மனதையும் சுத்தப்படுத்துதல் அழகு!



 ஊஞ்சல்

எந்தத் திசையில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் கால்களின் துள்ளல் அதிகரிப்பது வீட்டை நோக்கிப் பயணிக்கும் பொழுதே! சுத்தமாக இருக்கும் சூழலை விரும்பாமல் யாரும் இருக்க முடியாது. ஆடம்பரம், பகட்டு என்று கண்ணைப் பறிக்கும் விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனதை முதலில் ஈர்ப்பது எளிமையாகவும் சுத்தமாகவும் இருக்கும் இல்லமே.

தேவைக்கு ஏற்றபடி குறைவான சாமான்கள், அளவான அறைகள், துடைத்துத் துடைத்துப் பாதுகாக்கும் ஜன்னல் கம்பிகள், கதவுகள், தரை, என இருக்கும் வீட்டில், சுவர்களில் பூசப்பட்டுள்ள விருப்பமான வண்ணம் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்க, மெலிதான இசை அறையை நிறைக்க, கரைந்து கொண்டிருக்கும் ஒற்றைச் சந்தன ஊதுபத்தியின் மணத்தை நுகர்ந்தவாறே அமர்ந்திருந்தலும் சொர்க்கமும் வேறுவேறா என்ன! :-)

மனதை உற்சாகப்படுத்த எங்கெங்கோ போய் ஊர் சுற்றினாலும், எத்தனை மகிழ்ந்திருந்தாலும், வீடு வந்து சேர்ந்து நமக்கானப் படுக்கையில் சுருண்டு படுத்துக்கொள்ளும் போது தாயின் கருவறை பாதுகாப்பை உணர்வதால்தான் அத்தனை ஆழமான தூக்கம் வருகிறதோ, என்னவோ? நிம்மதியான தூக்கத்தை, நிதானமான யோசிப்பை, ஆழமான அன்பை, அக்கறையான கவனிப்பைப் பெறக் கூடிய வீடு எத்தனை சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நம் அனைவருக்கும் உண்டு.

மிகச் சிறுவயதில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் வெள்ளை அடித்ததாக நினைவு. சுண்ணாம்பு கொண்டு அடிப்பதால், துணிகளில், சாமான்களில், கை-கால்களில் என லேசாக தொட்டாலே அத்தனை அன்போடு ஒட்டிக் கொள்ளும் வெள்ளை. சில மாதங்களிலே அழுக்குப் படிய, அடுத்தப் பொங்கலுக்கு மீண்டும் சுண்ணாம்பு அடிப்பது வழக்கம். புது வீடு கட்டி வந்த பிறகுதான், விரும்பிய வண்ணங்களில் ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் அடித்தோம்.

ஆசை ஆசையாக தேர்ந்தெடுத்த வண்ணங்கள் அடங்கிய அட்டையில் வரிசைப்படுத்தப்பட்டு இருந்த வண்ணங்களின் எண்ணிக்கையைப் பார்த்த போது மலைத்திருக்கிறேன். முதன் முதலில் சுவரில் விரலால் அழுத்தித்  துடைத்தாலும் கடுகளவு கூட ஒட்டிக் கொள்ளாத வண்ணம் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

வண்ணம் அடிப்பதெல்லாம் பிறகுதான், முதலில் வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும்.தூசி என்றாலே அலர்ஜி எனக்கு. லேசாக காற்று மாறுபட்டாலே தொடர்ச்சியாக தும்மல் வரும். தும்மல் தாமதமானால், வேப்பங்குச்சியை மூக்கின் துவாரங்களில் மாற்றி மாற்றி விட்டு தும்மிக் கொண்டே இருப்பேன் :றி மீறி, சவால் விடும்படி அங்கேயே நின்று இருந்தால், முகம், கைகளில் வெடிப்புகள் மளமளவெனத் தோன்றி அழகுப்படுத்த செய்யும். எனவே, இந்த சுத்தம் செய்யும் வேலையில் கடைசியில் துடைத்து வைத்தவற்றை எடுத்து அடுக்கி வைக்கும் வேலை மட்டுமே எனக்கு இருக்கும்!

பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளை அடிக்கும் தினத்தில், பரணில் பாட்டி, அம்மாவுக்கு கொடுத்த பாத்திரங்கள் எல்லாம் ஒட்டடை உடன் நடத்திய குடும்பத்தைப் பிரித்து கீழே இறக்கும் போதே அப்பா, ‘நீ போய் தள்ளி உட்காரு, இல்லாட்டி, ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு சாய்ங்காலம் வா’ என்று சொல்லிவிடுவார்.

