பசுமை நிறைந்த நினைவுகளில்...



என்னுடைய தோழி ஒருத்தி எப்பொழுதும் திரைப்படப் பாடல்களை வாய்க்குள் பாடிக்கொண்டே இருப்பாள். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...’ என்ற வரிகளை, அவள் ஒரு நாளைக்கு குறைந்தது 50 முறையாவது பாடுவாள்.

இந்த வரிகளை முணுமுணுக்கும் எல்லா நேரத்திலும் அவளுடைய இதழ் கடையோரம் மெல்லியதாக ஒரு புன்னகை மிளிர்ந்திருக்கும். அபூர்வமான பூ ஒன்றைப் போல அது புத்தம் புதிதாக இருக்கும். குழிந்த அவள் கன்னத்தில் அந்த அபூர்வப் பூ பொருத்தமான இடத்தில் இருக்கும் கம்பீரத்தில் மலர்ந்திருக்கும்.

நர்சரி பள்ளியில் வேலை செய்தாள் அவள். குழந்தைகளுடன் குழந்தையாக அவள் எல்லா நேரமும் விளையாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருப்பாள். மிகப்பெரிய உருவம். ஆனால், அந்த உருவத்தை மறைத்துக் கொண்டு குழந்தைத்தனம் எட்டிப் பார்க்கும். மொத்தக் குழந்தைகளையும் அன்பால் வசக்கி வைத்திருப்பாள்.

அழும் குழந்தையை கைகளில் தூக்கிப்பிடித்தபடி ‘சின்னச் சின்ன கண்ணனுக்கு என்ன வேணும்’ என்ற பாடலை பாடிக் கொண்டேதான் அதன் அழுகையை சரி செய்வாள். திரைப் பாடல்களின் மூலமே முழு நாளையும் வசியம் செய்து கொள்ளும் வழியை அவள் கற்று வைத்திருந்தாள்.

உடன் வேலை செய்தஎல்லோருக்குமே தெரியும், அவளுக்குள் காதல் வந்திருப்பது. அந்தக் காதலே அவள் புன்னகையை, பாடலை, பேச்சை வெகு அழகாக்கியிருந்தது. தனக்குள் ஒரு காதல் இருக்கிறதுஎன்பதை அவள் தன்னுடைய எந்த நடவடிக்கையிலும் வெளிப்பட்டு விடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டாள். அவளின் முயற்சிகளை மீறி ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று அவள் மெல்லிய குரலில் பாடும்போது, அவளின் காதல் இதழோரத்தில் வெளிப்பட்டு அனைவருக்கும் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

பாடலும் காதலும் தந்த இதத்தில் மகிழ்ச்சியாக இருந்த தோழி, ஒரு நாள் காலையில் 8 மணிக்கே பள்ளிக்கு வந்துவிட்டாள். முகம் அழுது வீங்கியிருந்தது. ஆழ்ந்த வருத்தத்தில் அவள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமைதியாக இருந்தாள். வழக்கம் போல பாடம் நடத்தினாள். குழந்தைகளுடன் விளையாடினாள்.

அபூர்வப் பூவான புன்னகையும் பாடலும் மட்டும் காணாமல் போயிருந்தன. பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பிய பிறகும், அவள் மட்டும் தயங்கியவாறு இருந்தாள். புன்னகையற்ற அவள் முகம் ஆகப்பெரும் துயராக எனக்குள் இருந்தது. ஆனாலும், அவளிடம் நெருங்கி ஆறுதல் சொல்லவோ, என்ன நடந்தது என்று கேட்கும் அளவுக்கோ அவள் யாரையுமே  நெருங்க விடமாட்டாள். அப்படியும் நான் அவளுடன் அந்த நேரத்தில் உடன் இருக்கப் பிரியப்பட்டேன்.

இருட்டத் தொடங்கும் வரை உட்கார்ந்திருந்தோம். நான் இருப்பதை எதற்கு என்றும் கேட்கவில்லை. இருப்பதை பொருட்படுத்தவும் இல்லை. தனக்குள்ளாகப் பேசிக்கொண்டு தரையில் ஒரு குச்சியால் கோடிழுத்துக் கொண்டும், ஏதேதோ மனசுக்குள் வாய்விட்டுப் பேசிக் கொண்டும் இருந்தாள். கால நேரத்தைக் கடந்து அவள் உள்ளம் துயரப் புதைகுழியில் சிக்கி இருப்பது தெரிந்ததால் அவளை தனிமையில் விட்டு நகரவே கூடாது என்ற முடிவுடன் நான் அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.

