10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சென்டம் பெற சூப்பர் டிப்ஸ்!* பொதுத்தேர்வு டிப்ஸ்

மருத்துவம் படிப்பதானாலும் சரி தொழில்நுட்பம் படிப்பதானாலும் சரி பத்தாம் வகுப்பு அறிவியல்தான் அடிப்படைப் பாடம் என்பதை  மறந்துவிடக்கூடாது. உயர்கல்விக்கு அடித்தளம் பத்தாம் வகுப்பு பாடங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி திட்டமிட்டு படித்தால்  அறிவியல்  பாடத்தில் முழு மதிப்பெண் 75க்கு 75 பெறுவது சுலபம்தான். 25 மதிப்பெண்கள் செய்முறை பயிற்சிக்கு வழங்கப்படும்.  மதிப்பெண்கள் அடிப்படையில் வினாத்தாள் எப்படியிருக்கும், வினாக்கள் எப்படி கேட்கப்படும், விடையளிப்பது எப்படி என்று இனி  பார்ப்போம்…

ஒரு மதிப்பெண் வினாக்கள்

ஒரு மதிப்பெண் வினாக்களைப் பொறுத்தவரை 15 வினாக்களில் குறைந்தது 5 வினாக்கள் பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படும்.  எனவே, ஒவ்வொரு பாடத்தினையும் (பாடங்கள் 7 மற்றும் 10 தவிர) வரிவரியாக வாசித்து மிக முக்கியமான குறிப்புகளை  அடிக்கோடிட்டு வைத்துக்கொண்டு அவ்வப்போது படித்துவர வேண்டும். அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த  நிகழ்வுகளையும், ஆண்டுகளையும் தனியாக எழுதி வைத்துக்கொண்டு படித்துவர வேண்டும். சமீபத்திய பொதுத்தேர்வுகளில் அறிவியல்  பாடத்தில் முழு மதிப்பெண் (75/75) பெற முடியாமல் போனதற்கு காரணம் ஒரு மதிப்பெண் வினா-விடைகள் பகுதியில்  தவறிழைத்ததே ஆகும்.

குறு வினா-விடைகள்

2 மதிப்பெண் வினா-விடைகளைப் பொறுத்தவரையில், 32 வினாக்களில் 20 வினாக்களுக்கு விடை எழுதவேண்டும். இதில்  பெரும்பாலும் மதிப்பீடு (Evaluation) பகுதியிலிருந்தே கேட்கப்படும். 1,5,6,8,16 மற்றும் 17 ஆகிய பாடங்களிலிருந்து மட்டும் தலா 3  வினாக்களாக மொத்தம் 18 வினாக்கள்  கேட்கப்படும். எனவே, இந்தப் பாடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிக்க வேண்டும்.  உயிரியலில் 3, 4 மற்றும் 5 ஆகிய பாடங்களில் உள்ள அனைத்து படங்களையும் வரைந்து பாகங்களைக் குறித்து பயிற்சி  எடுத்துக்கொள்ள வேண்டும். விடை மிகச் சரியாக தெரிந்த 20 வினாக்களைத் தேர்ந்தெடுத்து விடை எழுதவும். விடையில் கொஞ்சம்  சந்தேகம் இருந்தாலும்,  அத்தகைய வினாக்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் 32 வினாக்கள் இருப்பதால் அதிலிருந்து சிறந்த 20  வினாக்களைத் தேர்ந்தெடுப்பது சுலபமே.  

விரிவான வினா-விடைகள்

விரிவான வினா-விடைகளை (5 Mark) பொறுத்தவரை 2,7,10 மற்றும் 15 ஆகிய பாடங்களில் மதிப்பீடு (Evaluation) பகுதிகளில் மிக  எளிதாக படிக்கக்கூடிய (அல்லது) மிகக்குறைந்த எண்ணிகையிலான வினா-விடைகள் உள்ளன. இதனுடன் மேலே குறிப்பிட்ட  பாடங்களின் உள்பகுதியில் உள்ள மிக முக்கியமான மற்றும் தேர்வுகளில் அடிக்கடி  கேட்கப்படும் விரிவான வினா-விடைகளை (Extra  Questions) படித்தாலே அறிவியல் தேர்வில் கேட்கப்படும் 4 விரிவான வினா-விடைகளையும் எளிதாக எழுதிவிடலாம். 2,7,10 மற்றும் 15 ஆகிய பாடங்களின் உள்பகுதியிலிருந்து கேட்கப்படும் மிக முக்கியமான வினாக்கள்:

பாடம் 2 : 1. எய்ட்ஸ் (AIDS) - நோய்க்காரணி, அறிகுறிகள், நோய்த்தடுப்பும் கட்டுப்பாடும் மற்றும் HIV-ஐ கண்டறியும் ஆய்வு பற்றி  எழுதுக.

2.கீழ்க்கண்ட நோய்களின் நோய்க்காரணி, அறிகுறிகள், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றி எழுதுக. i.காசநோய் (Tuberculosis)  ii.டைபாய்டு (Typhoid) iii. அமிபிக் சீதபேதி (Amoebiasis) பாடம் 7:1. இடர்ப்பாடு தரும் கழிவுகளைக் (Harmful waste) கையாளும்  முறைகளை விளக்குக.

2.சூழ்நிலை மண்டலம்  குளம் (Pond Ecosysytem) பற்றி எழுதுக.

3.பசுமை வேதியியல் (Green Chemistry) என்றால் என்ன? அதன் விளைவாக உண்டாகும் பொருட்கள் (Products) மற்றும் எதிர்கால  பொருட்கள் (Future Products) பற்றி எழுதுக.

4.புவி கிராமம் (Global Village) மற்றும் புவி மின்னணு கிராமம் (Global Electronic Village) பற்றி எழுதுக.

5.பெட்ரோலியம் எவ்வாறு உருவாகிறது? எண்ணெய்க் கசிவினால் (Oil Spill) ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் யாவை? வாகன  அடிப்படையில் - பெட்ரோலியத்திற்கு மாற்று எரிபொருள் (Alternatives to Petroleum) பற்றி எழுதுக.

பாடம் 10:1. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை விவரி.

2.அவகாட்ரோ விதிப்படி மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவி.

3.அவகாட்ரோ விதி மற்றும் அதன் பயன்களை விவரி.

4.அவகாட்ரோ விதியின் மூலம் வாயுத் தனிமங்களின் அணுக்கட்டு எண்ணை எவ்வாறு கணக்கிட முடியும்.

பாடம் 17:1. இயக்கத்திற்கான முதல்/ இரண்டாம்/மூன்றாம் விதிகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரி. (3 தனித்தனி வினாக்கள்)

2.விசையின் திருப்புதிறன், இரட்டை (Movement of Force and Couple) ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.

3. புவீஈர்ப்பு முடுக்கம் (Acceleration due to Gravity) மற்றும் புவியின் நிறை (Mass of Earth) ஆகியவற்றை வருவி.

4. சந்திராயன் சாதனைகளை விவரி.

5. குளிரி தொழில்நுட்பத்தின் (Cryogenic Techniques) பயன்பாட்டினை விளக்குக.

குறிப்பு: மேற்க்கண்ட பாடங்களின் விரிவான வினா-விடைகளைப் படித்து முடித்தபின், 3, 4, 13 மற்றும் 17 ஆகிய பாடங்களில் நன்கு  படித்த, எளிதான, விரிவான வினா-விடைகளை அவ்வப்போது படித்து (Revise) நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. மேலே  கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்படி படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அறிவியல் பாடத்தில் முழு  மதிப்பெண் பெற வாழ்த்துகள்!