படிக்கலாம் எழுதலாம் தகவல் அறியலாம்



ஆசிரியர்களின் தகவல் சுரங்கம் www.testfnagai.blogspot.in

‘‘ஆசிரியர்களை விட மாணவர்கள் இப்போ அப்டேட்டடா இருக்காங்க. பணிச்சுமை காரணமா, ஆசிரியர்கள் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியல. அவங்க கண்ணுக்கு நெருக்கமா செய்திகளையும் அரசாணைகளையும் அறிவிப்புகளையும் கொண்டு போய் சேர்க்கணும். அதுக்காக தொடங்கப்பட்டதுதான் www.testfnagai.blogspot.in இணையதளம். எங்க மாவட்ட ஆசிரியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த இணையதளம் இன்னைக்கு தமிழகம் முழுதும் ஏராளமான ஆசிரியர்களுக்குப் பயன்படுது...’’ என்று பெருமிதமாகச் சொல்கிறார் பாலசண்முகம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடத்தப்படும் இந்த இணையதளத்தை நிர்வகிக்கும் பாலசண்முகம், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். www.testfnagai.blogspot.in ஆசிரியர்களுக்கான தகவல் சுரங்கமாக இருக்கிறது. தினந்தோறும் நாளிதழ்களில் வெளிவரும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகள், ஆசிரியர்களுக்கு உபயோகமான செய்திகள், கல்வி குறித்த தலையங்கங்கள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றுகிறார்கள். தவிர தமிழகத்தின் பிரதான இணைய இதழ்கள் மற்றும் இ-பேப்பர் செய்திகளும் இந்த தளத்தில் அப்டேட் ஆகின்றன.

 மாவட்ட அளவில் பள்ளிகளில் நடக்கும் விழாக்கள், ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அதிகாரிகள் பற்றிய குறிப்புகள், ஆசிரியர் வீடுகளில் நடக்கும் விழாக்கள் பற்றிய தகவல்களும் அழகாக லே-அவுட் செய்யப்பட்டு இடம் பெறுகின்றன. ஆசிரியர்கள் தங்கள் ஆங்கிலத்திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக எளிமையான பாடங்களும் அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளன. வரலாறு, அறிவியல் சார்ந்த செய்திகள், படங்களும் இதற்குள் குவிந்து கிடக்கின்றன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு உள்பட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்றல் சாராத பணிகளுக்கான கையேடுகளும், விண்ணப்பங்களும் கூட இணைக்கப்பட்டுள்ளன. பதவி உயர்வுத் திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், பள்ளிக் கல்வித்துறையின் நாட்காட்டியையும் பார்க்கலாம். “ஒரு ஆசிரியர் தன்னோட பணிச்சூழலுக்கு மத்தியில் எல்லா செய்தித்தாள்களையும் வாசிக்க முடியாது. பள்ளிக்குள் நுழைந்துவிட்டால் அது தான் உலகம்.

அதிலும், உள்ளடங்கிய கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகவல்கள் சரியான நேரத்தில் சென்றடைவதில்லை. செய்திகளையும், கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளையும் அனைவரின் கவனத்துக்கும் தகுந்த நேரத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகத்தான் இந்த இணையதளத்தைத் தொடங்கினோம். ஆண்ட்ராய்டு போன் சாதாரணமாகி விட்டதால் நாங்கள் நினைத்த இலக்கை இப்போது எட்டியிருக்கிறோம் என்கிறார் பாலசண்முகம்.

இந்த இணையதளத்தில் ஆசிரியர்கள் தங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் அன்றாட நிகழ்வுகள், அறிவிப்புகள், ஆணைகளை எஸ்எம்எஸ் ஆக அனுப்பும் வசதியையும் இணைத்திருக்கிறார்கள். தினமொரு திருக்குறள், நாளொரு பொன்மொழியும் பதிவேற்றப்படுகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வினாத்தொகுப்பு, விடைத் தொகுப்பு, தேர்வு பற்றிய செய்திகளுக்கு தனிப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் இருந்தபடியே கல்வி தொடர்பான சர்வதேச இணையதளங்களையும் திறக்க முடிகிறது. ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கும் 'லிங்க்' கொடுத்துள்ளார்கள். இதுதவிர ஆசிரியர்களின் இணைய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு பயிற்சி ஏற்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. பிற ஆசிரியர் இயக்கங்களின் இணையதளத்தையும் இங்கிருந்தபடி திறக்கலாம்.

“நாகை மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளும் பிற ஆசிரியர்களும் பல்வேறு வகைகளில் இந்த இணையதளத்துக்கு தங்கள் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.

தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை இணையதளத்தைக் கையாள்கிறேன். கற்பித்தலை இனிமையாக்கும் வகையில் பாடத் திட்டங்களை அனிமேஷன் செய்து பதிவேற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறோம். ஆசிரியர்களுக்கு புத்துணர்வு ஊட்டி அன்றன்றைக்கான வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் செய்திகளையும் அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது எங்கள் இணையதளம்’’ என்கிறார் பாலசண்முகம்.  www.testfnagai.blogspot.in இணைய தளம் ஆசிரியர்களுக்கான பரந்த உலகத்தை ஒரு திரைக்குள் சுருக்கி வைத்திருக்கிறது.

- வெ.நீலகண்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்