சட்டென அவளின் விருப்பப் பாடலை பாட ஆரம்பித்தாள். அவளின் பாடலுடன் இணைந்த லயம் போல இருக்கும் அவள் புன்னகை இல்லை. குரலும் ஒத்துழைக்கவில்லை. இரண்டு வரி கூட பாடி இருக்க மாட்டாள். திடீரென அவள் குரல் உடைந்து சத்தமாக, ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று அழுகையுடன் பாடினாள். பாட முடியாமல் தொண்டை அடைக்க விசும்பி விசும்பி அழுதாள்.

அவளுடைய பெரிய உருவம் தோள்கள் குலுங்க அழுவதைப் பார்த்தபோது எனக்கு உயிர் போகும் வலி வந்தது. பக்கத்தில் போய் உட்கார்ந்து, அவளை அணைத்தவாறு முதுகைத் தடவிக் கொடுத்த படி, கலங்கும் கண்களுடன் உட்கார்ந்திருந்தேன். காதலுக்காக கசியும் எல்லா கண்ணீர்த் துளிகளிலும் நம் கண்ணீர்த் துளியும் கலந்துவிடும்தானே... நீண்ட நேரம் அழுத பின்னர் கண்களை துடைத்துக் கொண்டு தோழி கிளம்பினாள். நானும் உடன் கிளம்பினேன்.

அடுத்த நாள் பள்ளிக்குக் கிளம்பும்போதேகவலையாக இருந்தது. அவள் இனி பள்ளிக்கு வருவாளா? சிரித்தபடி பாட்டுப் பாடுவாளா? அவள் இதழோரப் புன்னகை பொருள் பொதிந்ததாக இருக்குமா? இது போன்ற கேள்விகளுடன் பள்ளிக்குக் கிளம்பினேன்.

 தோழி வந்திருந்தாள். முதல் நாள் அளவுக்கு மோசமில்லை என்றாலும், கசந்த காதலின் சுவடுகள் அவளிடம் இருக்கவே செய்தன. ஆனாலும், வழக்கமான பணிகளில் தன்னைஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டாள். காலை11 மணி இடைவேளையின் போது, அவள் அருகில் உட்கார்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன்.

தோழி தேநீரைச் சுவைக்கும் இடைவெளியில் ஒரு பாடல் வரியை முணுமுணுப்பது கேட்டது. ஆர்வமாகி அவள் அருகில் மெல்ல நகர்ந்துஉட்கார்ந்தேன்... அவள் பாடும் பாடலை அறிய. ‘கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?

 காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ?’ என்ற பாடலை லேசான சோகத்துடன் பாடிக் கொண்டிருந்தாள். ‘பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்’ என்ற வரிகளைப் பாடும் பொழுது, அவளின் முகம் முந்தைய நாளின் துயரத்துக்கு மாறுவதைப் பார்த்த நான், தாங்க முடியாமல் எழுந்து வந்துவிட்டேன்.

துயரத்தைத் தீர்த்துக் கொள்ள அவளுக்கு வழி இருக்கிறது. கையறு நிலையில் இருந்த நான் எப்படி என்னைத் தேற்றிக் கொள்ள முடியும்? அதனால் இடத்தைவிட்டு நகர்வதே எனக்குத் தெரிந்தஒரே வழி.என்னுடைய தோழி தமிழ்ச் சமூகத்துப் பெண்களின் வெளிப்பாடு. அவர்களின் பிரதிபலிப்பு. நளாயினி கூத்துப் பார்த்து, அவளின் சோகத்தைப் பிழியும் வரிகளை அடுத்தக் கூத்துப் பார்க்கும் வரை வீட்டிலும் வெளியிலும் பெண்கள் பாடிக் கொண்டிருப்பார்கள்.

அதில் அவர்களின் சோகமும் வாழ்க்கைத் துயரமும் கலந்தோடும். நளாயினிக்காக கொஞ்சமும் அவர்களுக்காகக் கொஞ்சமும் அழுது தீர்ப்பார்கள். கர்ணனின் கொடைத் திறத்தையும் குந்தியால் கைவிடப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட நிலையை எண்ணியும் வருத்தப்படுவார்கள். கர்ணமோட்சம் பார்த்த பத்து நாட்களுக்கு
குந்தியை திட்டித் தீர்ப்பார்கள். 

