூர்த்து வீடுகள் கட்டியது, மழைநீர் கால்வாய்களை பராமரிக்க மறந்தது என நம் தவறுகளைத் தாண்டி இயற்கையைக் குற்றம் சொல்ல ஒரு காரணமாக ‘எல் நினோ’ கிடைத்திருக்கிறது. இயற்கையை மனிதர்கள் சிதைத்தால், இயற்கை திருப்பி அடிக்கும் என்பதற்கு ஆதாரமாக எல் நினோ விளைவைச் சொல்கிறார்கள், இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

‘கடந்த 135 ஆண்டுகளில் நிகழ்ந்த எந்த எல் நினோவையும் விட அதிபயங்கர சக்தி கொண்டதாக இந்த 2015ம் ஆண்டின் எல் நினோ இருக்கிறது’ என அச்சத்தோடு குறிப்பிடுகிறது, ‘நியூ சயின்டிஸ்ட்’ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று. இதுவரை நிகழ்ந்ததிலேயே மிக மோசமான எல் நினோ என கடந்த 97-98ம் ஆண்டில் வந்ததைக் குறிப்பிடுகிறார்கள். உலகெங்கும் பயங்கர வெள்ளம், மோசமான வறட்சி, சூறாவளிகள், காட்டுத்தீ, மலைகளில் மண்சரிவுகள் என ஏராளமான பேரழிவுகளை நிகழ்த்தி 20 ஆயிரம் மக்களை சாகடித்து, 6 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்புகளை ஏற்படுத்தியது அந்த எல் நினோ. அதைவிட பல மடங்கு பயங்கரமானதாக இந்த ஆண்டு எல் நினோவைச் சொல்கிறார்கள்.

அது என்ன எல் நினோ? ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேஷியா கடல்பகுதிகளில் இயல்பை விட சற்றே சூடாக மாறும் கடல்நீர், அங்கிருந்து அப்படியே நகர்ந்து அமெரிக்க கடல் பகுதிக்குப் போகும். அப்படிப் போகும்போது தன்னோடு மழையையும் கொண்டு போய் விடும். இப்படி மத்திய பசிபிக் கடலில் ஏற்படும் லேசான வெப்பநிலை மாற்றம்கூட உலகின் ஏதோ ஒரு மூலையில் பெரும் விளைவை ஏற்படுத்தும். இது பொதுவாக கிறிஸ்துமஸ் நேரத்தில் நிகழும் என்பதால் இதற்கு ‘எல் நினோ’ என ஸ்பானிஷ் மொழியில் பெயர் வைத்தார்கள். ‘குழந்தை கிறிஸ்து’ என அர்த்தம். பெயர் வைத்தவர்கள், பெரு நாட்டு மீனவர்கள்.

எல் நினோ எல்லா ஆண்டு களிலும் ஏற்படாது. இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். அதன் விளைவுகள் குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கோ, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கோ தொடரும். கொஞ்சம் துடுக்கான குழந்தை வீட்டில் எல்லா பொருட்களையும் கலைத்துப்போட்டு விளையாடி கலவரம் ஏற்படுத்துமே, அந்த மாதிரிக் குழந்தை இந்த எல் நினோ. இயல்பாகவே தகிக்கும் கோடையை இன்னும் கொளுத்த வைக்கும்; பருவமழையை பேய் மழையாகப் பெய்ய வைக்கும். இதையே உல்டாவாகவும் செய்வதுண்டு. திடீரென பெரு நாட்டு பாலைவனத்தில் மழை பெய்யும்; பிரேசிலின் செழிப்பான பகுதியில் மழையைப் பெய்ய விடாமல் தடுத்து சதி செய்யும்.

மத்திய பசிபிக் கடலில் இயல்பைவிட 0.5 டிகிரி வெப்பநிலை அதிகரித்தாலே அது எல் நினோ விளைவைத் தரும் என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது. ‘‘கடந்த 97-98 எல் நினோவின்போது இங்கு இயல்பைவிட 2.8 டிகிரி அதிக வெப்பநிலை இருந்தது. இப்போது நவம்பர் இறுதிக்குள்ளாகவே 3.1 டிகிரி அதிகமாகிவிட்டது. அதுதான் பயங்கர விளைவுகளைத் தந்தது’’ என்கிறார்கள் வானிலை நிபுணர்கள். இந்தியாவை எல் நினோ எப்படி பாதிக்கிறது? மூன்று விதமான பாதிப்புகள் இந்தியாவுக்கு ஏற்படுவதாக சொல்கிறார்கள் நிபுணர்கள். முதல் விளைவு... இந்தியாவின் கோடைக்காலத்தை இது மிகக் கொடுமை ஆக்குகிறது. ‘கடந்த 136 ஆண்டுகளில் மிக வெப்பமான ஆண்டு இந்த 2015தான்’ என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் சொல்கிறது. அதற்குக் காரணம், எல் நினோ. வட இந்தியாவிலும் ஆந்திராவிலும் பல பகுதிகளில் வெப்பம் கொளுத்தியதில் இந்த ஆண்டு சுமார் ஆயிரம் பேர் இந்தியா முழுக்க அனலுக்கு பலியானார்கள்.



