அண்ணா பல்கலையின் மறுமதிப்பீட்டு முறைகேடு!



சர்ச்சை

ஓர் அலசல்


இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என பெருமையோடு சொல்லப்பட்டுவந்த அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியான மறுமதிப்பீட்டு ஊழலால் தலைக்குனிவை சந்தித்துள்ளது நாம் அறிந்த ஒன்றுதான்.அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளில் 2017-ல் தேர்வு எழுதிய வர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 பேர் மறு திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளனர‌்.

இவர்களில் 16,636 பேருக்கு 15% மடங்கு வரை கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 15% அல்ல வாங்கிய மதிப்பெண்ணில் 15% மடங்கு ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றவருக்கு 10% முதல் 15% மடங்கு கூடுதல் மதிப்பெண் மூன்றாவது மறுமதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த 73 ஆயிரத்து 733 பேருக்கு மீண்டும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. கையூட்டாக குறைந்த அளவாக ஒரு மாணவனுக்கு ரூபாய் பத்தாயிரம் வாங்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று ஊழல் நடந்தேறியுள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக 2015 முதல் 2018 வரை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் தகவல் தொழில்நுட்பப் பேராசிரியராகவும் இருந்த உமா, ஊழல் தடுப்புத்துறைக் காவலரால் கைது செய்யப்பட்டுள்ளார். இம்முறைகேட்டில் மறுமதிப்பீடு நடைபெற்ற திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் விஜயகுமார் சிவகுமார் உள்ளிட்ட மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர‌்.

பல எதிர்ப்புகளுக்கு இடையே கர்நாடகாவிலிருந்து துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த ஊழல் அரங்கேறியுள்ளது. இவரோ பல்கலைக்கழக கல்லூரிகளில் இது நடைபெறவில்லை உறுப்புக் கல்லூரிகளில்தான் நிகழ்ந்துள்ளது. எந்தத் துறையில்தான் ஊழல் இல்லை எனக் கூறுகிறார்.

சமீபகாலமாக மர்ம தேசமாகிப்போன தமிழகத்தில், யார் யாரையோ காப்பாற்ற என்னென்னவோ நடக்கிறது. இந்த அவலநிலையைக் கண்டு தலைகுனிவதோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அரசும் கால்புள்ளியைகூட வைக்க இயலவில்லையே ஏன் என்ற கேள்விக்கு கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்

அண்ணா பல்கலையில் நடந்த முறைகேடு மிகவும் வருத்தத்துக்குரியது. இந்த முறைகேட்டில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், எந்தெந்த கல்லூரிகளெல்லாம் இப்படி முறைகேட்டில் ஈடுபடுகின்றன, யார் இடைத்தரகர் என்பதையெல்லாம் கண்டறிந்து களைந்து எடுத்தால்தான் அடுத்து அவர்கள் பயப்படுவார்கள். இதை சரிசெய்ய வேண்டுமானால் தேர்வுமுறையை மாற்ற வேண்டும்.

மறுமதிப்பீடு செய்வது என்ற முறையே தவறு. எதற்காக மாணவன் மறுமதிப்பீட்டுக்கு செல்கிறான்? மறுமதிப்பீட்டில் அதை சரிசெய்கிறார்கள். மறுமதிப்பீட்டில் மாற்றம் வந்தால், அந்தப் பேப்பரை முதலாவது தவறாகத் திருத்திய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். அதேபோல் மறுமதிப்பீட்டில் மாற்றம் வந்தால், அதற்காக வாங்கிய பணத்தை அண்ணா பல்கலைக்கழகம் அந்த மாணவருக்கு இரண்டு மடங்காக திருப்பி வழங்க வேண்டும். ஏனென்றால், ஆசிரியர் செய்த தவறுக்கு மாணவன் ஏன் பணம் கட்ட வேண்டும்?

தேர்வுமுறையை இனிமேல் ஆன்லைனில் கொண்டு வரலாம். ஏனெனில் மாற்றத்தை நோக்கித்தான் உலகம் சென்றுகொண்டிருக்கிறது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளெல்லாம் ஆன்லைனில் நடக்கும்போது, ஒரு பல்கலைக்கழக தேர்வை ஏன் ஆன்லைனில் நடத்த முடியாது. இதற்கான வசதிகள் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இருக்கிறது.

துணைவேந்தரை வைத்து இதையெல்லாம் பண்ணக்கூடாது. ஒருசில முன்னாள் துணைவேந்தர்கள் மீதே பல குற்றச்சாட்டுகள் இருக்கும்போது அதுபோன்றவர்களை வைத்து விசாரணை கமிஷன் அமைப்பது சரியாகாது.

நாட்டின் பாதுகாப்புக்காக நடத்தப்படும் விசாரணை வெளித்தன்மை இல்லையென்றால்கூட பரவாயில்லை. கல்வி, மருத்துவம் போன்றவற்றில் வெளித்தன்மையான விசாரணை கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்களைச் செய்தால்தான் அண்ணா பல்கலை திரும்பவும் நற்பெயருக்கு வரும்.

முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

தலைசிறந்த மாணவர்கள்தான் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும்‌. கலந்தாய்வில் கூட முதலில் நிரம்புவது அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மட்டுமே‌. இங்கு படித்தால் 100% வேலை உறுதி.கைநிறைய சம்பளம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட கல்லூரிதான் இன்று ஊழல் சாக்கடையில் மூழ்கித் திளைத்துள்ளது‌.

தகுதி இல்லா பொறியாளர்கள் இனி அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்படுவார்கள். ஒரு பிரபலமான நிறுவனமான எஃப் ஐ சி சி ஐ - ஹோம் கோஸ் நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு நடத்தி 75% பேர் தகுதி இல்லை என விலக்கியது. பொறியியல் சார்ந்த அடிப்படை அறிவுகூட இவர்களுக்கு இல்லை என கூறியது இந்நிறுவனம்.

2012-2017ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 5,000 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவருமே ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கொடுத்து பட்டம் பெற்றவர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றன. ஒரு நிறுவனம் வேலைக்கு என தேர்ந்தெடுப்பு நடத்தியபோது ஒரு மாணவருக்குதான் முனைவர் பட்டத்திற்காக எடுத்துக்கொண்ட ஆய்வுத் தலைப்பைக்கூட கூற முடியவில்லை எனக் கூறுவதிலிருந்து பல்கலைக்கழகம் தரம் தாழ்கிறது என்பது விளங்கும்.

500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை உறுப்புக் கல்லூரிகளாகக் கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் தரம் தாழாமல் இருக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

நெடுஞ்செழியன் தாமோதரன், கல்வியாளர்

மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானாலே முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அண்ணா பல்லைக்கழகம் டாக்டர் குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு பிறகு துணைவேந்தர்களால் அதன் தரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

அண்ணாப் பல்லைகழகம் டீச்சிங் அண்ட் ரிசர்ச். இங்கு படித்த எண்ணற்ற மாணவர்கள் உலக அளவில் நிறைய சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளை அண்ணா பல்லைக்கழகத்துடன் இணைத்தது மிகப் பெரிய தவறு. ஏனெனில், இந்தக் கல்லூரிகளிலெல்லாம் தரம் என்பது இருக்கவே இருக்காது.

துணைவேந்தர்களே நியமனத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வரும்போது அவர்களுக்கு கீழே உள்ளவர்களை நியமிப்பதிலும் பணம் பெற்றுக்கொண்டுதான் நியமிக்கப்படுகிறார்கள். இப்படி பணம் கொடுத்து சேர்ந்தவர்கள் அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக எந்தெந்த குறுக்கு வழிகளெல்லாம் இருக்கின்றன அந்தப் புதுப்புது வழிகளை எல்லாம் கண்டுபிடித்து அதன் கடைசி வழிதான் மாணவர்களின் தேர்வுத்தாளுக்கு பணம் வாங்கி அவர்களை தேர்ச்சி பெறச் செய்வது.

மெரிட் இல்லாமல் சரியான முறையில் ரெக்ரூட் செய்யாமல் யார்யாரெல்லாம் குறுக்குவழியில் வந்தார்களோ இவர்களையெல்லாம் களையெடுத்துவிட்டு அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தை முன்பு இருந்தபடி 4 உறுப்புக் கல்லூரிகளை மட்டும் வைத்துவிட்டு மீதிக் கல்லூரிகளுக்கு வேறு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி ஒரு துணைவேந்தரை நியமித்து அதன் தேர்வுமுறைகள் ஆகியவற்றை கண்காணிக்கும்படி இருந்தால் போதும். அந்தப் பல்கலைக்கழகம் தனியாக இயங்க வேண்டும். அப்படி யிருந்தால்தான் அண்ணா பல்கலைக்கழகம் உலகத்தர பல்கலைக்கழகங்களுக்கு இணையாக போட்டியிட முடியும்.

முறைகேடுகள் தொடர்ந்தால் நம் மாணவர்கள் வெளிநாடு செல்லும் விசா கேன்சல் ஆக நிறைய வாய்ப்புள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் உள்ள உயர்ந்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

இந்த ஒரு முறைகேடுதான் நடந்ததா, இதன் வாயிலாக பல முறைகேடுகள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதும் தெரியவில்லை. ஒன்று பூதாகரமாக்கப்படும்போது பின்னால் பல முறைகேடுகள் நடந்திருக்கும். அதை மறைப்பதற்காக இதை முன்னாடி கொண்டு வருகிறார்களா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

தற்போது கவுன்சிலி–்ங் நடக்கும்போது இதை ஏன் கொண்டுவர வேண்டும்? கவுன்சிலிங்கில் என்ன முறைகேடுகள் நடந்துகொண்டிருக்கின்றன? அது ஒழுங்காக போய்க்கொண்டிருக்கிறதா? அதிலும் தவறுகள் நடைபெறுகிறதா? இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்து விசாரிக்கப்பட வேண்டும்.

தனியார் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைத்திருப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் ஏமாற்றப்படுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை முழுமையாக ஒரு இன்வெஸ்டிகேஷன் செய்தே ஆகவேண்டும். அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்கும்.

- தோ.திருத்துவராஜ்