துணிகள் சூழ்ந்த உலகு!



வனிதா ஸ்ரீனிவாசன்

அறிமுகப் படத்திலேயே கவனம் ஈர்த்தவர்... கோடம்பாக்கத்தில் நிரம்பி வழிகிற காஸ்ட்யூம் டிசைனர்களில் புது வரவு... ‘நவீன சரஸ்வதி சபதம்’ மற்றும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என இரண்டு படங்களின் உடை வடிவமைப்பாளர்...

 வனிதா ஸ்ரீனிவாசன்!‘‘டைட்டில் கார்டுல ‘காஸ்ட்யூம் டிசைனர்’னு என் பேரைப் பார்க்கிறப்ப எனக்கே கொஞ்சம் புதுசாதான் இருக்கு. நினைச்சே பார்க்கலை...’’ - ஆச்சரியம் அகலாமல் பேசுகிறார் வனிதா! ‘‘டென்த் படிக்கிறபோதே ஃபேஷன் டிசைனிங்ல இன்ட்ரெஸ்ட்.

என்ஐஎஃப்டி-யில படிக்கிறதுக்கான பிளான்ல இருந்தேன். நிஃப்ட்டுல சேர்றதுக்கான எக்ஸாம்... பயங்கரமா தயார்படுத்திட்டுத்தான் போயிருந்தேன். ஆனாலும், எக்ஸாம் ஹாலுக்குள்ள போனதும் படபடப்பானதுல, எக்ஸாம்ல சொதப்பிட்டேன். என்னால அங்கே சேர முடியலை. அந்த வருத்தம் எனக்கு ரொம்ப காலம் இருந்தது. அப்புறம் விஸ்காம் படிச்சேன். ஆனாலும், என்னோட ஃபேஷன் டிசைனிங் இன்ட்ரஸ்ட் சுத்திச் சுத்தி வந்திட்டிருந்தது.

பொதுவாவே நான் டிரெஸ் பண்ற விதம் எல்லாருக்கும் பிடிக்கும். கல்யாணத்துக்குப் பிறகு என் ஹஸ்பெண்டும், புகுந்த வீட்டு உறவுகளும் அந்த ஆர்வத்தை என்கரேஜ் பண்ணினாங்க. அகடமி ஆஃப் ஃபேஷன் அண்ட் டெக்ஸ்டைல்ஸ்ல சேர்ந்து படிச்சேன். அந்த ஒரு வருஷப் படிப்பு எனக்கு நிறைய கத்துத் தந்தது.

ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூல்ல ஒரு ஃபங்ஷனுக்கு 60 குழந்தைகளுக்கு டிரெஸ் டிசைன் பண்ற வாய்ப்பு வந்தது. அதுல கிடைச்ச நல்ல பேர், நிச்சயம் இந்தத் துறையில நானும் சாதிப்பேங்கிற நம்பிக்கையைக் கொடுத்தது...’’ என்கிற வனிதா, திட்டமிட்டெல்லாம் சினிமாவுக்குள் வரவில்லையாம்.

‘‘ஹஸ்பெண்ட் ஸ்ரீனிவாசன் சினிமாவுல ஒளிப்பதிவாளரா இருக்கார். ஆனாலும், எனக்கு படத்துக்கு ஒர்க் பண்ற எண்ணமே வரலை. சினிமா பி.ஆர்.ஓவும், நடிகர் அஜீத்தோட மேனேஜருமான சுரேஷ் சந்திரா எங்களுக்குக் குடும்ப நண்பர்.

என்னோட டிசைனிங் ஆர்வத்தைப் பார்த்துட்டு, அவர்தான் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்துல ஒர்க் பண்ண முடியுமானு கேட்டார். ‘ட்ரை பண்ணிப் பார்க்கலாமே’னு தோணினது. அந்தப் படத்தோட டைரக்டர் அனீஸ் என்கிட்ட முழுக்கதையையும் விவரிச்சார்.

‘ஒரு போர்ஷன் ஐயங்கார் குடும்பப் பின்னணி... இன்னொரு போர்ஷன் முஸ்லிம் பின்னணி’னு ரொம்ப சவாலான கதைக்களம்... ரெண்டையும் பத்தி நிறைய ரிசர்ச் பண்ணினேன். ஐயங்கார் குடும்பத்துல கருப்பு அவ்வளவா உடுத்த மாட்டாங்கனு ரொம்ப கவனமா அதைத் தவிர்த்தேன்.

