குழந்தை விரும்புவது என்ன?குழந்தையின் கண்களைக் கொண்டு இந்த உலகின் அழகை, வாழ்க்கையின் ரம்மியத்தை ரசித்திருக்கிறீர்களா? நீங்களும் வளர்ந்துவிட்ட ஒரு குழந்தைதான் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதரையும் நேசத்துடனும், நட்புடனும்  அணுகியிருக்கிறீர்களா? யாரிடமாவது சண்டையோ, கருத்து வேறுபாடோ  ஏற்பட்டு, உங்களிடம் தவறே இல்லாதபோதும்கூட நீங்களாகவே முன்வந்து  சமாதானம் செய்ய முயற்சித்து இருக்கிறீர்களா?

இந்த  மாதிரியான  உன்னத உணர்வுகளை, உறங்கிக்கொண்டிருக்கும் நம் மனதுக்குள்ளிலிருந்து தட்டியெழுப்பி விழிப்படையச் செய்கிறது  அலெக்சாண்டர் மிலோவின்  ‘லவ்’ என்கிற  சிற்பம்.

உலகக் கலைஞர்களையே திரும்பிப் பார்க்க வைத்த  சிற்பம்  இது. 59 அடி நீளம், 18 அடி அகலம், 24 அடி உயரம் கொண்ட பிரமாண்ட படைப்பும் கூட. உக்ரைன் நாட்டுச் சிற்பியான மிலோவின் ‘லவ்’ சிற்பத்தில் ஆண், பெண் என இரண்டு உருவங்கள் தனித்தனித் தீவாக முரண்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.  இந்த சிற்பத்தை உலோகத்தைக் கொண்டு ஒரு கூண்டு போல வடிவமைத்திருக்கிறார். அந்த கூண்டுக்குள் அன்பு, சமாதானத்தை வேண்டி ஏங்கி நிற்கின்ற இரண்டு குழந்தைகளின் சிற்பங் களையும் வைத்திருக்கிறார்.

பகலில் இந்த சிற்பத்தை பார்க்கும்போது எந்த உணர்வும் நமக்கு ஏற்படாது. ஆனால் கதிரவன் மறைந்து இருள்சூழ ஆரம்பித்ததும் ரேடியம் பூசப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகள், நிலவைப் போல ஒளிர ஆரம்பிப்பார்கள்.

அப்போது அந்த சிற்பத்தைக் காணும்போது நம் மனதை சதா அலைக்கழித்துக் கொண்டிருக்கும் ஈகோ, போட்டி, பொறாமை போன்ற இருள் மறைந்து அன்பு, காதல், சமாதானம் என்ற வெளிச்சம்நம் மீது பாயும். அந்த ஆண்-பெண் போல நாம் வெளியில் எவ்வளவு முரண்பட்டு இருந்தாலும், நமக்குள் குடிகொண்டி ருக்கும் குழந் தைமை விரும்புவது அன்பை மட்டும்தான் என்பது இதன் ஹைலைட்!

இன்று ஆயிரக்கணக்கானவர்கள் நீதிமன்றத்தின் வாசல் முன் விவாகரத்தை வேண்டி முரண்பட்டு நிற்பதற்கு முதன் மைக் காரணமாக இருப்பது தங்களுக்குள்ளே எப்போதும் ஒளிந்துகொண்டிருக்கின்ற குழந்தைமை உணர்வை மறந்ததுதான். நாம் மறந்துவிட்ட  அந்தக் குழந்தைமையை தன் கலையி னூடாக  ஒளிரவிட்டிருக்கிறான் மிலோவ் என்ற கலைஞன்!

த.சக்திவேல்