www.thecolo.com



குழந்தைகளின்  கற்பனைத் திறனை மேம்படுத்தும்

வகுப்பறைகளை பாடப் புத்தகங்கள் வெம்மையாக்கி விடுகின்றன. படிப்பு, எழுத்து என்று வகுப்பறையில் வறுபட்டு வரும் குழந்தைகளை வீடும் பாடம் செய்யச் சொல்லி மிரட்டுகிறது. குழந்தைகள் தங்கள்  தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வகுப்பறையில் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் இடம் இருக்கிறது.

ஆனால் இணையம் அதற்கு ஏக விசாலமாக இடத்தை விரித்துக் கொடுத்திருக்கிறது. இசை கற்றுக் கொள்ளலாம். பேசக் கற்றுக் கொள்ளலாம். விளையாடக் கற்றுக் கொள்ளலாம். வரையக் கற்றுக் கொள்ளலாம். வண்ணம் தீட்டக் கற்றுக் கொள்ளலாம். அவ்விதமான ஒரு இணையதளம்தான் www.thecolor.com.  
குழந்தையின் சிறு சிறு கீறல்கள் கூட ஓவியங்களின் தகுதியைப் பெற்று விடுகின்றன. ஓவியங்கள் குழந்தைகளின் கற்பனைத் திறனைத் தூண்டுகின்றன. தாங்கள் கிழிக்கும் கோடுகளின் வழி இந்த அகண்ட உலகத்தையே சிருஷ்டிக்கிறார்கள் அவர்கள். அவ்விதமான ஓவிய ஆர்வத்தைத் தூண்டுவதோடு, கற்பனைச் சிறகையும் விரியச் செய்கிறது இந்த இணையதளம்.

பல நூறு தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றன. அந்த ஓவியங் களை கிளிக் செய்தால் பெரிய அளவில் விரிகின்றன. அருகிலேயே ‘கலர் பேலட்’ ஆப்ஷனும் இருக்கிறது. மவுஸையே தூரிகையாக்கி விருப்பத்துக்கு ஏற்ற வண்ணத்தை எடுத்து அந்த ஓவியத்துக்குத் தீட்டலாம். குழந்தைகளை குதூகலிக்கச் செய்வதோடு, அறிவையும் மேம்படுத்தும் இந்த இணையதளத்தில் கலரிங் புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

கார்ட்டூன் உருவங்கள், விலங்குகள், விலங்குகளின் வேடிக்கையான செயல்பாடுகள், காடு, மலையென இயற்கைக் காட்சிகள், நிலப்பரப்புகள், பறவைகள், வீட்டு விலங்குகள், மனிதர்கள், பூச்சிகள் என ஏராளமான தலைப்புகள் உண்டு. ஒவ்வொரு தலைப்பிலும் 40 முதல் 50 கோட்டோவியங்கள் இருக்கின்றன. பாடல்கள், கதைகள், தேசத் தலைவர்கள், எழுத்துகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு வண்ணம் தீட்டும் வகையில் கோட்டோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தியேட்டர், கடல், கோள்கள் எனத் தலைப்பிட்டு அது சார்ந்த படங்களை வரைந்திருக்கிறார்கள். அதன்மூலம் குழந்தைகள் தங்கள் தொடர்புபடுத்தும் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். ‘ஹாலிடே கலரிங்’ பகுதியில் முட்டாள்கள் தினம் முதல், பெற்றோர் தினம் வரைக்கும் தலைப்பிட்டு அது சார்ந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

ஓவியங்களில் வண்ணம் தீட்டுவதோடு அதை பிரின்ட் அவுட்டும் எடுத்துக் கொள்ள முடியும். தாங்கள் வண்ணம் தீட்டிய ஓவியத்தை பிரதியெடுத்து குழந்தைகள் பிறருக்கு பரிசளிக்கவோ, சேமிக்கவோ செய்யலாம்.  வண்ணங்களை அடையாளம் காணுதல், காட்சிகளை உணர்ந்து புரிந்து கொள்ளுதல், பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல், எழுத்துகள் மூலம் வாசித்தல், கற்பனையை மேம்படுத்துதல் என பல்வேறு செயற்திறனை ஒருங்கே செய்கிறது www.thecolor.com.    

- வெ.நீலகண்டன்