இரண்டாவது விளைவு... தென்மேற்குப் பருவமழையை இது பெய்ய விடாமல் தடுக்கிறது. வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் தென்மேற்குப் பருவமழையே ஜீவன். பசிபிக் கடலில் வெப்பநிலை உயரும்போது, இந்தியாவின் நிலப்பரப்புக்கு மேலே உருவாகும் ஈரக்காற்றை அது ஈர்த்து வெளியே இழுக்கிறது. அதனால் இங்கு மழை பொய்க்கிறது. இந்த ஆண்டும் நமக்கு அந்தப் பருவமழை பொய்த்தது. எல் நினோவின் விளைவுகள் கடுமையாக இருக்கும் பல ஆண்டுகளில் தென்மேற்குப் பருவமழை பொய்த்திருக்கிறது. மூன்றாவது விளைவு... வடகிழக்குப் பருவமழையை வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்ய வைப்பது! இதேபோல எல் நினோ கடுமையாக இருந்த கடந்த 97ம் ஆண்டிலும் பருவமழைக்கு தமிழகம் தடுமாறித் தவித்தது.

பொதுவாகவே வடகிழக்குப் பருவமழையின்போது வங்காள விரிகுடாவில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வுநிலைகள் ஏற்படும். இவற்றின் நகர்வே மழையைத் தீர்மானிக்கிறது. ‘‘இந்தப் பருவமழை சீஸனுக்கு முன்பும் சீஸனிலும் இங்கு இப்படி தாழ்வுநிலைகளும் புயல்களும் உருவாகும். சாதாரண ஆண்டுகளில் அவை கிழக்கு நோக்கி நகரும். எல் நினோ விளைவுள்ள ஆண்டுகளில் அவை மேற்கு நோக்கி நகர்கின்றன. இந்த ஆண்டு சென்னையிலும் தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் கடும் மழை பெய்ய இதுவே காரணம்’’ என்கிறார், இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவர் டி.சிவானந்த பாய்.

‘‘வழக்கமாக இந்த சீஸனில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலைகளும் புயல்களும் ஆந்திராவை நோக்கி நகர்ந்து போகும். வடக்கு ஆந்திராவிலும் ஒடிஷாவிலும்தான் அவற்றின் தாக்கமும் அழிவும் அதிகமாக இருக்கும். இம்முறை இப்படி இல்லாமல் மழையின் விளைவுகள் தமிழகத்தை நோக்கி நகர்ந்ததற்கு எல் நினோவே காரணம்’’ என்கிறார், தனியார் வானிலை ஆராய்ச்சி நிலையமான ‘ஸ்கைமெட் வெதர்’ அமைப்பின் தலைவர் மகேஷ் பலாவட்.

தமிழக மழை மீதான எல் நினோ விளைவுகளை மறுப்பவர்களும் உண்டு. ‘‘எல் நினோ இல்லாத காலத்திலும் தமிழகத்தில் கனமழை பெய்திருக்கிறது. 2005ம் ஆண்டு தமிழகத்தைப் புரட்டிப் போட்டது மழை. அது எல் நினோ ஆண்டு இல்லை’’ என்கிறார் சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ராஜ்.

எல் நினோவின் விளைவுகள் இந்த மழையோடு முடிவதில்லை. மழைச் சேதம், அதனால் பல்லாயிரம் குடும்பங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளையும் தாண்டி, உணவு உற்பத்தியையும் குறைத்து பொருளாதாரத்தை பாதிக்கும் அது. இந்த எல் நினோவின் மேலும் சில விளைவுகளாக நிபுணர்கள் சொல்வது: 1. பிரேசிலில் தவறான பருவத்தில் மழை பெய்து கரும்பு உற்பத்தியை எல் நினோ அழித்துவிட்டது. எனவே சர்க்கரை விலை கொஞ்சம் கொஞ்சமாக உலகெங்கும் உயரும். 2. வட இந்தியாவில் கோதுமையும் தமிழகத்திலும் ஆந்திராவிலும் நெல்லும் முறையாக விளைய விடாமல் எல் நினோ தடுத்துவிட்டதால் விரைவில் கோதுமை, அரிசி விலை உயரும். 3. எல் நினோவின் தொடர்விளைவாக பனிக்காலத்தில் வெப்பநிலை சீக்கிரமே உயரும். வரும் பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் கொளுத்தத் தொடங்கும். எனவே, அடுத்த கோடைக்காலம் சீக்கிரமே தொடங்கிவிடும். இயற்கைக்கு இன்னல் விளைவிக்காமல் வாழ்வதைத் தவிர இதற்கு வேறு பரிகாரம் இல்லை!

"வழக்கமாக வடக்கு ஆந்திராவிலும் ஒடிஷாவிலும்தான் மழையின் தாக்கமும் அழிவும் அதிகமாக இருக்கும். இம்முறை இப்படி இல்லாமல் மழையின் விளைவுகள் தமிழகத்தை நோக்கி நகர்ந்ததற்கு எல் நினோவே காரணம்!"

- அகஸ்டஸ்