+2 வேதியியல் சென்டம் வாங்க டிப்ஸ்



+2 மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியப் பாடப்பிரிவுகளில் ஒன்று வேதியியல். இந்தப் பாடத்தில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘தகுந்த திட்டமிடலோடும், ஈடுபாட்டோடும் படித்தால் வேதியியல் பாடத்தில் முழுமதிப்பெண்களையும் அள்ள முடியும்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பெ.அ.செந்தில்குமார். அவர் தரும் ஆலோசனைகள்...

பலருக்கு வேதியியல் என்றாலே ஒருவித கசப்புணர்வு வருகிறது. காரணம், சமன்பாடுகள், சேர்மங்களின் பெயர்கள் என ஞாபகத்தில் வைக்க வேண்டியது இதில் ஏராளம். இருந்தும் மற்ற பாடங்களை ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் இதில் சென்டம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சற்று கூடுதல் ஈடுபாட்டோடு படித்தால் எல்லா மாணவர்களுமே சென்டம் எடுக்கலாம்.

பலரின் சென்டம் கனவை தகர்ப்பது ஒரு மார்க் கேள்விகள்தான். ஒரு மதிப்பெண்ணில் 30 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 22 பாடங்கள் இருக்கின்றன. இதில் ‘மின் வேதியியல் -2’, ‘கரிம வேதியியல் மாற்றியம்’, ‘நடைமுறை வேதியியல்’ ஆகிய மூன்று பாடங்களிலிருந்து ஒரு மார்க் கேள்விகள் வராது. மீதியுள்ள
19 பாடங்களை தயார் செய்யவேண்டும்.

கரிம வேதியியலில் ‘ஹைட்ராக்ஸி வழிப்பொருட்கள்’, ‘கார்பனைல் சேர்மங்கள்’, ‘கார்பாக்ஸிலிக் அமிலங்கள்’ ஆகிய பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி வருகிறது. ஈதர்கள் பாடத்தில் இரண்டு கேள்விகள். இவற்றில் பத்து மதிப்பெண் கேள்விகளும் வருவதால், இந்தப் பாடங்களைத் தெளிவாகப் படிக்க வேண்டும். கரிம ஹைட்ரஜன் சேர்மங்கள் பாடத்திலிருந்து மட்டும் 3 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் புத்தகத்தின் உள்ளே இருந்துதான் கேட்பார்கள். பெரும்பாலும் இதில்தான் நிறைய மாணவர்கள் ஒரு மதிப்பெண்ணை தவற விடுகிறார்கள். கவனம் தேவை.

மூன்று மதிப்பெண் கேள்விகள் மொத்தம் 21. இதில் 15க்கு விடையளிக்க வேண்டும். ‘எஃப் தொகுதி தனிமங்கள்’, ‘அணைவு உயிரியல்’, ‘அணைவுச் சேர்மங்கள்’, ‘மின் வேதியியல்-2’, ‘ஈதர்கள்’, ‘உயிர்வேதி மூலக்கூறுகள்’ ஆகிய 5 பாடப் பிரிவுகளிலிருந்து மூன்று மார்க் கேள்விகள் வராது. மீதி 17 பாடங்களை தயார் செய்ய வேண்டும்.

கனிம மற்றும் இயற்பு வேதியியலை முழுவதுமாக தயார் செய்தால் 14 கேள்விகளுக்கு இதிலேயே விடையளித்துவிட முடியும். ஒருவேளை கணக்கு கேள்விகள் கஷ்டமாக இருப்பின், மீதி கேள்விகளை கரிம வேதியியலில் எழுதுவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக மூன்று மார்க் கேள்விகளுக்கு விடையளிக்கும்போது வரையறை, ஃபார்முலா, சமன்பாடுகள், சேர்மங்களின் பெயர்கள் ஆகியவற்றை தெளிவுடன் எழுத வேண்டியது அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மார்க் என்ற அளவில் மதிப்பெண் இடுவார்கள்.

ஐந்து மார்க் கேள்விகள் மொத்தம் 12. இதில் 7 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். மூன்று பிரிவிலிருந்தும் நான்கு கேள்விகள் கேட்பார்கள். ஒவ்வொரு பிரிவிலும் 2 கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். கனிம வேதியியலில் இதற்கு 1,4,5,6 ஆகிய பாடங்களைப் படித்தால் போதுமானது. ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா ஒரு கேள்வி வரும். 2 மற்றும் 3வது யூனிட்டில் இருந்து ஐந்து மார்க் கேள்விகள் வராது. கேள்வி எண் 52 பெரும்பாலும் கணக்கு கேள்வியாகத்தான் கேட்பார்கள்.

4, 5, 6வது பாடங்களில் மொத்தமாக 17 ஐந்து மார்க் கேள்விகள்தான் உள்ளன. இதில் 5வது பாடமான எஃப் தொகுதி தனிமங்கள், 6வது பாடமான அணைவுச் சேர்மங்கள் ஆகியவை மிகவும் எளிதான பாடங்கள். இவற்றைப் படித்தாலே போதுமானது. அணைவுச் சேர்மங்கள் பத்து மதிப்பெண் கேள்விகளிலும் கேட்கப்படுவதால் இந்தப் பாடத்தை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும்.

