பல்கலைப் பார்வை



தில்லையின் கல்வி மகுடம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சிதம்பரம் நகரின் பிரதான அடையாளம் நடராஜர் திருக்கோயில் என்றால், அதற்கு அடுத்த இடம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத்தான். இது மிக மிகப் பழமையான பாரம்பரியம் மிக்க கல்வி நிறுவனமாகும். கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் தொலைதூரக் கல்வி என விரிவான தளங்களில் தனது உன்னதமான பங்களிப்பை இந்தக் கல்வி நிறுவனம் மாநில அளவில் மட்டுமல்ல... தேசிய அளவில் மட்டுமல்ல... சர்வதேச அளவிலும் வழங்கி வருகிறது.

தோற்றமும் பின்னணியும்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் திருவேட்களத்தில் 1920ம் ஆண்டு மீனாட்சி கல்லூரி என்ற பெயரில் தமிழ் உணர்வோடு செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்ட சிறிய கல்லூரிதான் பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மாறியது. மீனாட்சி கல்லூரியின் முதலாவது முதல்வராகத் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் இருந்துள்ளார்.

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அரசுக்கு அளித்த கல்லூரிகள், சொத்துகள், ரூ.20 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு 1928ல் தனிச் சட்டம் மூலம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த தனிச் சட்டத்தின்படி ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் வாரிசுகளுக்கு நிறுவனர் என்ற அங்கீகாரத்துடன் சில அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத்தைத் தோற்றுவிக்க முக்கிய காரணமாக இருந்தார் என்பதால் ஆங்கிலேய ஆட்சியில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நிறுவனர் பல்கலைக்கழக இணைவேந்தராகவும் செயல்பட்டு வந்தார். வேந்தராக மாநில ஆளுநர் இருப்பார். இணைவேந்தரால் முன்மொழியப்பட்ட மூவரில் ஒருவரைத் துணைவேந்தராகத் தேர்வு செய்து ஆளுநர் நியமனம் செய்வார். அவ்வாறு பணியமர்த்தப்பட்ட துணைவேந்தர் பல்கலைக்கழக அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பான நிர்வாகியாக இருப்பார். பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாகமும் இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இப்பல்கலைக்கழகத்தில் முதலில் தமிழ், பொருளாதார வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டன. 1931ல் ஆனர்ஸ் வகுப்புகள் தொடங்கப்பட்டன. சென்னை, ஆந்திரா பல்கலைக்கழகங்களில் எம்.ஏ வகுப்பு தொடங்கும் முன்பே இங்கு எம்.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இசை ஆராய்ச்சிக்கு என்று தனிப் பாடம் தொடங்கி தமிழிலேயே பாடல்கள் கற்றுத் தரப்பட்டது இங்கேதான். அக்காலக் கல்லூரிகள் எதிலும் இது போன்ற படிப்பு இல்லை. அந்த அளவுக்குத் தமிழ் தனி இடம் பிடித்திருந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்!

சிதம்பரத்தின் 50 கி.மீ. சுற்றளவில் உள்ள பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து படித்தனர். இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகம் கல்வி அறிவை ஊட்டியது. யாழ் நூல் வகுத்த இசை அறிஞர் விபுலானந்தர், பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சுப்ரமணியப்பிள்ளை, அ.சிதம்பர செட்டியார், தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வ.சுப.மாணிக்கனார் போன்ற தமிழ் அறிஞர்கள் இந்தப் பல்கலைக்கழகத் தமிழ் இயல் துறையில் பணியாற்றியுள்ளனர். பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், கி.வீரமணி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான்.  

அண்ணாமலை செட்டியாருக்குப் பின்னர் அவரது மகன் முத்தையா செட்டியார் பல்கலைக்கழகத்துக்கு இணைவேந்தராக இருந்தார். அவரது காலத்தில்தான் பல் மருத்துவக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டன. முத்தையா செட்டியாருக்குப் பின்னர் அவரது மகன் ராமசாமி செட்டியார் இணைவேந்தராக இருந்தார். இப்பல்கலைக்கழகத்தில் வேளாண், பொறியியல், கடல் அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட 10 புலங்களும் 49 துறைகளும் உள்ளன. சீனா, உகாண்டா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு தங்கிப் படித்து வருகின்றனர். சிதம்பரம் நகருக்குக் கிழக்கே 1500 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் அண்ணாமலை நகர் எனும் பிரத்யேக நகர்ப்பகுதியில் பிரமாண்டமாக அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டும் சுமார் 13 ஆயிரத்து 500 பேர் உள்ளனர்.

