இலங்கை வேந்தன் சிந்தனை



மனம் மயங்குதே...

ஆதிகாலத்து மனிதர்கள் வேட்டைக்குச் செல்வார்கள். வேட்டையில்மிருகங்கள் சிக்குவதே அபூர்வமாகத்தான் இருக்கும். அப்படிக் கிடைக்கும் போது, அதைக் கொண்டு வந்து, வேட்டைக்குப் போகாதவர்களுக்கும் வேட்டை உணவு கிடைக்காமல் திரும்பியவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள். 

அந்தக் காலத்தில் ஃப்ரிட்ஜ் கிடையாது. தெரிந்தவர்களின் வயிறுதான் ஃப்ரிட்ஜ். இன்று நாம் ஒருவருக்கு உதவினால், நாளை நமக்கு உதவி தேவைப்படுகிற போது, அது திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படை.

நமக்கு உதவி செய்தவருக்கு மறு உதவி செய்கிற உணர்வானது, மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே நம் மரபில் பதிந்த விஷயம். கடனாளியாக இருக்க யாருக்கும் விருப்பமில்லை. நன்றிக் கடனைத் திரும்பச் செலுத்துகிற வரை ‘கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிற மாதிரி ஒரு துடிப்பு நம்மை விரட்டிக் கொண்டே இருக்கும்.

தான் கல்யாணம் முடிக்கவிருக்கிற பெண் மற்றும் அவளது பெற்றோருடன் என்னைப் பார்க்க வந்தார் அகிலன். நேரில் வருவதற்கு முன் சில விஷயங்களை என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார்.‘‘நானும் பாவனாவும் காதலிக்கிறோம்.

என்கிட்ட ரொம்ப அன்பா, சிரிச்சுப் பேசிப் பழகுவா. ஆனா, சமீப காலமா நாங்க சந்திக்கிற போதெல்லாம் அவ பயங்கரமா அழறா. காரணம் கேட்டா சொல்ல மாட்டேங்கிறா. ஆரம்பத்துல எங்க காதல்ல அவங்கம்மா-அப்பாவுக்கு விருப்பம் இல்லாம இருந்தது.

 ஆனா, ஒரு கட்டத்துல ஏத்துக்கிட்டாங்க. எனக்கொரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு நான்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும். கொஞ்ச நாளைக்கு என் குடும்பத்தை நான்தான் சப்போர்ட் பண்ணியாகணும். எல்லாத்தையும் அவகிட்ட சொல்லியிருக்கேன்.

 என்ன பிரச்னைன்னே தெரியலை... அவளோட அழுகைக்கு மட்டும் எங்களால காரணம் கண்டுபிடிக்க முடியலை. நீங்கதான் பேசிப் பார்க்கணும்...’’ என்று முடித்துக் கொண்டார்.

நேரில் சந்திக்க வந்த போது, பாவனாவுக்கும் அகிலனுக்கும் தோற்றப் பொருத்தம் கொஞ்சமும் இல்லை. அகிலன் முரட்டுத் தோற்றத்துடனும், பாவனா, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட அழகுப் பதுமையாகவும் இருந்தார்கள்.

பாவனாவின் பெற்றோரிடம் முதலில் பேசினேன். ‘‘எங்க பொண்ணோட கம்பேர் பண்ணும் போது அழகு, வேலை, சம்பளம்னு எல்லாத்துலயும் பையன் ரொம்ப சுமார்தான். ஆனாலும் பொண்ணு ஆசைப்பட்டாளேனுதான் சம்மதிச்சோம்.

எங்க பொண்ணு படிச்சு நல்ல வேலையில இருக்கா. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு பார்த்தா, பையன் தரப்புல இழுக்கறாங்க. அவனுக்கொரு தங்கச்சி இருக்கா. அவ படிச்சிட்டிருக்கா. படிப்பை முடிச்சு, ஒரு வேலையில உட்கார்ந்த பிறகு, அவளுக்கு கல்யாணம் முடிச்சிட்டுத்தான் தன் கல்யாணம்னு சொல்றான். என் பொண்ணு உடைஞ்சு போக இதுதான் காரணமா இருக்கணும்...’’ என்றார் பாவனாவின் அப்பா.

பாவனாவிடம் தனியே பேச ஆரம்பித்தபோதும், அடிக்கடி உடைந்து அழுதார். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு மனம் திறந்தார். ‘‘நானும், அகிலனும் சின்ன வயசுலேருந்தே ஃப்ரெண்ட்ஸ். எங்க ஏரியா பசங்க என்னைக் கிண்டலடிச்சா கூட அகிலன்தான் எனக்குப் பாதுகாப்பா நிற்பான்.