இயற்பு வேதியியலில் 9,10,11,14 யூனிட்களில் இருந்து தலா ஒரு கேள்வி கேட்பார்கள். இதில் 14வது பாடத்தில் பெரும்பாலும் கணக்கு கேள்விகள்தான் இருக்கும். இதுவும் அடிக்கடி ரிபீட் ஆன கேள்வியாகவே வருவதால் பழைய கேள்வித்தாள்களை ஒரு முறை பார்த்தாலே போதும். அதேபோல் 9,10,11 பாடங்களில் மொத்தமாக 17 ஐந்து மார்க் கேள்விகளே உள்ளன. இவற்றில் வெப்ப இயக்கவியலும், வேதிச்சமநிலையும் எளிதான பாடங்கள்.

கரிம வேதியியலில் 17,18,19,22 ஆகிய பாடங்களில் இருந்து தலா ஒரு கேள்வி வரும். இதில் வினைவழி முறையில் இருந்து ஒரு கேள்வி நிச்சயம் இருக்கும். மொத்தமே பத்து வினைவழி முறைதான் புத்தகத்தில் உள்ளது. இவற்றை படித்தால் ஐந்து மதிப்பெண்ணை எளிதாக எடுத்துவிடலாம். இவை போக மாற்றியங்கள், வேறுபாடுகள் என இருக்கின்ற கேள்விகளை கட்டாயம் படித்துக் கொள்ள வேண்டும்.  

10 மார்க் கேள்விகள் மொத்தம் ஏழு. கடைசிக் கேள்வி எண் 70, சாய்ஸில் விடமுடியாத கட்டாயக் கேள்வி. மற்ற ஆறு கேள்விகள் கனிம, இயற்பு, கரிம ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் தலா 2 கேள்விகள் கேட்கப்படும்.  கேள்வி எண் 64 முதல் 70 வரை பத்து மதிப்பெண் கேள்விகள். இவற்றில் 70 ஐ தவிர்த்து மற்ற ஆறு கேள்விகளில் ஏதேனும் மூன்றிற்கு பதிலளிக்க வேண்டும். பெரும்பாலும் கனிம மற்றும் இயற்பு வேதியியல் பாடங்கள் சுலபமாக இருப்பதால் இந்த மூன்று கேள்விகளையும் இந்தப் பகுதியிலிருந்தே தேர்ந்தெடுத்து எழுதலாம்.

கேள்வி எண் 64ல் 2, 3வது பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதேபோல் கேள்வி எண் 65, 66 ஆகிய இரண்டு கேள்விகள் 6,7,8,12வது பாடங்களிலிருந்து வரும். இவற்றைத் தேர்வு செய்வதே நல்லது. ஏனெனில் இந்தப் பாடங்கள் எளிதானவை. கேள்வி எண் 68, 15,19வது பாடங்களிலிருந்தும், கேள்வி எண் 69 என்பது 20,21வது பாடங்களிலிருந்து கேட்கப்படுகிறது. கேள்வி எண் 69ம் எழுதுவதற்கு நல்லதொரு சாய்ஸ். ஏனெனில் 20,21வது பாடங்கள் எளிதானவை.

இறுதியாக சாய்ஸில் வராத கட்டாயக் கேள்வி எண் 70. இது கணக்கு கேள்வியாக வரும். இதிலே சாய்ஸ் இருக்கும். கேள்வி (ஏ), ஹைட்ராக்ஸி வழிப்பொருட்கள் பாடத்தி லிருந்தும் கேள்வி (பி), ‘டி’ தொகுதி தனிமங்கள் பாடத்திலிருந்தும் கேட்பார்கள். இதேபோல் கேள்வி (சி), கார்பனைல் சேர்மங்கள் பாடத்திலிருந்தும், கேள்வி (டி), மின்வேதியியல் 1 பாடத்திலிருந்தும் கேட்பார்கள். இதில் பெஸ்ட் சாய்ஸ் (சி) மற்றும் (டி) கேள்விகள்தான். இவற்றை எழுதுவது எளிதானது.

பொதுவாக சமன்பாடுகள் உள்ள கேள்விகள் வந்தால் அதனை சரியாக பேலன்ஸ் செய்தாக வேண்டும். வினைவழி முறை பற்றிய கேள்வியை எழுதும்போது படிநிலைகளை தெளிவாக குறிப்பிட வேண்டும். வேறுபாடுகள், பயன்கள் என்றுள்ள கேள்விகளை எழுதும்போது குறைந்தது ஆறு பாயின்ட்களாவது எழுத வேண்டும். கணக்கு கேள்விகளை எழுதும்போது டேட்டாவை தெளிவாகக் குறிப்பிட்டு பிறகு ஃபார்முலாவை எழுதவேண்டும். அடுத்து அப்ளை செய்து விடையும் யூனிட்டும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு ஸ்டெப்பிற்கும் ஒரு மதிப்பெண் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு கணக்குக் கேள்விகளை எழுதுங்கள். இதோடு பழைய கேள்வித்தாள்களை ஒருமுறை கட்டாயம் படியுங்கள். நிச்சயம் சென்டம் உங்கள் வசமாகும்.