பேப்பர் பிளேட் தயாரிக்கலாம்…மாதம் ரூ.45,000 சம்பாதிக்கலாம்!



சுயதொழில்

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்துவந்த பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது என்றே சொல்லலாம். இதன் காரணமாக பேப்பர் தட்டு, கப்புகளுக்குத்தான் டிமாண்ட் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த விஷயத்தில் அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளும்பட்சத்தில் கையேந்தி பவன்கள் தொடங்கி வீட்டு விசேஷங்கள் வரை பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டில் வைக்கும் பிளாஸ்டிக் ஷீட்டுகள் வரை தவிர்க்கப்பட்டுவிடும். பிறகு பேப்பர் தட்டுகளும், பேப்பர் கப்புகளுமே அத்தியாவசிய பொருட்களாகிவிடும்.

இப்போதேகூட அலுவலகங்கள், வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்றுவிட முடியும். கோயம்புத்தூர் நல்லாம்பாளையத்தில் டீம் எஞ்சினியரிங் என்ற பெயரில் பேப்பர் பிளேட் இயந்திரம் தயாரிப்பு மற்றும் தொழிலுக்கான இலவசப் பயிற்சி ஆகியவற்றை வழங்கிவரும் ஆனந்த் கூறும் வழிமுறைகள்.  

‘‘படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் சென்று மாத வருமானத்துக்கு வேலை செய்வதில் எனக்கு விருப்பமில்லை. சுயமாக ஏதாவது ஒரு தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ஹைட்ராலிக் மெஷின் தொழிலைக் கற்றேன். பிறகு சிறியதாக டீம் எஞ்சினியரிங் என்ற பெயரில் தொழிலை ஆரம்பித்தேன். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இயந்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறேன். பேப்பர் தட்டு, கப், பாக்குமட்டை பிளேட் தயாரிப்பு உள்ளிட்ட இயந்திரங்களைத் தயாரித்துவருகிறேன்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். அழகாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை தட்டுப்பாடு மற்றும் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும். தயாரிப்பு முறையும் எளிது. நல்ல வருமானம் பார்க்கலாம். ஆண்டு முழுவதும் தேவைப்படும் பொருள்.

உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னையும் இல்லை. அதிக ஆட்கள் தேவையில்லை, பெரிய அளவில் இட வசதி தேவையில்லை, நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில் இது‘‘ என்று கூறும் ஆனந்த் இந்தத் தொழில் தொடங்குவதற்கான திட்ட மதிப்பீடு முதல் மாத வருவாய் வரை கொடுத்த புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்…

திட்ட மதிப்பீடு
ரூ.1.94 லட்சம்
நமது பங்கு 5 சதவிகிதம்     -   ரூ.9,700
மானியம் 25 சதவிகிதம்     -  ரூ.48,500
வங்கிக் கடன் 70 சதவிகிதம்     - ரூ.1,35,800
மானியம்

இத்தொழில் பிரதமரின் சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25 சதவிகிதமும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக்கொள்ளும். மேலும், நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத்தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது.

மூலதனம்

உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் நிறுவ 10க்கு 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி மின் இணைப்பு (ரூ.3 ஆயிரம்) ஆகியவை தேவைப்படும்.

முதலீடு

பேப்பர் பிளேட் இயந்திரம் 1 - ரூ.1.44 லட்சம்(பேப்பரை 4 முதல் 16 இஞ்ச் அளவுகளில் வட்ட வடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை உள்பட)ஒரு மாதம் தேவைப்படும் மூலப்பொருளான பேப்பரின் விலை ரூ.50 ஆயிரம்.
மொத்தம் - ரூ.1.94 லட்சம்.

தயாரிப்பு முறை

பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின். இரண்டும் மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவுக்குரிய கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்த வேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும். வட்ட வடிவில்
பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும். நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும் திக் ரகமென்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யலாம்.

கட் செய்த பேப்பர்களை பிளேட்டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்டுகளாக மாறும். பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை தொடங்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும். நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்டுகளாக சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார். பேப்பர் பிளேட்டுகளை மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும். பேப்பர் பிளேட் இயந்திரங்களை இயக்க அரை மணி நேரம் பார்த்தாலே போதும் கற்றுக்கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம்.
தேவையான பணியாளர்கள் மற்றும் ஊதியம்

ஆபரேட்டர்  (1)     - ரூ.10,000
பணியாளர் (1)     - ரூ.10,000
மொத்தம் (2)     - ரூ.20,000
உற்பத்தித் திறன்
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள்
ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை

பார்த்தால், 36,00,000 லட்சம் பிளேட்டுகளைத் தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் 3,00,000 பிளேட்டுகளைத் தயாரிக்கலாம். ஒருநாளில் 12,000 பிளேட்டுகள் உற்பத்தி செய்யலாம். இதற்கான மூலப்பொருளான பேப்பருக்கு 50,000 ரூபாய் செலவாகும்.

விற்பனை மூலம் வரவு

மொத்த விற்பனையில் ஒரு பிளேட்டின் விலை 45 பைசா என்று விற்பனை செய்தால் (0.45X3,00,000) மாதம் ரூ.1,35,000 கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் ஒரு பிளேட்டில் 15 பைசா வரை லாபம் கிடைக்கும். இதில் பேப்பரின் விலையைப் பொறுத்து லாபம் கூடவும் குறையவும் வாய்ப்புள்ளது.

விற்பனை வாய்ப்பு

கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்டுகள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்டு களை அதிகமாக வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரமான அதேசமயம் குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும். நிறைய ஆர்டர் கிடைக்கும்பட்சத்தில் லாபம் அதிகமாகும்.

நிர்வாகச் செலவுகள்

வாடகை     - ரூ.5,000
மின்சாரம்     - ரூ.2,000
ஏற்று கூலி மற்றும்
இதர செலவுகள்     - ரூ.5,000
இயந்திரப் பராமரிப்பு     - ரூ.1,000
மொத்தம்     - ரூ.13,000
நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)
மூலப்பொருட்கள்     - ரூ.50,000
சம்பளம்     - ரூ.20,000
நிர்வாகச் செலவுகள்     - ரூ.13,000
மொத்தச் செலவு     - ரூ.83,000

கடன்திருப்பம் மற்றும் வட்டி (ரூ.)
மூலதன கடன் திருப்பம்
(60 மாதங்கள்)     - ரூ.1,94,000
மூலதன கடன் வட்டி
(12.5 சதவிகிதம்)    - ரூ.72,750
மொத்தம்     - ரூ.2,66,750
ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டிய தொகை - ரூ.4,445
லாப விவரம்
மொத்த வரவு     - ரூ.1,35,000
மொத்த செலவு     -  ரூ.83,000
கடன் திருப்பம்
மற்றும் வட்டி     -    ரூ.4,445
நிகர லாபம்     -  ரூ.47,555

சுற்றுச்சூழல் குறித்து இன்று நம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால், பேப்பர் பிளேட் தயாரிப்பு தொழிலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பதால் சிறுதொழில் செய்ய விரும்புவோருக்கு சாதகமான தொழில். உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தத் தொழிலில் வாய்ப்புகளும் அதிகம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். தகுதியான வேலைதான் வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்காமல் குறைந்த முதலீட்டுடன் உடல் உழைப்பும் சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் சுயமாக தொழில் தொடங்க ஏற்ற தொழில் இது.

- தோ.திருத்துவராஜ்