அவன் இருக்கிறதால என்கிட்ட வரவே எல்லாரும் பயப்படுவாங்க. காலேஜ் போனதும் சந்தோஷுக்கும் எனக்கும் லவ் வந்தது. எங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தையும் பார்த்து காலேஜே அசந்து போகும்.

சந்தோஷ் அவ்ளோ அழகு... செம ஸ்மார்ட். எல்லாத்தையும் அகிலன்கிட்ட தான் முதல்ல சொல்வேன். சந்தோஷப்படுவான். காலேஜ் முடிச்சதும் சந்தோஷ் ஒரு வருஷம் வெளிநாட்ல வேலை பார்த்துட்டு வந்துடறதாகவும், வந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னும் சொன்னான். ஆனா, போனவன் 4 வருஷங்களாகியும் திரும்பலை. எங்க இருக்கான், என்ன பண்றான்னு எந்த விவரமும் இல்லை. காத்திருந்து காத்திருந்து 4 வருஷங்கள் ஓடினதுதான் மிச்சம்.

ஒரு கட்டத்துல அவன் இனி வரவே மாட்டான்னு தெரிஞ்சதும் நான் பயங்கரமான மன அழுத்தத்துல இருந்தேன். அதுலேருந்து என்னைத் தேற்றி, எனக்கு ஆறுதல் சொல்லி, தைரியம் சொல்லி, மீட்டுக் கொண்டு வந்தது அகிலன்தான். அவன் என்கூட இருந்தது மனசுக்கு ஆறுதலா இருந்தது. மேல படிச்சேன்.

வேலையில சேர்ந்தேன். எல்லாக் காலக் கட்டங்கள்லயும் எனக்கு துணையா இருக்கிற அகிலன், வாழ்க்கைத் துணையாகவும் வந்தா நல்லாருக்கும்னு ஃபீல் பண்ணி, என் விருப்பத்தைச் சொன்னேன்.

முதல்ல தயங்கினாலும், அப்புறம் சம்மதிச்சான். என்னோட சம்பளம் 1 லட்சம். அவனோ  20 ஆயிரம்தான் வாங்கறான். கல்யாணத்துக்குப் பிறகு தன் சம்பளத்தை அப்படியே தன் குடும்பத்துக்குக் கொடுத்துடுவேன்னு சொல்றான்.

 தங்கச்சி படிப்பு, வேலை, கல்யாணத்துக்காக காத்திருக்கணும்னு சொல்றான். சமீப காலமா இதையெல்லாம் நினைச்சா எனக்கு அழுகையா வருது. அவனைப் பார்த்தாலே அழத் தோணுது. என்னவோ ஒரு பாரம் என் மனசை அழுத்திக்கிட்டே இருக்கு... சொல்லத் தெரியலை மேடம்...’’ என்று மறுபடி அழ ஆரம்பித்தார்.

அழகு, படிப்பு என எல்லாவற்றிலும் தனக்கு சமமாக இருந்த காதலன், ஆசை வார்த்தை பேசி, கல்யாணக் கனவு காண வைத்த காதலன்... எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டுப் போய்விட்டான்.

அந்தஅதிர்ச்சியிலிருந்து மீண்டெழுவது எந்தப் பெண்ணுக்கும் அத்தனை லேசானதல்ல. தண்ணீரில் மூழ்கித் தத்தளித்து, உயிருக்குப் போராடி இறந்து போகிறவர்களின் சடலங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களது கைகள் பெரும்பாலும் இறுக மூடியிருக்கும்.

அந்தக் கைகளுக்குள் புல்லோ, இலையோ, சகதியோ ஏதோ ஒன்று இருக்கும். தண்ணீரிலிருந்து தப்பித்து மேலெழுந்து வர தனக்கு ஏதாவது ஒரு பிடிமானம் கிடைக்காதா என்கிற மரணப் பதைபதைப்பில் கையில் அகப்படுகிற புல், இலை என எதையாவது  இறுக்கமாகப் பிடித்துக் கொள்வார்கள். இறந்த பிறகும் அவர்களது கையில் இருந்து அவற்றைப் பிரிக்கவும் முடியாது. உயிருக்குப் போராடிய அந்த தவிப்பும் பயமும்  இறுக்கமான அந்தக் கைகளில் தெரியும்.

காதலனால் ஏமாற்றப்பட்டு, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பாவனாவுக்கும், அகிலனின் அன்பும் ஆதரவும் ஆபத்தில் கைகளுக்குக் கிடைத்த புல், பூண்டு போலத்தான். நேசக்கரம் நீட்டியவரின் தோள்களில் ஆதரவாகச் சாய்ந்து கொள்ள வைத்திருக்கிறது.

