பல்கலைப் பார்வை!



அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி மகுடத்தில்  ஒளிவீசும் மாணிக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு நீண்ட பாரம்பரியமும் பெருமைமிகு வரலாறும் உண்டு. காரைக்குடி என்றவுடனே கமகமக்கும் செட்டிநாட்டுச் சமையலும் வியக்க வைக்கும் வீடுகளின் கட்டுமான நுட்பமும்தான் நினைவுக்கு வரும். காரைக்குடி என்ற மகுடத்தில் பிரகாசமாய் ஒளிவீசும் இவற்றுடன் மற்றொரு மாணிக்கமாய் ஒளி வீசுவது அழகப்பா பல்கலைக்கழகம்.

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இன்றைக்கு உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 440 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1985  மே 9ல் தொடங்கப்பட்டது. டாக்டர் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947ல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950ல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956ல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவையே இந்தப் பல்கலைக்கழக உருவாக்கத்தின் வேர்கள்.

‘‘இந்தக் கல்வி வளாகத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் மகிழ்ச்சிதான் எனது உண்மையான சந்தோஷம்’’ என்று சொல்லி, அதற்காகவே செயல்பட்டவர் வள்ளல் அழகப்ப செட்டியார். அதனாலேயே ஜவகர்லால் நேரு, அழகப்பச் செட்டியாரை ‘சமதர்ம முதலாளி’ என்றழைத்துப் பெருமைப்படுத்தினார்.
வள்ளல் அழகப்பர் பெயர் தாங்கிய அழகப்பா பல்கலைக்கழகம் கற்பித்தல் யுக்திகள், விரிவாக்கம், நிர்வாகம், ஆய்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான் அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது ஆய்வுப் பணியில் 30ம் இடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சேது.சுடலைமுத்து பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நோக்கி விரைந்தது. இப்போது தமிழக பல்கலைக்கழகங்களுள் சிறப்புமிக்க பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. தற்போது பல்கலைக்கழக பொறுப்புக் குழுவின் தலைவர் கலியமூர்த்தி துணைவேந்தர் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டு வருகிறார். பதிவாளராக மாணிக்கவாசகம் உள்ளார். தொலைநிலைக் கல்வி இயக்குநராக குருமூர்த்தி உள்ளார்.

உள்கட்டமைப்பு வசதிகள்மத்திய நூலகம், ஹெல்த் கேர் சென்டர், மாணவர்கள் தங்கும் விடுதி, தொலைதொடர்பு மையம், அஞ்சல் அலுவலகம், வங்கி வசதி, கூட்டுறவு பண்டக சாலை, பணியாளர்களுக்கான குடியிருப்புகள், எம்ப்ளாய்மென்ட் செல், பெற்றோர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு என பல்வேறு வசதிகளோடு இயங்கி வருகிறது பல்கலைக்கழகம்.    

நூலகம்:

பல்கலைக்கழக வளாகத்தில் நூலகம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1990ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மத்திய நூலகம் அமைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் 50 லட்ச ரூபாய் செலவில் யுஜிசி மற்றும் தமிழ்நாடு அரசு உதவியுடன் கட்டப்பட்டது. இது 21,658 சதுர அடியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 150 பேர் அமர்ந்து வாசிக்க முடியும். இங்கு ஆய்வு நூல்கள், துறை சார்ந்த நூல்கள் ஏராளமாக உள்ளன. அதனால் அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களும் குறிப்புகளை எடுக்க இங்கு வருகிறார்கள். நூலகத்திற்கு விடுமுறையே இல்லை என்பதுய் குறிப்பிடத்தக்கது. வார நாட்களில் காலை  8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும். வார விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

சுகாதார மையம் பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இது பல்கலைக் கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களுக்கும் பொது மருத்துவ  பரிசோதனை செய்துகொள்ளவும் அவசர சிகிச்சை பெறவும் உதவுகிறது.

மாணவர் விடுதி

இங்கு இரண்டு விடுதிகள் மாணவர்களுக்கும், ஒன்று மாணவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதில்500 மாணவர்கள் தங்குவதற்கான அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. உணவு விடுதி, அனைத்து செய்தித்தாள்கள் வார-மாத இதழ்கள் வசதிகளுடன் படிப்பக அறை உள்ளன.

பாடத்திட்டங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 18 துறைகள் வாயிலாக கலை, கல்வி, அறிவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் பட்ட மேற்படிப்பும், ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நுண்கலை மையம் ஒன்று தொடங்கப்பட்டு நடனம், பாட்டு, வாத்தியம் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப் படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வி வாய்ப்புகள் வீட்டுக்கே சென்றடையும் வகையில் இந்தியாவில் பல மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், பஹ்ரைன், கத்தார் போன்ற வெளிநாடுகளிலும் 208 படிப்பு மையங்கள் வாயிலாகக் கல்விப் பணியில் இப்பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது.
அழகப்பா பல்கலைக்கழகத்துடன் 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் என 67 வகையான படிப்புகள்  உள்ளன.

