மாவட்டம் தோறும் மருத்துவ இல்லங்கள் வேண்டும்!



சிறப்பு கட்டுரை

மருத்துவமனையையும் முதியோர் இல்லத்தையும் இணைத்து ‘மருத்துவ இல்லம்’ என ஒன்றை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வருகிறார் பொது அறுவைசிகிச்சை நிபுணரான சுரேஷ். எப்படி வந்தது இந்த புதிய யோசனை? மருத்துவ இல்லத்துக்கான தேவை என்ன என்று அவரிடம் கேட்டோம்…

‘‘முதியவர்கள் என்றாலே அவர்கள் வாழ்ந்து முடித்தவர்கள் என்றும், அவர்களுக்கு இனி என்ன இருக்கு என்றும் அவர்களைப் புறக்கணிக்கும் நிலையே இன்று பல இடங்களிலும் காணப்படுகிறது.

குறிப்பாக, நகரங்களில் முதியோரைக் கவனிப்பதற்கு பெரும்பாலானோர் தயாராக இல்லை. பெற்றவர்கள், வளர்த்தவர்கள், படிக்க வைத்தவர்கள் என எதையும் நினைத்து பாராமல் கடைசி காலத்தில் அவர்களின் உடல்ரீதியான பிரச்னைகளையும், மனரீதியான பிரச்னைகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

இவ்வாறான சூழலில் இவர்களை அரவணைத்து தங்கவைத்து, சரியான நேரத்துக்கு சரியான உணவு தந்து தேவையான மருத்துவம் தந்து அவர்களின் மனநலம் உடல்நலம் போன்றவற்றை பேணி கடைசி காலத்தில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

முதியவர்கள் கடைசி காலத்தில் நோயால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனை, சிகிச்சை என்று போய்விட்டால், அவர்களுக்கு என்னதான் சிறப்பான சிகிச்சை அளித்தாலும் வீடு திரும்பிய பிறகு மீண்டும் நோய்த்தாக்கம் வந்துவிடுகிறது. உயிரிழப்பு ஏற்படுகிற சோகமும் உண்டு.

மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை முடித்தபிறகு, வீட்டுக்குத் திரும்பும் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். அதுதான் மருத்துவர்களின் நம்பிக்கை. ஆனால், அதற்கு மாறாக, வீடு திரும்பும் முதிய நோயாளிகள் பற்றி குறுகிய காலத்திலேயே சோகமான செய்திகளைக் கேட்க நேரிடுகிறது.

இதற்கு காரணம், நோய்வாய்ப்பட்ட அவர்களை பராமரிப்பது, மருத்துவமனை வந்து சென்றவுடன் மேலும் குறைந்துவிடுகிறது. ஒரு வேளை தக்க மருத்துவம் கிடைப்பதுடன், போதுமான கவனிப்பும் கிடைத்தால் அவர்களின் ஆயுள் நீளக் கூடும்.

இதை மனதில் வைத்துதான் அம்மா சரணாலயத்தைத் தொடங்கினேன். ‘அம்மா மருத்துவமனை’ என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறேன். அதனுடன் அம்மா சரணாலயம் என்ற முதியோர் நலனுக்காக
தனிப்பிரிவையும் இல்லம் போல தொடங்கினேன்.

இந்த சரணாலயம் அமைப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. பொதுவாக, முதியவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மறதி, மூட்டுவலி, மலச்சிக்கல், கண்பார்வைக் கோளாறு, காது கேளாமை, மயக்கம், சிறுநீரகம் செயல் இழப்பு, வாத நோய்கள், புற்றுநோய் அறிகுறி, ஜீரண மண்டல பாதிப்பு, கண்புரை என எத்தனையோ பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.

இத்தனை பாதிப்புகளோடு வீட்டில் இருக்கும் முதியவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுகிறது. நின்று பேசக் கூட நேரம் இல்லாத அவசர உலகில் முதியவர்களைக் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமனைக்கு அழைத்து வந்து, மீண்டும் அழைத்துப் போவதற்கு யாருக்கும் பொறுமை இல்லை. அவர்களைப் பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் அவர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அவர்கள் வெளியில் சென்று வர விரும்பும்போது, அதற்கு தகுந்த ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அழைத்து சென்று வருகிறோம். உறவினர் வீட்டில் விசேஷம் போன்ற நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து அழைத்து செல்வதும் உண்டு.இப்படி ஒரு சேவையை முழுமையாக இலவசமாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இப்போது இல்லை.

மருத்துவ செலவினங்களுக்காகவும், பராமரிப்புக்காகவும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்றுக் கொள்கிறோம். அறுவை சிகிச்சை போன்ற பெரிய செலவுகள் ஏற்படும்போது முதியோர் நலனுக்காக நாங்கள் தொடங்கியிருக்கும் ‘ஆத்மா ஃபவுண்டேஷன்’ மூலம் இந்த தொகையை நிவர்த்தி செய்துகொள்கிறோம். 

மேலும், அவர்கள் மருத்துவமனையிலேயே இருப்பதால் மாரடைப்பு போன்ற நிலையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிகிறது. முதியோருக்கு தனிமை ஒரு பெரிய கொடுமையாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அவர்களோடு அன்போடும், நம்பிக்கையோடும் பேசுகிறோம். இது அவர்களுக்கு மிகுந்த ஆதரவாக இருக்கிறது.

இதன்மூலம் இரண்டு விஷயங்களைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதல் விஷயம்... இன்றைய தலைமுறையினர் பெற்றோருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களின் கடைசி காலத்தை மகிழ்ச்சிகரமாக இல்லாவிட்டாலும் நிம்மதியாக மாற்ற உதவ வேண்டும்.

 அவர்களின் வார்த்தைகளை, தேவைகளைக் கொஞ்சம் காது கொடுத்து கேட்பது அவசியம். பொருளாதாரரீதியான வசதிகளைவிட அன்பான வார்த்தைகளே அவர்
களுக்குப் பெரிதும் தேவை. எனவே, அவர்களை அன்போடு பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது விஷயம், மாறிவரும் இன்றைய சூழலில் முதியோரைத் தங்கவைத்து சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ இல்லங்களுக்கான தேவை எல்லா இடங்களிலும் இருக்கிறது. எனவே, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொருளாதார வசதி படைத்தவர்கள் இதுபோல் மருத்துவ இல்லங்களைப் பரவலாக அமைக்க வேண்டும். மாவட்டந்தோறும் அரசே இதை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும். இது முதியவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு பெரிதும் பயனுள்ளதாகவும் இருக்கும்!’’

- க.இளஞ்சேரன்

படங்கள்: கிஷோர்ராஜ், ஆர்.கோபால்