இலவசமாக புத்தகங்களை அள்ளித்தரும் http://books.tamilcube.com.



தகவல் தொழில்நுட்பம் ஏகப்பட்ட அசாத்தியங்களை சாத்தியமாக்கி விட்டது. எழுத்து, வாசிப்பு, அச்சு என எல்லா வேலைகளையும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றி விட்டது. ஒரு அறைக்குள் அடக்க முடியாத நூல்களை நகத்தளவு உள்ள ஒரு சிப் நிரப்பிக் கொண்டு விடுகிறது. கடந்த நான்காண்டுகளில் இ-புத்தகங்கள், இணைய இதழ்கள் வாசிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாக நாஸ்காம் தெரிவிக்கிறது.
இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாசிக்க வசதியான உபகரணங்களும் மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. சில ஆயிரங்களில் வசதியான ரீடர்கள் கிடைக்கின்றன. மடங்கி, கசங்கி, கிழிந்துவிடும் புத்தகங்களை, பக்குவப்படுத்தி, அழிக்கவே முடியாத இணைய வெளியில் விதைக்கும் பணியில் ஏராளமான இளைஞர்கள் தன்னார்வமாக செயல்பட்டு வருகிறார்கள். புத்தகங்களை வாசிப்பதை இருண்மையாக கருதுபவர்களுக்கு இணையம் தன் ஒளிர் திரையில் அதை காட்சியாக்கி வசப்படுத்துகிறது.

நூல்களை அடுக்குவதற்கு அறை ஒதுக்கிய காலம் போய் கம்ப்யூட்டரில் ஒரு ஃபோல்டருக்குள் அடுக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் சுருக்கித் தந்து விட்டது. இ-புத்தகங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் ஏராளம் வந்து விட்டன. அதேநேரம், பல இணைய தளங்கள் பயனுள்ள பல புத்தகங்களை இ-புத்தகங்களாக மாற்றி இலவசமாக பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் பிரதானமானது http://books.tamilcube.com.

திருக்குறள், அபிராமி அந்தாதி, கொன்றை வேந்தன் தொடங்கி, அரசுடமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், அண்மைக்கால படைப்பாளிகளின் படைப்புகள் வரை அனைத்தும் இங்கே கிடைக்கின்றன. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தின் (ப்ராஜெக்ட் மதுரை) இணைப்பின் மூலம் அனைத்து புத்தகங்களையும் பி.டி.எஃப் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். தமிழ் பாடநூல்களையும் நிறைத்து வைத்திருக்கிறார்கள். இந்த இணையத்திலேயே பயிற்சிகளையும் செய்து பார்க்க முடியும். சமஸ்கிருதம், இந்தி, மராத்தி நூல்களும் ஏராளம் இருக்கின்றன. மொபைல், இ-ரீடர் என பிற உபகரணங்களிலும் இறக்கம் செய்து வாசிக்கும் வகையில் பக்கத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட 12 மொழிகளுக்கான டிக்ஷனரிகளும் வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் அடித்தால் பிற மொழிகளில் மாற்றம் செய்து தரும் வசதியும் உண்டு. மொழிமாற்றம் செய்தும் வாசிக்கலாம். குழந்தைகளின் அறிவை விசாலமாக்கும் வகையில் பொது அறிவு சார்ந்த ஆயிரக்கணக்கான கேள்வி - பதில்களின் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. அறிவியல், சமூக அறிவியல், புவியியல், அரசியல், கம்ப்யூட்டர் என பல்வேறு துறைகள் சார்ந்த கேள்வி, பதில் தொகுப்புகள் போட்டித் தேர்வுகளுக்கு பயனளிக்கும். மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள், சிவில் சர்வீஸ், உயர்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான வழிகாட்டி கட்டுரைகளும் இருக்கின்றன.  குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தங்கள் அறிவையும் வாசிப்பையும் விசாலப்படுத்திக் கொள்ள http://books.tamilcube.com இணையதளத்தைத் திறக்கலாம்.

- வெ.நீலகண்டன்