பருவ காலா பழங்கள்



கவர் ஸ்டோரி

சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு, நம் உடலின் ஆரோக்கியமும் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். இதற்காகவே இயற்கை விதவிதமான கனிகளை நமக்குத் தருகிறது. அவற்றின் வகைகளையும், பலன்களையும் முழுமையாக அறிந்துகொள்வது பழங்களைப் பயன்படுத்துவதற்கு நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

அந்தந்த பருவங்களில் கிடைப்பதை, அந்தந்த காலகட்டத்தில் சாப்பிடுவதுதான் முழுமையான பலனையும் தரும். பழங்கள் விஷயத்தில் அந்த தெளிவை ஏற்படுத்தவும் இந்த விரிவான பட்டியல் உங்களுக்கு உதவும்.

குளிர் காலத்தில்...

* ஆப்பிள்

தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியதில்லை என்பது முற்றிலும் உண்மை. குறிப்பாக, பெண்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாக ஆப்பிள் திகழ்கிறது. அவர்களுக்கு உண்டாகும் கரு வளையங்களைக் குறைக்க, உடல் எடையைக் குறைக்க, சருமப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் பற்கள் பளபளப்பாகவும் வலுவாகவும் இருக்க உதவுகிறது.

* வாழைப்பழம்

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, இதயத்தை வலுவாக வைக்க, உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

* ஸ்ட்ராபெர்ரி

பல்வேறு கண் பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பதோடு, இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆபத்துகளை தடுக்க உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களில் ஒன்றாக உள்ளது. 

* பேரிக்காய்

காய் என்று அதன் பெயரில் நாம் குறிப்பிட்டாலும், இதுவும் ஒரு பழவகையே. இது எலும்புகளின் வலிமைக்கும், பல்வேறு தொண்டை பிரச்னைகளைத் தடுக்கவும், உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உயர்தர பழமாகவும் உள்ளது. 

* திராட்சை

கருப்பு, பச்சை ஆகிய இரு நிற திராட்சைகளும் வெவ்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இது தோல் நிறங்களை சீராக பராமரிக்க உதவுவதோடு, மார்பகப் புற்றுநோயை எதிர்த்து செயல்படுகிறது.

* அன்னாசி

இது காயங்களைக் குணப்படுத்த உதவுவதால், பெரும்பாலும் காயமடைந்த நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதோடு புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது இருமல் மற்றும் சளியைக் குறைக்க உதவுகிறது.

*அத்தி

இதிலுள்ள கால்சியம் எலும்புகளின் வலிமைக்கும், நார்ச்சத்து உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி, இ போன்றவை தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் இது உடல் மினுமினுப்பாக இருக்க உதவுகிறது.

*கொய்யா

இது மன அழுத்த நிவாரணத்துக்கு உதவுவதோடு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

*திராட்சை

இது ஒரு சிறந்த எடை குறைப்பு மருந்தாக உள்ளது. இரவு நேர பார்வைத்திறன் பிரச்னை(Night Blindness) இருப்பவர்கள் தினசரி இதை சாப்பிடுவது நல்லது. இது எலும்புகளின் வலுவுக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. மேலும் இது தலைமுடி மற்றும் தோல் பராமரிப்புக்கு உதவுகிறது.

*ஆரஞ்சு

இதில் வைட்டமின் சி மற்றும் Anthocyanins என்கிற நிறமியும் நிறைவாக உள்ளது. இது தோல் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில்
உதவுகிறது.

*பப்பாளி

இது உடல் திசு புதுப்பித்தல் செயல்முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதற்கும், சூரிய ஒளி தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கும், முகப்பரு பிரச்னைகளைக் குறைப்பதற்கும் உதவுகிறது. வசந்த காலத்தில்...மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களை வசந்த காலம் என்று அழைக்கிறோம். இந்த மாதங்களில் சாப்பிட உகந்த பழங்களை வசந்தகால பழங்கள் என்கிறோம்.

* மாம்பழம்

சுவைமிகுந்த முக்கனிகளில் முதல் கனியான மாம்பழம் இதய நோய்களைத் தடுக்க உதவுவதோடு, புற்றுநோய் உருவாவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

* பலாப்பழம்

புரதச்சத்து நிறைந்த இந்த பழம் தோல் மினுமினுப்புக்கும், பெருங்குடல் புற்றுநோயைத் தவிர்க்கவும் உதவுகிறது.

* எலுமிச்சைப்பழம்

இது மிகவும் பிரபலமான ஓர் இயற்கை மருந்தாக உள்ளது. இது நமது உடலின் வெளிப்புற அழகு மற்றும் உட்புற உறுதிக்கு உதவுகிறது. தினசரி ஒரு டம்ளர் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் மூலம் உடலை உறுதியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.

* சர்க்கரை பாதாமி பழம் (Apricot)

இந்த பழம் எல்லா பருவ காலங்களிலும் கிடைத்தாலும் வசந்த காலத்தில் சாப்பிடுவதற்கு உகந்தது. இது கண், இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் இதை தினசரி சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமாவின் அறிகுறிகளைத் தடுக்கலாம்.

* விளச்சிப்பழம் (Lychee)

இது ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இந்த பழச்சாறினை தினசரி ஒரு டம்ளர் குடித்து வருவதன் மூலம் கண், இதயம், எலும்புகள், தோல் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

கோடை காலத்தில்...

கோடைகால அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. உடலின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு குடிநீர் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. இதுபோன்ற காலங்களில் பழங்கள் அல்லது அதன் சாறுகளை எல்லா வேலைகளிலும் நாம் சாப்பிட வேண்டும். கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வதற்கு அதற்கேற்ற பழங்களை சாப்பிடுவது நல்லது.  

* தர்பூசணி

அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் கோடைகால பழங்களில் ஒன்று தர்பூசணி. இது சிறுநீரகக்கல், ஆஸ்துமா, மலச்சிக்கல், இதயநோய், தசை முறிவுகள் போன்ற மேலும் பல சுகாதார பிரச்னைகளுக்கு நல்ல பலனளிக்கிறது.

* பிளாக்பெர்ரி

சருமத்தில் எண்ணெய்பசை அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனளிக்கிறது. ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தவும், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது நீரிழிவு மற்றும் புற்றுநோயாளிகள்
சாப்பிட உகந்தது. 

* ப்ளூபெர்ரி

இது குறைவான கலோரியையும் அதிக ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடு மற்றும் நினைவுத் திறனை மேம்படுத்த உதவுகிறது.

* செர்ரிபழம்

இது வயிற்றுப் பகுதி கொழுப்பினைக் குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

* பீச் பழம்

கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதால் இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது. இது கண் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிகளவிலான தசைப் பிடிப்பு பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

* ப்ளம் பழம்

இதில் ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளது. இது உடலில் உள்ள வடுக்களைக் குறைத்து, ஆரோக்கியமாகவும்,
இளமையாகவும் இருக்க உதவுகிறது. 

* ராஸ்பெர்ரி

இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சரும நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது உடல் எடை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, புற்றுநோயை எதிர்த்து செயல்படவும் உதவுகிறது!