கூத்தின் இடத்தை 70களுக்குப் பிறகு திரைப்படங்கள் எடுத்துக் கொண்டன. பெண்களுக்கு முழுமையாக என்று சொல்ல முடியாது. ஆண்களுக்குத் திரைப்படங்கள் பார்ப்பது எளிதான காரியம். பெண்களுக்கு அவ்வாறில்லை. திரையரங்கங்களுக்குச் சென்று பெண்கள் திரைப்படம் பார்ப்பது பாவச் செயலாகக் கூட இச்சமூகத்தில் இருந்திருக்கிறது.

 ஆண், பெண் உட்காருமிடங்களுக்கு இடையே தடுப்புகள் இருந்தமை என் நினைவுகளில் கூட இருக்கிறது (இன்றைக்குள்ள டிரைவ் இன் தியேட்டர்களும், குளிரூட்டப்பட்ட திரையரங்கங்களும் கண்முன் வந்து போகின்றன). குடும்பத்தினருடன் தப்பித் தவறி ஒரு படம்பார்த்துவிட்டு வந்தாலும் அப்படத்தைப் பற்றிதிரையரங்க வாசலிலேயே மறந்துவிட வேண்டும். வீட்டுக்கு வந்து அந்தப் படத்தைப் பற்றி பேசக் கூடாது. ‘ஓயாம கூத்தாடிகளைப் பத்தி நடு வீட்ல என்ன பேச்சு?’ என்று அவமானகரமாக வாய் அடைக்கப்படும்.

ஆண்களோ அவர்களின் சபையிலும் பெண்கள் தங்களின் தனிமைப் பேச்சிலும் கட்டாயம் அந்த திரைப்படத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி திரைப்படம் ரகசியமாகவேனும் வெகு ஆழமாக நம் மனிதர்களிடத்தில் இருப்பதால்தான் அதுஇன்றைக்கும் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.

70களின் இறுதியிலும் 80களுக்குப் பிறகும் வானொலி பிரபலமடையத் தொடங்கிய பிறகு திரையிசைப் பாடல்கள் பெண்களின் ஆதர்சமாக மாறின. கூத்துப் பார்த்து, கூத்துப் பாடல்களின் மூலம் தங்களின் துயரங்களை வெளிப்படுத்திய தங்களுடைய அம்மா, பாட்டிகளைப் போல, இவர்களுக்குத் திரையிசைப் பாடல்கள் கை கொடுத்தன.

தங்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்காதலையும் கல்யாணத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான வார்த்தைகளைப் பாடல்களில் இருந்து பெற்றார்கள். கண்ணதாசனும்இளையராஜாவும்தான் இன்று வரை பெண்களின் துயர வடிகால்கள்.

இலங்கை வானொலியின் பண்பலை வரிசைகள் தமிழகத்தில் பிரபலமடைந்த பிறகு குக்கிராமத்துப் பெண்களும் திரையிசைப் பாடல்களில் மயங்கிக் கிடந்தார்கள். வேலை செய்து கொண்டும் சமைத்துக் கொண்டும் கைவேலை செய்து கொண்டும் ஓய்வெடுத்துக் கொண்டும் இலங்கை வானொலி யின் வர்ணனையாளர்களின் மயக்கும் குரலில் ஒலித்த கவித்துவமான வர்ணனைகளுடன் முகிழ்த்திருந்தார்கள்.

பாடல்களின் காட்சிகளை பெண்கள் பல நேரங்களில் தங்களின் கற்பனைகளிலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அப்புறம் கதாநாயகி, கதாநாயகன் யார் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

திரைப்படம் பார்க்க விதிக்கப்பட்டிருந்தகட்டுப்பாடு மெல்ல விலகி, நாள் முழுக்க வீட்டில் பாடிக் கொண்டிருந்த வானொலிகள் மேல்திரும்பினாலும் அந்தக் காலத்துப் பாடல்களின் மெல்லிசையும் கருத்தாழமிக்க வரிகளும் எல்லோரையும் கட்டிப் போட்டிருந்தது உண்மைதான். திருமண வீடுகளில் இன்று வரை ‘மருமகளே மருமகளே வா வா...

 உன் வலது காலை எடுத்து வைத்து வா வா’ என்ற பாடல் ஒலித்திருக்கும் கல்யாண வீடுகளை நம்மால் கணக்கெடுக்க முடியுமா? ‘வாராயோ தோழி வாராயோ’ வரிகள் தரும் நாணத்தில் தலை குனிந்து வெட்கப்பட்டுச் சிரித்த பெண்களின் முகங்களை எண்ணிப் பார்க்க முடியுமா?

