சுலபமாக செய்யலாம் சுயதொழில்



மதிப்பும் கூடுது... மகிழ்ச்சியும் கூடுது!

- இறைச்சிப் பொருட்கள் தரும் இரட்டிப்பு லாபம்

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.tanuvas.ac.in என்ற இணைய தளத்தில் ‘DDE  Announcements’ என்பதை கிளிக் செய்து, விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைப் பயிற்சிக் கட்டணத்திற்கு (ரூ.1000)

டி.டி எடுத்து இணைத்து, முனைவர் தே.தியாகராஜன், இயக்குனர் ‘தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை  மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-51’ என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

நம்மில் எத்தனையோ இனம், மதம் என வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், உணவு என்று வந்து விட்டால் உலகம் முழுக்க இரண்டே இனம்தான்... சைவம் மற்றும் அசைவம். பின்னதாகச் சொல்லப்பட்டாலும் இதில் அசைவம்தான் மெஜாரிட்டி. தமிழகத்தைப் பொறுத்தவரை நம் கலாசார வேர்களில் அசைவ உணவுகள் கலந்துள்ளன. இதனால்தான் ‘மதிப்பூட்டிய இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு’ என்ற பெயரைக் கேட்டதும் நமக்கே இதிலோர் ஆர்வம் பிறக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம்தான் இப்படியொரு சான்றிதழ் படிப்பை நடத்துகிறது. எதிர்காலம் உள்ள படிப்பாகவும் இதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.


‘‘இந்தியா கால்நடைகளை அதிகம் கொண்ட நாடுதான். இருந்தாலும் இறைச்சி உற்பத்தியில் மிகவும் பின்தங்கியே உள்ளது. காரணம், நவீன மயமாகாதது. தற்பொழுது நம் நாட்டில் 3000க்கும் மேற்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட கால்நடை அறுவைக் கூடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை நவீனமயமாக்கப்படாமல் இருப்பதால் இறைச்சியைத் தவிர மற்ற பொருட்கள் வீணாக்கப்படுகின்றன. இப்படி வீணாகும் பொருட்களை அறிவியல் முறைப்படி பதப்படுத்துவதால்... பயன்படுத்துவதால்... வேலைவாய்ப்பும் உருவாகும். சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதும் தடுக்கப்படும்!’’ என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குனர் தியாகராஜன். மேலும் இந்தப் படிப்பு குறித்து அவரே விளக்குகிறார்...

‘‘கோழி, காடை போன்ற பறவையினங்கள், மீன் இனங்கள் என அசைவ மெனுவில் நிறைய உண்டு. ஆனால், பெரிய விலங்குகளான ஆடு, மாடு மற்றும் பன்றிகளின் இறைச்சி உற்பத்திதான் உலக அளவில் முதன்மையானது. பொதுவாக ஒரு விலங்கின் தசையைத்தான் இறைச்சி என்கிறோம். ஆனால், விலங்குகளின் சுரப்பிகள் மற்றும் உறுப்புகளும் மதிப்புள்ளவைதான். அவற்றில் இருந்து பல உயிரி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, ரோமங்கள் ஆடைகள் நெய்யவும், தோல் பை, பெல்ட் செய்யவும் பயன்படுகிறது. பன்றியின் கொழுப்பு ஜெலட்டின் மற்றும் பிற உப பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. ஆனால், இவை எதுவும் நேரடியாகத் தொழிற்சாலை பயன்பாட்டுக்குச் செல்வதில்லை. அந்தப் பயன்பாட்டுக்கு ஏற்ப அதைப் பக்குவப்படுத்தும் பணி இடையில் நடைபெறுகிறது. இதைத்தான் இந்தப் பயிற்சி கற்றுக் கொடுக்கிறது.

மேலும், இறைச்சியைப் பதப்படுத்துவதன் மூலம் அதன் மதிப்பையும் கூட்ட முடியும். நினைத்த நேரத்தில் இறைச்சி கிடைக்காத பகுதிகளுக்கு அதை அனுப்பி பணம் பண்ணலாம். அதையும் அப்படியே விற்பனை செய்யாமல், வாங்குவோரின் தேவைக்கேற்ப எலும்புடனோ அல்லது எலும்பு களை நீக்கி வெறும் இறைச்சியாகவோ கொடுக்கலாம். தேவைப்படும் பாகத்தை தேவைப்படுவோருக்கு விற்பனை செய்யலாம். இப்படி தனித்தனி பாகங்களாக விற்பனை செய்வதால், அந்த இறைச்சியின் மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. இவை அனைத்தையும் மையமாகக் கொண்டே கால்நடைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வியில் மூன்று மாத கால சான்றிதழ் படிப்புக்கான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இறைச்சியிலுள்ள ஊட்டச்சத்துகளின் அளவு, இறைச்சிப் பொருட்களைச் சேமிக்கும் முறைகள், புகைமூட்டம் மூலம் இறைச்சிப் பொருட்கள் தயாரித்தல், காய வைத்து இறைச்சிப் பொருட்கள் தயாரித்தல், இறைச்சிப் பொருட்களைத் தூய்மையாகக் கையாளுதல், விற்பனை வாய்ப்புகள் எனப் பலவும் கற்றுத் தரப்படுகின்றன. ‘புகை மூட்டம் என்பது என்ன? எதற்கு?’ என்று சிலருக்குத் தோன்றலாம். இறைச்சியை பதப்படுத்தும் நடை முறையில் புகை மூட்டுதல் என்பது மிக மிக நெருங்கிய தொடர்புடையது. புகைமூட்டல், இறைச்சியின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்கிறது. விஷத்தன்மையை நீக்குவதோடு நிறத்தையும் பாதுகாக்கிறது. இது மாதிரியான சில முக்கியமான தொழில்நுட்பங்கள் இந்தப் பயிற்சியில் வழங்கப்படும்.

விவசாயிகளும், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களும், மகளிரும் இதன்மூலம் தங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்வதோடு, தரமான இறைச்சிப் பொருட்கள் மற்றவர்களுக்கு கிடைக்கவும் வழி செய்யலாம்!’’ என்கிறார் தியாகராஜன்.
இறைச்சி மூலம் வாழ்வில் ஒரு மலர்ச்சி வந்தால் மகிழ்ச்சிதானே!

- எம்.நாகமணி