என் ஜன்னல்



நூல்  ஜன்னலில் ஒரு சிறுமி!

பள்ளிப் பருவத்தின் பசுமையான நினைவுகள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும். சில குழந்தைகளுக்கோ பள்ளி செல்வதென்றாலே ஒரு வித பயம்... பரீட்சை என்றால், அந்தப் பயம் இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தப் பயம் நம் அனைவருக்கும் இருந்திருக்கும். இப்படியான பள்ளிக்கூடத்தையே நாம் இவ்வளவு நேசிக்கிறோம் என்றால், அந்தப் பள்ளியே இயந்திரத் தனமில்லாத, உயிரோட்டமுள்ள ஓர் பள்ளியாக இருந்தால்..?

 அப்படிப்பட்ட ஓர் பள்ளியை பற்றியக் கதையே ‘டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி’. இந்நூலின் ஆசிரியர் அந்தப் பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண். இந்நூலின் கதைக்களம் ஜப்பானில் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியே. இந்தப் பள்ளியை நிறுவியவர், அதன் தலைமை ஆசிரியரான கோபயாஷி.

குழந்தைகளுக்கு ரயில் வண்டிகள் என்றாலே தனிப் பிரியம். பள்ளியின் வகுப்பறைகளே ரயில் பெட்டிகளாக இருந்தால், குழந்தைகள் ‘பள்ளிக்குப் போக மாட்டேன்’ என்று சொல்லி விடுவார்களா என்ன? டோட்டோ சானும் அப்படிப்பட்ட பள்ளியில்தான் கல்வி பயின்றாள். அங்கு குழந்தைகள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென கோபயாஷி திடமாக நம்பினார். பாடங்கள், நமக்குக் கற்பிக்கப்படுவதைப் போல அல்லாமல், அங்கு மிகவும் அன்புடனும், செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தும் கற்பிக்கப்பட்டன.

1945ல் இரண்டாம் உலகப் போரின் குண்டு வீச்சுகளுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தப் பள்ளி அழிந்தே போய்விட்டது. 1937ல் தொடங்கப்பட்டு, 8 ஆண்டு காலத்தில், அதில் பயின்ற குழந்தைகளின் மனதில் நீங்கா இடம் பெற்றதோடு, இன்றும் ஜப்பான் பாடப்புத்தகங்களில் ஒரு பாடமாக இடம் பெற்றிருக்கிறது. இப்புத்தகம் வெளியிடப்பட்ட ஓராண்டு காலத்திலேயே45 லட்சம் பிரதிகளை விற்றுச் சாதனை படைத்துள்ளது. இக்கதையைப் படித்து முடித்த அனைவருக்கும் இப்படிப்பட்ட பள்ளியில் நாம் படிக்கவில்லையே என்ற ஏக்கம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை!(நேஷனல் புக் டிரஸ்ட் 011-26707700 www.nbtindia.gov.in a 40)

இணையம் பெய்யெனப் பெய்யும் மழை!

இயல்பான வார்த்தைகள், நகைச்சுவையான விவரிப்புகள், சமூகத்தைப் பற்றிய அக்கறை யுடன் கூடிய பதிவுகள் ஆகிய வற்றால் நம் அனைவரையும் கட்டி வைத்திருப்பவர் பிரதீப். ‘தரு’ என்ற பெயருடன் அவர் மனதில் ஓர் விருட்சமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகளைப் பற்றிய கவிதையையும் அவளுட னான தன் அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து அவருடைய மகிழ்ச்சியை நம்மிடத்தும் கடத்துகிறார்.

இவர் சினிமாவிலும் நாடகங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் ஓர் கணினிப் பொறியாளர். இவருடைய முதல் குறும்படமான ‘விடியல்’, வித்தியாசமான கதையினால் மிளிர்ந்தது. 10 வருடங்களாக எழுதி வரும் இவருடைய அமெரிக்கா பற்றியப் பயணக் கட்டுரைகள், முதல் முறையாக அமெரிக்காவுக்குச் செல்லும் மக்களின் ‘கலாசார அதிர்ச்சி’யை மிக அழகாக எடுத்துரைக்கின்றன. http://espradeep.blogspot.in

இடம்   பறவை இல்லாத கூடு!