‘கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்’ பாட்டுல நஸ்ரியாவுக்கு பாவாடை-தாவணி டிசைன் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். மெட்டீரியல் வாங்கி, அதை ‘டை’ பண்ணி, பிரின்ட் பண்ணி, அப்புறம் டிசைன் பண்ணினேன். அந்த டிரெஸ்ஸை போட்டுப் பார்த்ததும் நஸ்ரியா சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சாங்க...

அதே மாதிரி ஜெய்க்கு டிசைன் பண்ணினதும் நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ஜெய் ரொம்ப ஸ்வீட். ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’னு அவர்கூட ஒர்க் பண்ணின ரெண்டு படங்களுமே எனக்குத் திருப்தியா இருந்தது...’’ என்கிற வனிதா,

முதலில் ஒப்புக்கொண்ட படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’. முதலில் ரிலீசானதோ ‘நவீன சரஸ்வதி சபதம்’. படத்துக்குப் படம் புதிது புதிதாக அறிமுகமாகிற காஸ்ட்யூம் டிசைனர்களுக்கு மத்தியில் தன் இருப்பை எப்படித் தக்க வைத்துக் கொள்ளப் போகிறார் வனிதா?

‘‘நான் எந்தப் போட்டியிலயும் இல்லை. எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் காட்டணும்னு நான் நினைக்கலை. யாருக்கு எது பொருந்துமோ, அப்படி டிசைன் பண்றதுதான் என் வேலை. ரெண்டு
படங்கள்தான் பண்ணியிருக்கேன். இன்னும் ரெண்டு படங்களுக்கான பேச்சுவார்த்தை போயிட்டிருக்கு.  என்னைவிட சீனியர்ஸ் இந்தத் துறையில இருக்காங்க. யாரையும் போட்டியா நினைக்காம, எனக்குக் கொடுக்கிற வேலையை மட்டும் சரியா பண்ணணும்னு நினைக்கிறேன்...’’ - வனிதாவைப் போலவே அவரது பதிலும் எளிமை.

‘மனா’ என்கிற பெயரில் டிசைன் ஸ்டூடியோ நடத்துகிற வனிதாவுக்கு, சினிமாவை தாண்டியும் வி.ஐ.பி. வாடிக்கையாளர்கள் உண்டு. ‘‘ஐ லவ் ஃபேப்ரிக்ஸ். துணிகள் சூழ இருக்கிற என்னோட உலகத்துல நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னோட கஸ்டமர்ஸுக்காக புதுப்புது மெட்டீரியலையும் டிசைன்ஸையும் தேடித் தேடி பண்ற நான், பர்சனலா ரொம்ப சிம்பிளா இருக்கவே விரும்புவேன். சிம்பிளா இருந்தாலும் அதுல என் டச் இருக்கும்.

 டிஷர்ட்ல கூட ஒரு சின்ன வித்தியாசம் தெரியற மாதிரி பார்த்துப்பேன். வீட்ல இருந்தா என்னோட சாய்ஸ்... அரதப் பழசான டிஷர்ட்டும், பல தடவை தோய்ச்ச பேன்ட்டும்...’’ - வெளிப்படையாகப் பேசுகிற வனிதா, அடுத்தடுத்த நாட்களில் ஃபேஷனாக போகிற விஷயங்கள் சிலதைப் பட்டியலிடுகிறார்.

* பளீர் கலர்களுக்கான மவுசு குறைஞ்சு இது பேஸ்டல் ஷேடுகளுக்கான சீசன்.
* ஷராரா பேன்ட்ஸ்தான் அடுத்த சீசன்ல ஹாட் ஃபேஷன்.
* உடம்பை ஒட்டின மாதிரி டிரெஸ் பண்ணினது மாறி, இனி வரப் போற நாட்கள்ல கொஞ்சம் லூசா டிரெஸ் பண்றதுதான் ட்ரெண்ட்.
* என்னதான் விதம் விதமான மெட்டீரியல்ல சேலைகள் வந்தாலும், எப்போதும் போல இந்த சீசன்லயும் காட்டனுக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ்!

உடம்பை ஒட்டின மாதிரி டிரெஸ் பண்ணினது மாறி, இனி வரப் போற நாட்கள்ல கொஞ்சம் லூசா டிரெஸ் பண்றதுதான் ட்ரெண்ட்!