சிறு வயது முதல் தனக்குப் பாதுகாப்பாகவும் உதவியாகவும் இருந்தவராயிற்றே என்கிற நன்றி உணர்ச்சியை அவர் காதல் எனத் தவறாக உணர்ந்திருக்கிறார். அந்தக் கணத்தில் புரியாத அந்த உணர்வு, நாளாக, ஆக, அடிமனத்துக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.

20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவருடன் வாழ்க்கை என்பது சாத்தியமா என உறுத்த ஆரம்பித்திருக்கிறது. அந்தக் குழப்பம்தான் பாவனாவுக்கு அழுகையாக வெடிக்கிறது.
காதல் என்பது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வருகிற உணர்வல்ல. அது ஒரு அழகான உணர்வு. மனதில் ஒருவித த்ரில்லுடனும் துள்ளலுடனும் சிறிதே காமத்துடனும் பூக்கும் அற்புதமான உணர்வு. அந்தக் காதலானது ஒருவரை ஒருவர் மேம்படுத்துவதாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

மாறாக தாழ்வு மனப்பான்மையில் தள்ளவோ, குழப்பத்தில் ஆழ்த்தவோ கூடாது. பாவனாவுக்கு அகிலனின் மேல் உருவானது காதலே அல்ல என்பதையும் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்துகிற வழியாக அவரே குழப்பிக் கொண்ட கலவையான உணர்வுதான் அது என்பதையும் புரிய வைத்தேன். அவருக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவரது அம்மா-அப்பாவிடமே விடும்படியும் அறிவுறுத்தினேன். இனி அகிலனை சந்திக்கிற போது அழுகை வராது பாவனாவுக்கு.

சற்றே தயங்கினாலும் பக்குவமாகப் புரிந்து கொண்டு சந்தோஷமாகத் தலையாட்டினார் அகிலன். இரண்டு பேரும் அழகாக ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். உறுதியான மனப்பான்மையுடன் கிளம்பினார்கள். காதல் என்பது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வருகிற உணர்வல்ல. அது ஒரு அழகான உணர்வு. அந்தக் காதலானது ஒருவரை ஒருவர் மேம்படுத்துவதாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

பயிற்சி

காதலில் தோல்வி என்பது மிகவும் சகஜமான ஒன்று. காதல் தோல்வி என்றில்லை, எந்த ஒரு தோல்விக்குப் பிறகும் மனம் கொடூர உளைச்சலில் தத்தளிக்கும் போது, ஆதரவு தேடித் துழாவும். ஆதரவு என்கிற சாயலில் ஏதேனும் தட்டுப்பட்டால்கூட அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள நினைக்கும். இது மனித இயல்பு. ஆனால், காதலில் தோல்வியை சந்தித்த இளம் பெண்கள், ஆதரவுக்காக ஏங்கும் போது, ஆதரவுக் கரம் நீட்டுபவர் ஆணாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புதிதாகக் கிடைத்த அன்பை, இழந்த காதலின் இடத்தில் பொருத்திப் பார்ப்பது கூடாது. சமுதாயத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு வி.ஐ.பிக்கு கருப்புப் பூனை பாதுகாப்பு கொடுப்பார்கள். பாதுகாவல் பொறுப்பில் இருக்கும் காவலர்கள், சம்பந்தப்பட்ட அந்த நபருக்காக உயிரையும் கொடுக்கக் கடமைப்பட்டவர்கள். அது அவர்களது கடமை என்பது ஆரம்பத்திலேயே அவர்களுக்கு உறுதியாகப் பயிற்றுவிக்கப்படும். பொறுப்பில் எந்த வி.ஐ.பி. இருந்தாலும் அதுதான் அவர்களது கடமை.

 இந்தக் கடமை உணர்வை, நன்றி உணர்வுடன் இணைத்து அவர்கள் மீது அதீத ஆர்வம் கொள்வதும், அடுத்த நிலைக்கு நட்பை வளர்ப்பதும் எப்படி அபத்தமானதோ, அதே போன்றதுதான், காதல் தோல்விக்குப் பிறகு கிடைக்கிற  அன்பையும் ஆதரவையும் காதலோடு குழப்பிக் கொள்வது.உணர்வுகளை வகைப்படுத்தக் கற்றுக் கொள்வதுதான் இங்கே அவசியம். எது அன்பு, எது அக்கறை, எது காதல், எது நட்பு என எல்லாவற்றின் மீதும் தெளிவு வேண்டும். ஆதரவாக ஆரம்பிக்கிற அக்கறையானது ஒருவேளை காதலாகவும் மாறலாம். ஆனாலும், அது நன்றி உணர்வினால் மட்டுமே மாறிய காதலாக இருக்கக் கூடாது.

டாக்டர் சுபா சார்லஸ்

(சிந்திப்போம்...)

எழுத்து வடிவம்: சாஹா