ஹம்பி என்றவுடன் நினைவுக்கு வருவது துங்கபத்ரா நதியும், விஜயநகர மன்னர்களின் கலைநயமிக்க கோயில்களும்தான். 2005ல் புகைப்படக்கலையின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு முன் ஒருமுறை சென்று வந்தோம். இப்போது மறுபடியும் அந்நகரின் அழகை என் கேமராவில் படமெடுக்க எண்ணி மறுமுறை பயணம் செய்தோம். கமலாபுரம் பட்டாபிராமர் கோயில் மீது ஏதோ ஓர் ஈர்ப்பு. இந்தக் கோயில் 1540ம் வருடம் அச்சுதராய மன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.

இதன் கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்ல ஓர் உதாரணம். விருபாக்ஷா மற்றும் விட்டலா கோயில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஏனோ இந்தக் கோயிலுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அங்கு சென்றிருந்த போது யாருமே இருக்கவில்லை. அதுவே ஒரு வெறுமையைக் கொடுத்தது.

விட்டலா கோயில் அளவுக்குப் பெரியதாக இருக்கிறது இந்த பட்டாபிராமர் கோயிலும். அந்த அளவுக்கு வேலைப்பாடுகள் இல்லைதான்... இருந்தாலும் அழகில் சற்றும் குறைந்து விடவில்லை. இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரமாண்டத்தை கூட்டுகின்றன. அங்கிருக்கும் தூண்களின் அடிப்பாகத்தை சிங்கங்கள் தாங்கிப் பிடித்திருப்பதிலிருந்து, இது சோழர்களின் கட்டிடக்கலை பாணி என்று தெரிந்து கொள்ள முடிகிறது (தோழி லக்ஷ்மி சொல்லி அறிந்து கொண்டது).

கோயில் முழுக்க சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கர்ப்பக்கிரகத்துக்கு சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் ஆக்கிரமிப்பின் போது சூறையாடப்பட்டிருக்கலாம். ஏனோ, அதைப் பார்க்கையில் பறவை இல்லாத பறவைக் கூட்டைப் பார்த்ததைப் போன்றதொரு வருத்தம்.

இங்கிருக்கும் கோபுரமும் அதே சோழர் பாணியில் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் அடிப்பாகம் கற்களினாலும், மேல் பாகம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையினாலும் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தினால் சற்றே களையிழந்து போயிருந்தது. அதனையும் கற்களினாலேயே கட்டி இருந்தால் திம்மராயர் கட்டும் போது இருந்திருந்த அதே அழகு இன்று வரை நீடித்திருக்குமே என்ற ஆதங்கம் என் மனதில்.

ஹம்பியில் எவ்வளவோ கோயில்களைப் பார்த்திருந்தாலும், பட்டாபிராமர் கோயிலை மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக உணர்ந்தேன். ஆள் அரவமற்ற அமைதியான சூழலினாலா? கலைநயமிக்கக் கட்டிடக்கலை மேல் ஏற்பட்ட ஈர்ப்பா? சொல்லத் தெரியவில்லை!

படம்  என்ன ஒரு படம்!


Gravity இரண்டே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு படத்தையே முடித்து விட்டார்கள். மேலும் சில கதாபாத்திரங்கள் குரல் அளவில் மட்டுமே வந்து (வரவே இல்லை) போகிறார்கள். 3ஞி படமாதலால் நாமே விண்வெளியில் பறப்பது போன்றதொரு உணர்வு. எந்த அளவுக்கு இதை உணர்ந்தோம் என்றால், படம் முடித்து வீட்டுக்குத் திரும்பும் போதுகூட நாம் விண்வெளியில் இருப்பது போலவே ஓர் பிரமை!

91 நிமிட படத்தில் 80 நிமிட Visual  Effects க்காக 3 ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிக அருமையாக கையாண்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ‘கண்ணீர்’ மற்றும் ‘தீ’ ஆகியவற்றை விண்வெளியில் மிக அழகாக படமாக்கி இருக்கின்றனர்.

 ஆச்சிஜன் கம்மியாகும் போதெல்லாம் நமக்கே சுவாசிப்பது கஷ்டமாக இருப்பது போன்றொரு உணர்வு.படம் முடித்து வீட்டுக்குச் செல்வதற்காக காரில் ஏறியவுடன், ‘காரில் ஆச்சிஜன் கம்மியாக இருக்கின்றதோ!!!’ என்று நினைக்கும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது Gravity!