உயர் கல்வியில் தரம் இப்பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டங்கள் அனைத்தும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களைத் தேர்வு செய்வதிலும், சேர்க்கை அனுமதி வழங்குவதிலும் தரத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.  தமிழ்நாடு அரசு உயர்கல்வி மன்றம் மற்றும் மத்திய நிதி நல்கைக் குழு வழிகாட்டுதலின்படி ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்

எம்.ஏ பட்ட மேற்படிப்பில் தமிழ், கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், மகளிரியல், ஊரக மேம்பாடு ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எஸ்.டபிள்யூ (சோஷியல் ஒர்க்), எம்.காம்., எம்.சி.ஏ., எம்.சி.ஏ (வீக் என்ட்), எம்.பி.ஏ., எம்.பி.ஏ.வில் பன்னாட்டு வணிகம், கார்ப்பரேட் செகரட்டரிஷிப் மற்றும் ஐபிஈசி ஆகிய படிப்புகளும் உள்ளன. எம்.எஸ்சியில் கணிதம், இயற்பியல், வேதியியல் (டெக்ஸ்டைல்ஸ்), வேதியியல் (எலெக்ட்ரோ), கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக், பயோ-எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பயோ-சென்ஸார், அனிமல் ஹெல்த் மற்றும் மேனேஜ்மென்ட், நானோசயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, மரைன் பயாலஜி, மரைன் மைக்ரோபியல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

 கல்வியியலில் பி.எட், எம்.எட் படிப்புகளும், உடற்கல்வியியலில் பி.பிஎட், டி.பிஎட், எம்.பிஎட்., போன்ற படிப்புகளும், கல்வியியலில் பி.ஜி டிப்ளமோவும், உடற்கல்வியியலில் பி.ஜி டிப்ளமோ யோகாவிலும் வழங்கப்படுகிறது. நூலக அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளும் இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.
 தொலைநிலைக் கல்வியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைப்பு வழிவகையில் மாணவர் தேவைக்கேற்ப திறமை அடிப்படையிலான முதுகலைப் படிப்புகள் ஹோட்டல் நிர்வாகம், டெக்ஸ்டைல் வடிவமைப்பு, நுண்கலை, உயரித் தொழில்நுட்பம், கடலோர மற்றும் வான் அறிவியல் போன்ற துறைகளில் வழங்கப்படுகின்றன. மேலும் 44 வகை சான்றிதழ் பட்டயம், இளங்கலை, முதுகலை பட்டயப் படிப்புகளும் உள்ளன.

இப்பல்கலைக்கழகத் துறைகளில் 2,400 மாணவர்களும், இணைப்புக் கல்லூரிகளில் 27 ஆயிரம் மாணவர்களும், ஒருங்கிணைப்பு வழிவகைகளில் 2300 மாணவர்களும், தொலைநிலைக் கல்வி மூலம் 1 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்களும் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில் 65 சதவீதம் பெண்கள் என்பது சமுதாய வளர்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வாற்றலை மேம்படுத்த அனைத்து வசதிகளும் கொண்ட நவீன நூலகமும் பெரும் பங்காற்றுகிறது. மேலும் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகளும் இப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

சீனா, தைவான், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களோடு அந்த நாடுகளில் உள்ள அறிவியல் ஆய்வுக்கூடங்களை இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தவும், ஒருங்கிணைப்பு ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவும் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பல்கலைக்கழகம் கல்வி வளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, தொழில்நுட்ப உயர்வு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகிய ஐந்து அம்சங்களை கவனத்தில் கொண்டு செயல் வல்லமை என்ற நோக்கோடு செயலாற்றி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில்  வழங்கப்படும் சில படிப்புகள்:

எம்.பி.ஏ., கார்ப்ரேட் செகரட்டரிஷிப்
எம்.பி.ஏ., எஜுகேஷன் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., இன்டர்நேஷனல் பிசினஸ்
எம்.பி.ஏ., இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., புராஜெக்ட் மேனேஜ்மென்ட்
எம்.பி.ஏ., டூரிசம்
எம்.ஏ. பர்சோனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேஷன்ஸ்
எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம்
எம்.ஏ. சைல்டு கேர் மற்றும் எஜுகேஷன் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்

- எம்.நாகமணி
படங்கள்: ஆர்.குழந்தைசாமி