காளான் வளர்த்தால் காசு குவிக்கலாம்!



சுலபமாக செய்யலாம் சுயதொழில்

சுயமாக தொழில் செய்து முன்னேற நினைப்பவர்களுக்கு உடனடியாக உதவக் கூடியவை சிறுதொழில்கள்தான். இப்படி சிறு தொழில் ஆரம்பித்தவர்கள், தங்களது கடும் உழைப்பால் உயர்ந்து பெரிய தொழிலதிபரான முன்மாதிரிகள் இங்கு ஏராளம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சலுகைகளையும் உதவிகளையும் வழங்குகின்றன.

‘‘காளான் `வளர்ப்பு, சுயதொழில் முனைவோருக்கான நல்ல தேர்வு. சிப்பிக் காளான் வளர்த்து வருமானத்தைப் பெருக்குவதோடு, வாழ்வில் வளமும் பெறலாம்’’ என்று சொல்கிறார் ‘சிப்பி ஃபுட்ஸ் பயிற்சி மைய’த்தை நடத்தி வரும் வி.கிருஷ்ணசாமி. இதன் வழிமுறைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

‘‘இப்போது காளான் பெரும்பாலானோரின் விருப்ப உணவாகி உள்ளது. காரணம், அது அசைவ உணவுக்கு நிகரான சுவையைத் தருகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் என சத்துகளும் அதிகம். உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இதை மருத்துவர்களும் சிபாரிசு செய்கிறார்கள். இதன் முக்கியமான மருத்துவ குணம், சர்க்கரை நோயையும் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும்.

சிப்பிக் காளான் வளர்ப்புக்கு குறிப்பிட்ட பருவம், கால அளவு எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வளர்க்கலாம். மிகவும் எளிது. நம் வீட்டிலேயே கொஞ்சம் இடம் இருந்தால் போதும். காளான்களில் ஏராளமான வகைகள் உள்ளன. இருந்தாலும் நம் நாட்டின் காலநிலைக்கு உகந்த, அதிக பயன்பாட்டில் உள்ள ரகங்களாக சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக் காளான் ஆகிய மூன்றும் உள்ளன.

சிப்பிக் காளான் வளர்ப்புக்கு கூரை வேய்ந்த சாதாரண வீடு போதும். அது 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருக்க வேண்டும். இதில் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறை. மற்றொன்று காளான் வளர்க்க. வளர்ப்பு அறையின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை 25-30 செல்சியஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் வெளிச்சமும் நல்ல காற்றோட்டமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பம் கூடாது.

காளான் வித்து உருவாக்க மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருட்களாகப் பயன்படுகின்றன. இந்த தானியங்களை அரை வேக்காடு வேக வைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2 சதவீதம் சுண்ணாம்பும் கலந்து காலி குளுக்கோஸ் பாட்டில்களில் நிரப்ப வேண்டும். தண்ணீர் உறிஞ்சாத பஞ்சினால் பாட்டிலின் வாயை அடைக்க வேண்டும். அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணி நேரம் வேக வைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்பநிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும். பிறகு, 15 முதல் 18 நாட்கள் வயதுடைய காளான் வித்துகளை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வித்து தயாரிப்பதை சிரமமாக நினைப்பவர்களுக்காக காளான் வித்துகள் சந்தையில் விலைக்கு கிடைக்கிறது. தரமான வித்துகளை வாங்கி உபயோகிக்கலாம்.

 காளான் வளர்ப்பதற்கான பாக்கெட்டுகளை காளான் படுக்கை என்பார்கள். இந்த காளான் படுக்கைகளை அமைக்க தகுந்த பொருட்கள் கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கதிர் மற்றும் வைக்கோல் போன்றவையே.

முழு வைக்கோலை 5 செ.மீ. நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். சுமார் 65 சதவீத ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60X30 செ.மீ அளவுள்ள, இருபக்கமும் திறந்த பாலித்தீன் பைகளைப் பயன்படுத்த வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும். பாலித்தீன் பைக்குள் வைக்கோலை வைத்து நன்கு அழுத்தி, பின்பு காளான் வித்தைத் தூவ வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து அல்லது நான்கு முறை செய்யவேண்டும். பிறகு பையை நன்றாக ரப்பர் பேண்டால் இறுக்கிக் கட்டி விட வேண்டும். இந்தப் பைகளை குடிலினுள் உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடலாம்; அல்லது ரேக்குகளில் அடுக்கி
வைக்கலாம்.

விதைத்த பதினைந்து, இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம். பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும். தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான் படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம். 23 நாட்களில் காளான் முழு வளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம்.

முதல் அறுவடைக்குப் பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுக்கையை லேசாகச் சுரண்டி விடலாம்; அல்லது பாலித்தீன் பைகளில் நான்கைந்து துளைகளைக் கூடுதலாக இடலாம். ஒவ்வொரு படுக்கையிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம். ஒவ்வொரு பையிலிருந்தும் 900 கிராம் வரை காளான்கள் கிடைக்கும். சூப்பர் மார்க்கெட், காய்கறி கடைகளில் ஒரு கிலோ காளானுக்கு ரூ.100 ரூபாய் வரை தரத் தயாராக இருக்கிறார்கள். ஹோட்டல்களில் காளான்களின் தேவை அதிகம்.

அறுவடை செய்த காளான்களை ஒருநாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர் பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் தாங்கும். நாங்களே காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி தருகிறோம். இதற்கான கட்டணம் ரூ.500. பயிற்சியோடு மூலப்பொருட்களையும் தருகிறோம். மார்க்கெட்டிங் செய்வதற்கான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறோம்.

செலவும் மூலதனமும் மிகக் குறைவாக இருப்பதால் காளான் வளர்ப்பு இல்லத்தரசிகளுக்கும் ஏற்ற தொழில். வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு பார்ட் டைம் ஜாப். இதில் சுலபமாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்’’ என்கிறார் கிருஷ்ணசாமி.

 எம்.நாகமணி

படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்