ஆபத்தற்ற ரயில் பயணம் கேரன்டி!



மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்பு

நம் பயணங்களை இதமாக்கும் எளிய வழி, ரயில். சொகுசு, சிக்கனம் என எல்லாம் இருந்தாலும், அரிதாக அது தடம் புரளவும் வாய்ப்பு இருக்கிறதே! அந்த பயத்தை விரட்டத்தான் தங்கள் கண்டுபிடிப்பை உருவாக்கியிருக்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள்.


‘‘ரயில் தடம் புரள முக்கியமான காரணம், தண்டவாளங்களுக்கு மத்தியில இடைவெளி அதிகரிக்கிறது, உயரம் ஏத்த இறக்கமா ஆகிடுறது, தண்டவாள கனெக்ஷன்ல பிளவுகள் பெருசாகிடுறது... இதெல்லாம்தான்’’ எனத் துவங்குகிறார் மாணவர் வினோத்குமார். இவரோடு, விஷ்ணுவரதன், திலீப்குமார் ஆகியோரும் இந்தக் கண்டுபிடிப்பில் பங்கு வகிக்கிறார்கள்.

‘‘இப்போ இருக்குற நடைமுறைப்படி தண்டவாளத்தின் அகலத்தையும் உயரத்தையும் ரயில் புறப்படுறதுக்கு முன்னாடி ஒரு தள்ளுவண்டியில பரிசோதகர்கள் போய் வெர்னியர் மூலமா அளந்து சரி பார்க்குறாங்க. இதுக்கு ரொம்ப நேரமாகும். தவிர, நூறு சதவீதம் துல்லியமானதுன்னும் சொல்ல முடியாது!’’ என வினோத் நிறுத்த விஷ்ணுவரதன் தொடர்கிறார்.

‘‘நாங்க உருவாக்கியிருக்குற இந்த செட்டப்புக்கு க்ஷி2ஞின்னு பேர் வச்சிருக்கோம். இதுவும் தண்டவாளத்துல ஓடுற ஒரு டிராலி மாதிரி செட்டப்தான். இதை ஒரு ரயில் எஞ்சின்ல இணைச்சுக் கூட ஓட்டிக்கிட்டுப் போகலாம். சக்கரங்களுக்கு இடையில சென்சார்கள் பொருத்தியிருக்கோம். தண்டவாளத்துல இது போகும்போது, சக்கரத்துல இருக்குற சென்சார்கள் ஒண்ணை ஒண்ணு பார்த்துக்கிட்டே இருக்கும். ட்ராக்ல சின்ன பெண்ட், சின்ன விரிசல் வந்தாலும் சென்சார்களோட தொடர்பு பாதிக்கப்பட்டு, ‘என்னவோ தப்பா இருக்கு’ன்னு சென்சார் அறிவிச்சிடும். அந்த அலர்ட், வயர்லஸ் வழியா ஒரு மைக்ரோ கன்ட்ரோலருக்கு வரும். தண்டவாளத்தோட ஏற்ற இறக்கம் நார்மலா இருக்கா, இல்லை ஆபத்தாகுற அளவுக்கு அதிகமா இருக்கான்னு அந்த மைக்ரோ கன்ட்ரோலர்தான் முடிவு பண்ணும். ஒருவேளை ஆபத்தான அளவுக்கு தண்டவாளத்தில் விரிசல் இருந்தா, ஒரு எல்.சி.டி திரையில டேஞ்சர் அலர்ட் வந்துடும்!’’

‘‘வெறும் ட்ராலியா இதை தள்ளிக்கிட்டுப் போகும்போது, அப்நார்மலா டிராக்கில் மாற்றம் தெரிஞ்சா அலாரம் சத்தம் எழுப்பி ட்ராலி அங்கேயே ப்ரேக் போட்டு நின்னுடற மாதிரியும் செஞ்சிருக்கோம். இப்போ நடைமுறையில இருக்குற வெர்னியர் கேஜ் பரிசோதனையில இருக்குற வேலைப்பளு இந்தக் கருவியில இருக்காது. வேலையும் வேகமா நடக்கும்!’’ என்கிறார் திலீப்குமார் மகிழ்ச்சி பொங்க.

‘‘இது மாதிரியான கருவி ரொம்ப அத்தியாவசியம்னுதான் மத்திய அரசின் காப்புரிமைக்காக விண்ணப்பிச்சிருக்கோம்!’’ என்கிறார்கள் இந்தக் கண்டுபிடிப்புக்கு வழி காட்டியிருக்கும் துறைத்தலைவர் பள்ளிகொண்ட ராஜசேகரனும், பேராசிரியை தனலட்சுமியும். அத்தியாவசியத்தைத்தான் தரவேண்டும் அறிவியல்!

- எம்.நாகமணி