கேம்பஸ் நியூஸ்



பொதுத்தேர்வில் ரூல்டு பேப்பர்!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மொழிப்பாடங்களுக்கு மட்டும் ரூல்டு பேப்பர் வழங்கப்படும் என அரசு பொதுத்தேர்வு இயக்குநர் அறிவித்துள்ளார்.அரசு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களை எழுதும் மாணவர்கள் சிலர் சரியான நேர்கோட்டில் எழுதாததால், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த குறைபாடுகளை களையும் பொருட்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடிட்ட தாள்கள் வழங்கினால், சிரமம் குறையும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர். இதனை கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டில் தொங்கினால் பஸ் பாஸ் கட்!

மாணவர்களிடையே வன்முறையும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதால் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டாலோ, பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தாலோ அவர்களின் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் வேறு எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் உயர்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

விஐடி பல்கலையில் மேலாண்மைப் படிப்பு

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் 2015-2016ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ ஜெனரல், மற்றும் இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலையில் இளங்கலைப் பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CAT/ MAT/  XAT/ GMAT ஆகிய நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக. academics.vit.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மற்றும் குழுக் கலந்துரையாடல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது.

ராணுவ மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2015-2016ம் கல்வியாண்டில் பி.டி.எஸ், எம்.டி.எஸ் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி:
பி.டி.எஸ் படிப்புக்கு பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும். முதுகலைப் படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பி.டி.எஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவங்களை கல்லூரி இணையதளத்திலிருந்து (www.acds.co.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐ.பி.பி.எஸ் தேர்வு முறையில் மாற்றம்

அகில இந்திய அளவில் நடத்தப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக இதில் மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.பொதுத்துறை வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ் நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை தகுதித் தேர்வுகளை நடத்துகிறது. வழக்கமாக இதில் முதலில் எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடக்கும். இதில் வழங்கப்படும் தகுதிச் சான்று இருந்தால்தான் வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்கவே முடியும்.

இந்நிலையில், ஐ.பி.பி.எஸ் எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு அதற்கு அடுத்து மெயின் தேர்வு என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். ஆனால், முதல் நிலைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இந்த ஆண்டு அக்டோபர், டிசம்பரில் நடக்கவுள்ள தேர்வுகளில் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்த ஐ.பி.பி.எஸ் முடிவு செய்துள்ளது!


டெல்லி பல்கலையின் பிஎச்.டி சட்டப் படிப்பு


டெல்லி பல்கலையின் சட்டத்துறை, 2 ஆண்டு முழுநேர சட்டப் படிப்பை வழங்கவுள்ளது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், லிலி.வி படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணோ அல்லது லிலி.ஙி படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணோ பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர விரும்புவோர், தனது ஆய்வு தொடர்பான ஒரு proposal தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்த proposalஐ தயாரிக்க, பேராசிரியர்களின் உதவி, கட்டாயம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

Proposal சமர்ப்பிக்கும் கடைசித் தேதி: பிப்ரவரி 5.

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மேலும், தேவைப்பட்டால், எழுத்துத் தேர்விலும் பங்குபெற நேரிடும். அனைத்து விவரங்களும் www.du.ac.in என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்பட மாட்டாது. 2015-2016ம் கல்வியாண்டில், இந்த ஆராய்ச்சிப் படிப்பிற்கு, மொத்தம் 12 இடங்கள் உள்ளன. பிஎச்.டி ஆய்வுக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படலாம்.