வேண்டாம் வெயிட்டேஜ் முறை!



ஒன்றல்ல... இரண்டல்ல... 15 நாட்கள்! ஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு, உறக்கம் இன்றி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்துகிறார்கள் ஆசிரியர்கள்.

 ‘சாவதைத் தவிர வேறு வழியே இல்லை’ - என கண்ணீரும் கதறலுமாக நடக்கும் போராட்டத்தின் நடுவே நான்கு பேர் விஷம் குடித்தது, பெரும் பரபரப்பு! இப்போது, ஆறுதலாக பணி நியமனத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு வந்திருந்தாலும், ‘நிரந்தரத் தீர்வு’ வேண்டி போராட்டம் நிற்காமல் தொடர்கிறது.

‘‘இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க முதல் தாள், இரண்டாம் தாள்னு இரண்டு தேர்வுகள். ஒவ்வொன்றும் 150 மார்க். ஆனா, இதை வச்சு மட்டும் பணியிடங்களை நிரப்பறதில்ல. இதை 60க்கு மாத்திட்டு, மீதி 40 மார்க்கை ஸ்கூல், காலேஜ், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில வாங்கின மார்க்கோடு சேர்த்து வெயிட்டேஜ் பார்க்கிறாங்க. இதுலதான் எங்களுக்கு பிரச்னையே!’’ எனக் கொதிப்பாகப் பேசுகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலிங்கம். அவரைத் தொடர்கிறார் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருக்கும் கபிலன். 

‘‘நாங்க எல்லாருமே சாதாரண கிராமப்புறத்துல இருந்து வந்தவங்க. அரசு கல்வி நிறுவனங்கள்ல படிச்சவங்க. முதல் தலைமுறை பட்டதாரிங்க. நாங்க படிக்கும் போது இன்டர்னல் மார்க்கே கிடையாது. இப்ப மாதிரி அப்ப மார்க்கை வாரி வழங்கவும் மாட்டாங்க. இதனால, எல்லோருமே டென்த், ப்ளஸ் டூவுல சுமாரான மார்க்தான். தகுதித் தேர்வுல எங்களை விட குறைவான மார்க் வாங்கின இப்பவுள்ள பசங்க எல்லாம், ஸ்கூல், காலேஜ் மார்க் வெயிட்டேஜை வச்சு உள்ளே வந்துடுறாங்க. இந்த வெயிட்டேஜ் முறை இருந்தா, எந்தக் காலத்துலயும் எங்களால அரசு ஆசிரியர் பணிக்கு வரவே முடியாது’’ என்கிறார் அவர் விரக்தியான குரலில்!

போராட்டக் களத்தில் நிற்கும் பலரின் கதையும் சோகம் நிறைந்தது. ஓசூரைச் சேர்ந்த ஆண்டாள் அதில் ஒருவர். ‘‘முதல்ல, தகுதித் தேர்வுல 90 மார்க் எடுத்தா பாஸ்னு இருந்துச்சு. அதுல பாஸாகி, எங்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்துச்சு. வேலை கிடைச்சுடும்னு அப்ப நம்பிக்கையோட இருந்தோம். அப்புறமா, 82 மார்க் எடுத்தாலே பாஸ்னு அரசு அறிவிச்சுது. இதனால, ஃபெயிலான நிறைய பேர் உள்ளே வந்தாங்க.

தகுதித் தேர்வுல நான் முதல் பேப்பர்ல 110, இரண்டாம் பேப்பர்ல 98 மார்க் வாங்கியிருக்கேன். ஆனா, 88 மார்க் வாங்கினவருக்கு வேலை கிடைச்சிருக்கு. 22 வருஷமா ஆசிரியர் வேலை கனவோட இருந்தேன் சார். இப்ப, எல்லாம் போச்சு. நாங்க, ஃபெயிலாகிட்டு வந்து போராட்டம் நடத்தல. பாஸாகியும் வேலையில்லனுதான் போராடுறோம். தயவு செய்து அரசு எங்களைப் புரிஞ்சுக்கிட்டு ஒரு நல்ல தீர்வு சொல்லணும்!’’உறுதியும் உருக்கமுமாகப் பேசி அமர்கிறார்கள் அவர்கள். டி.பி.ஐ வளாகம், வழக்கமான வேலைகளில் மூழ்கியிருக்கிறது.

கதறும் ஆசிரியர்கள்

பேராச்சி கண்ணன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்