நெடுங்காலம் வாழவேண்டும்!



வாசகர் கடிதம்

பொதுத்தேர்வு வந்தாலே அச்சத்தில் பலருக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அதுமாதிரியான பயத்தையும் பதற்றத்தையும் போக்கும் வகையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளவதற்கான டிப்ஸ்களை தந்து மாணவர்களின் மனதில் இடம்பிடித்து விட்டீர்கள்!
- எஸ்.பூபதிலிங்கம், ஆரணி.

மாணவர்களின் நடத்தையைப் புரிந்துகொள்வது எப்படி? என்ற ‘ஆயிஷா’ நடராசனின் கட்டுரை, சமகாலத்தின் மிக தீவிரமான ஒரு பிரச்னையை அலசி தீர்வு சொல்கிறது. இத்தொடரை புத்தகமாக்கி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பாடப் புத்தகமாக்க வேண்டும்!
-க. ரஞ்சனிகுமார், கோவை.



ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் பணியைப் படித்தபோது பெருமிதமாக இருந்தது. இன்றுள்ள பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் மற்றவர்களுக்கு உதவவெல்லாம் யாருக்கு நேரமிருக்கிறது..? நெருக்கடிக்கு மத்தியிலும் முகமறியாத பிள்ளைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் அந்த இளைஞர்கள் நெடுங்காலம் வாழ வேண்டும்..!
- எஸ்.புனிதவதி, தூத்துக்குடி.

‘எஞ்சினியரிங் படிப்புக்கு எதிர்காலம் இல்லையா?’ கட்டுரை தகுந்த நேரத்தில் வந்திருக்கிறது. பொறியியல் படிப்பதை கௌரவமாக நினைக்கும் இந்த சமூகம் இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கிறது. விதிமுறைகளை மீறி நடத்தப்படும் கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அக்கறையற்ற தன்மையைத் தான் காட்டுகிறது.
-சின்னமுத்து, திருவண்ணாமலை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள் அசத்தல். இதுமாதிரியான ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகளைத் தான் பொறியியல் மாணவர்களிடம் நாடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதுமாதிரியான கண்டுபிடிப்புகள் கல்லூரி வளாகத்தோடு முடங்கி விடாமல் வெகுஜன பயன்பாட்டுக்கு வரவேண்டும்.
- டி.வி.ரமா, செங்கல்பட்டு.

‘உதவித்தொகைகளை அள்ளித்தரும் பிரான்ஸ்’ கட்டுரை பல புதிய செய்திகளைத் தந்தது. அந்நாடு இந்திய மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் வியப்பூட்டின. படிப்பதோடு, செயல்முறைக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அவர்களது உயர்கல்வி முறை உண்மையிலேயே இந்தியா பின்பற்றவேண்டிய ஒன்று.
-ப. வேங்கடராகவன், சென்னை-78.