இந்திய விமான ஆணையத்தில் வேலை!



450 பேருக்கு வாய்ப்பு

இந்திய விமான ஆணையத்தில் எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் அது தொடர்பான பணிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பில் இளநிலை நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 450 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜூனியர் எக்சிகியூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பணிக்கு 200 இடங்களும் ஜூனியர் எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு 250 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவுக்கு 128 இடங்களும் எஸ்.சி. பிரிவினருக்கு 67 இடங்களும் எஸ்.டி. பிரிவினருக்கு 35 இடங்களும் உள்ளன.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்ப காலத்தின் இறுதி நாளை அடிப்படையாக கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி: பி.எஸ்சி. இயற்பியல், கணிதவியல் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள், ஏர் டிராபிக் கன்ட்ரோல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூனியர் எக்சிகியூட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்
: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதள செலான் மூலம் ஸ்டேட் வங்கி கிளைகளில் இந்தக் கட்டணத்தை செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது உள்ளது. 12.2.2015ம் தேதி வரை இணையதள ஸ்டெப் 1 விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் 14.2.2015ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். 18.2.2015ம் தேதிக்குள் ஸ்டெப்-2 விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்களை அறிய காண்க: www.aai.aero.