அப்பா வேலைக்கு கிளம்பிவிட, தாத்தா, பாட்டி, அம்மா, இவர்களுடன் தம்பியும் இணைந்து சுத்தப்படுத்தி தூசி தட்டிக் கொண்டிருப்பான். ஓரத்தில் கண்கள் மட்டும் தெரிய துப்பட்டாவை சுற்றி, ‘அங்க இன்னும் அழுக்குப் போகல, இங்க சரியா வெள்ளை அடிக்கல’ என்று எதையாவது சொல்லிக்கொண்டு, ‘மாட்டிக்கிட்டயா’ என்று தம்பியிடம் பழிப்புக் காட்டிக் கொண்டிருப்பேன்.

எப்படி துணியை வைத்து வாயையும் மூக்கையும் மூடி இருந்தாலும் மீறி நுழைந்த தூசியின் துகள்கள் எத்தனை முறை வாய் கொப்பளித்தும் நாவில் தங்கி இருக்கும். அதே நாவில், வெள்ளை அடிக்கும் நாளுக்கான பிரத்யேக மதிய உணவு என்று கழனிப்புளிச் சாறு சோறு (கிட்டத்தட்ட புளியோதரை ஸ்டைல்), தேங்காய் துவையல் என காலையில் தயாரித்ததை ஓரளவு சுத்தப்படுத்தப்பட்ட சாமான்களுக்கு மத்தியில், பகிர்ந்து உண்போம்.

இந்த இடத்திலிருந்து நானும் கலந்து கொள்வேன். பெரிய அண்டா போன்ற பாத்திரங்களுக்குள், அதற்கடுத்த சிறிய அளவிலான பாத்திரங்கள் வைக்கப்பட்டு, அதன் உள்ளே இன்னும் சிறிய பாத்திரங்கள் என்று நேர்த்தியாக அடுக்கப்பட்டு, உபயோகித்த பழைய துணிகளைக் கொண்டு பத்திரமாக இரண்டு மூன்று முறை சுற்றி முடிச்சுப் போட்டு மேலே வைக்கப்படும்.

ஆனாலும், அடுத்த முறை வெள்ளை அடிக்க இறக்கும் போது, ‘நீங்க என்னத்த பாதுகாக்கிறது’ என்று போட்டிப் போட்டு உள்ளே சென்று அப்பியிருக்கும் தூசியும் ஒட்டடையும் வெற்றிச் சிரிப்பு சிரிக்கும். ‘எப்படியும் தூசிதான் ஜெயிக்குது...

ஒரு ரெண்டு தடவையாவது அந்த பாத்திரங்களை எல்லாம் இறக்காம, அப்படியே வெள்ளை அடிக்கலாம்ல’ என அப்போது கொடுத்த என் ஆலோசனை நிராகரிப்புக்கு உள்ளானது : இந்த வரிசை முடித்ததும், சட்டம் போட்ட புகைப்படங்களை விபூதி கொண்டு அதன் முன்புற கண்ணாடிகளைத் துடைத்து, லேசாக எண்ணெய் தடவிய துணியால் தகரத்தால் ஆன பின்புறத்தைத் துடைத்து அடுக்கி வைக்க வேண்டும்.

அதன் பிறகு சுவரில் பொருத்தியிருக்கும் நீளமான மரச்சட்டத்தில் ஒவ்வொரு புகைப்படத்தையும் வைத்து, அதன் உச்சியில் உள்ள வளையத்துக்கும் மேலே சுவரில் கட்டிவிடப்பட்டு இருக்கும் நீளமான கம்பிக்கும், வேறு ஒரு சிறிய கம்பியால் தொடர்பு கொடுத்து வரிசை மாறாமல் புகைப்படங்களை மாட்ட வேண்டும்.