2013ம் ஆண்டு வரை இணைவேந்தர், துணைவேந்தர் எனும் முறைதான் இப்பல்கலைக் கழகத்தில் இருந்துவந்தது. பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு சிக்கல்கள் காரணமாகப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையொட்டிப் பல்கலைக்கழக நிர்வாகியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவைக் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி தமிழக அரசு நியமனம் செய்தது. 2013ம் ஆண்டு முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு கல்வி மற்றும் நிதி சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்கட்டமைப்பு

பிரமாண்டமான மைய நூலகம், வெவ்வேறு துறைகளுக்கான பிரத்யேக வளாகங்கள், மாணவர்கள் தங்குவதற்கான வசதியான விடுதி மாளிகைகள் போன்றவற்றை இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் காணலாம்.

துறை வளாகங்கள்

பொறியியல் துறை மற்றும் அதன் உட்பிரிவுகளுக்கும் கலை மற்றும் அறிவியல் துறையின் உட்பிரிவுகளுக்கும் தனித்தனியாக நவீன கட்டுமானத்தில் வளாகங்கள் உள்ளன.

நூலகம்


பல்கலைக்கழகத்தினுள் மெயின் லைப்ரரி ஒன்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் படிப்புகள் சார்ந்த நூலகம் ஒன்றும் உள்ளது. மெயின் லைப்ரரி 36,000 சதுர அடியில் 1959ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. 4 லட்சத்து 36 ஆயிரம் புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 400 பேர் அமர்ந்து படிக்கும் வசதி - விசாலம் இங்குண்டு. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப லைப்ரரியில் தனியே ஐம்பத்து மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இரண்டு நூலகமுமே மாணவர்களின் வசதிக்காகக் காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை திறந்திருக்கும்.

மாணவர் விடுதி

மாணவ - மாணவிகளுக்குத் தங்கும் விடுதிகள் தனித்தனியாக உள்ளன. ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான விடுதியும் தனியாக உள்ளது.

விருந்தினர் விடுதி

பல்கலைக்கழகத்துக்கு வருகை தரும் நபர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடனும் விடுதி உள்ளது. ஒரு நாளைக்கு 800 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கட்டண வசதியில் அறைகள் உள்ளன.

மருத்துவமனை

பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே மருத்துவக் கல்லூரியும் உள்ளதால் மருத்துவப் பரிசோதனை சிகிச்சை அங்கேயே அளிக்கப்படுகிறது.

ஆராய்ச்சிக் கூடம்

மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிக்கு உதவும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுக்கூடமும் உள்ளது.

யோகா மையம்

யோகா பயிற்சி மையமும் வளாகத்தினுள் உள்ளது. இங்கு 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் மற்றும் தொலைதூரக் கல்வி முறை இரண்டுமே வழங்கப்படுகின்றது. இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், பட்டய வகுப்புகள் இவற்றின் வழியே வழங்கப்படுகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி நிறுவனம் 1979ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் மூலம் 81 வேறுபட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. தொலைதூரக் கல்வி செயல்பாடுகளுக்கென ஷார்ஜா, மஸ்கட், துபாய் மற்றும் டொரண்டோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் கல்வி மையங்கள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு, சமூகவியல், பொருளியல், பிசினஸ் எக்னாமிக்ஸ், பங்ஷனல் தமிழ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், காவல் நிர்வாகம், பாப்புலேஷன் ஸ்டடீஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பிசினஸ் ஸ்டடீஸ், இன்டர்நேஷனல் பிசினஸ், எலக்ட்ரானிக் மீடியா, ஹோட்டல் மேனேஜ்மென்ட், அக்ரிகல்ச்சர் / ஹார்டிகல்ச்சர் என மிகப் பெரிய பட்டியல் பாடத்திட்டங்களாக உள்ளன.

- எம்.நாகமணி
படங்கள்: எஸ்.முத்துக்குமரன்