இதிலே என் தாத்தாவுக்கு அவர் வேலைக்கு சேர்ந்த போது எடுத்த படம், அதற்கடுத்த வருடம் எடுத்த படம் என்று இவை கூட இடம் மாறக்கூடாது.  மேல போன தாத்தா... நீ இப்போ வந்து பார்க்கணும்... மொத்தமே நாலு படம்தான் லாமினேட் செய்தது ஹால்ல இருக்கு. மீதி எல்லாத்தையும் ( நான் கைக்குழந்தையா இருந்தப்போ எடுத்தது கூட) கதவு போட்ட பரண்ல அடிக்கியாச்சு:)

ஆனா, பாரு, வேகம் குறைஞ்சாலும் இப்பவும் தூசி தான் ஜெயிக்குது :) அடுப்படி சாமான்கள் நிலைமை தான் மிக பரிதாபம். சாதாரண தூசியே இந்தப்பாடு என்றால், இதில் எண்ணெய் பிசுக்கும் சேர்ந்து, உபயோகிக்காத பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் என்று அத்தனையும் நிறம் மாறி பயமுறுத்தும். நன்கு நுரை வரக்கூடிய சோப்பு, பொடி எல்லாம் வைத்து அழுத்தத் தேய்த்து தேய்த்து சுத்தப்படுத்தி, வெயிலில் உலர வைத்து எடுத்து வைப்பார் அம்மா.

பின் மதியப்பொழுதில் கதவு, ஜன்னல்களுக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது வீட்டுக்குள் வெள்ளை அடித்து முடிக்கப்பட்டிருக்கும். அறைகளின் ஓரத்திலே போடப்பட்டிருக்கும் சாக்கை மீறி சிந்தி இருக்கின்ற வண்ணங்களின் துளிகளை ஈரத் துணியால் சுத்தப்படுத்துவோம்.

ஒவ்வொரு சாமானாக சுத்தப்படுத்தி, அவை ஏற்கனவே இருந்த இடத்தில் ஓரளவு அடைக்கப்பட்டு, உச்சி முதல் பாதம் வரை நம்மையும் சுத்தப்படுத்திய பிறகு புதிதாக வண்ணம் அடித்த வீட்டின் அறைகளுக்கென்றே உள்ள வாசத்தை ரசித்து நுகரலாம். அந்த மணம் வீட்டுக்கு புதிதாக வந்த அன்று நாசி உணர்ந்ததாக இருக்கும்.

படுக்கையை விரித்து கை, கால்களை நீட்டிய நொடியில் பற்றிக்கொள்ளும் உறக்கத்தில், பெரிய கடமையை முடித்துவிட்டோம் என்ற நிம்மதியும் கலந்து இருக்கும் :-)இத்தனை கவனமாக, சுத்தப்படுத்தி, வர்ணம் பூசி அழகாக கவனித்துக் கொள்வதற்கு வீடு தரும் பரிசுதான்... பாதுகாப்பான உணர்வும், அதனால் கிடைக்கும் நிம்மதியான உறக்கமும்!

வேலை, படிப்பு, சுற்றுலா என்று எதன் பொருட்டாக நாம் எங்கு சென்று தங்கி இருந்தாலும், மனதின் ஓரத்தில் நம் வீடு குடியிருக்கும் :) குடியிருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி வைத்திருப்பது நம் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அவ்வளவு நல்லது நம் மனதையும் சுத்தப்படுத்தி வைத்திருப்பது!நாம் அறிந்தும் நம்மை மீறியும் மனதில்  சேர்ந்து கொண்டே இருக்கின்ற அழுக்குகளை அவ்வப்போது நீக்கி, சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்கு முக்கியமானதுதானே?

சேர்ந்து போகின்ற அழுக்கு நம்மை அதிகாரம் செய்ய எப்படி விட முடியும்? எத்தனையோ ஒவ்வாமைகள் இருந்தாலும், இழுத்துப் போட்டு செய்யும் வேலைகள் நிறைந்து இருந்தாலும், தவறாமல் குறிப்பிட்ட இடைவேளைகளில் இல்லம் தூய்மையாக்கப்படுகிறது. ஏனென்றால், இது நம் வீடு! வீட்டுக்கு ஒரு நாள் என்றால், மனதிற்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, நம் சுற்றம், நட்பு அறியாமல் செய்த பிழைகளை மன்னித்து, தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டு, சுத்தமான மனதுடன் வாழ்ந்தால், அதற்கு இணையான பெருவாழ்வு இருக்கிறதா என்ன?

இத்தனை கவனமாக, சுத்தப்படுத்தி, வர்ணம் பூசி அழகாக கவனித்துக் கொள்வதற்கு வீடு தரும் பரிசுதான்... பாதுகாப்பான உணர்வும், அதனால் கிடைக்கும் நிம்மதியான உறக்கமும்! வேலை, படிப்பு, சுற்றுலா என்று எதன் பொருட்டாக நாம் எங்கு சென்று தங்கி இருந்தாலும், மனதின் ஓரத்தில் நம் வீடு குடியிருக்கும்!