‘பாசமலர்’க்காகத் தமிழகம் முழுவதும் பெண்கள் வடித்த கண்ணீர் நிச்சயம் ஒரு கடலளவுஆகியிருக்குமே? ‘ஒரு கொடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா’ என்று அழுதுகொண்டே, முந்தானையில் முகம் துடைத்துக் கொண்ட பெண்கள் தங்கள் துயரங்களை பாடல் வரிகளில்தான் கரைத்துக் கொண்டார்கள்.துயரங்களைக் கடந்து காதல் பாடல்களில் கசிந்துருகிய பெண்கள்தான் அதிகம்.

காதலிக்கும் துணிவையும் பெண்கள் திரைப்படத்தில் இருந்து தான் பெற்றார்கள். காதலன் பற்றிய பிம்பத்தையும் காதலைக் கொண்டாடும் வரிகளையும் பெண்களுக்குப் பாடல்கள் குறைவற வாரி வழங்கின. எல்லா ரகசியங்களையும் அறிந்த, ஆனால், ரகசியத்தைக் கட்டிக் காக்கும் ஆத்ம தோழி ஒருத்தியைப் போல பெண்களுக்குப் பாடல்கள் துணை இருந்திருக்கின்றன. வடிகால்கள் அற்ற வயதுப் பெண்களின் நிழல் போலவே ஒரு காலத்தில் பாடல்கள் வாழ்ந்திருக்கின்றன.

என்னுடைய சொந்தக்கார பெரியம்மா ஒருவர். கூத்துப் பார்ப்பதில் வெறியே கொண்டவர். சுத்துப்பட்டு கிராமத்தில் எங்குக் கூத்துப் போட்டாலும், கையில் ஒரு பாயும் புடவை
முந்தானையில் பொரி அரிசியும் கட்டிக்கொண்டு கூத்துப் பார்க்கக் கிளம்பிப் போய்விடுவார். 7 குழந்தைகள் இருந்தன. எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்.

சோறு பொங்கி வைத்துவிட்டு கிளம்பிவிடுவார். உடன் யாராவது வந்தால் அழைத்துப் போவார். அல்லது தனியாகவே கிளம்பி விடுவார். கூத்து விடியும் நேரத்தில்தான் பெரும்பாலும் முடியும். பொழுது பலபல என்று புலர்ந்து கொண்டு இருக்கும் நேரத்திலேயே நடந்து வீடு வந்துசேர்ந்துவிடுவார்.

பாயை வீட்டுத் திண்ணையில் போட்டுவிட்டு சாணம் கரைத்துத் தெருவுக்குத் தெளித்து, கூட்டிப் பெருக்கிவிட்டு எல்லா வீட்டுப் பெண்களையும் போல வேலைகளைத் தொடங்கிவிடுவார்.

கொஞ்சமும் சோர்விருக்காது அவரிடம். முகம் முழுக்க சிரிப்பாக இருப்பார். குறிப்பாக ‘வள்ளி திருமணம்’ பார்த்துவிட்டு வந்தால், முருகன் குறத்தி மகளான வள்ளியை விவரித்துப் பாடும் வரிகளைப் பாடிக் கொண்டே இருப்பார். முருகன்- வள்ளி காதலைச் சொல்லும்முன் கோமாளியின் பாலியல் நகைச்சுவைகளையும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்.

திரைப்படங்கள் வெகுவாக மக்களிடம் பிரபலமான பிறகு, அவர் ஒரு திரைப்படத்தையும் பார்த்தது கிடையாது. ஒருமுறை இளவட்டப் பையன்கள் தெரு திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு திரைப்படத்தின் கதையைப் பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது ‘காதல், காதலி, காதலிக்கிறார்கள்’ என்று அடிக்கடி, ‘காதல் காதல்’ என்ற வார்த்தையைச் சொல்லி இருக்கிறார்கள். ‘என்னடா கண்ணு, காதல் காதல்னு சொல்றீங்களே’ என்று பெரியம்மா கேட்டிருக்கிறார்கள்.

குறும்புத்தனமான பையனில் ஒருவன், ‘பெரிம்மா, காதல் நம்ம பாய் கடையில்தான் விக்குது. புதுப் பலகாரம், 100 வாங்கியா’ என்று பெரியம்மாவிடம் சொல்லிவிட்டான்.பெரியம்மாவும் பாய் கடையில் போய் கேட்டிருக்கிறார்கள். கடையில் இருந்த ஆட்கள் முழுக்க சிரித்து தீர்த்துவிட்டார்கள்.

‘கிழவி, வயசான காலத்தில் உனக்குக் காதல் கேட்டுச்சா’ என்று இன்று வரை பெரியம்மாவை ஊரே கிண்டல் செய்து கொண்டுதான் இருக்கிறது.  பெரியம்மாவுக்கு காதல் என்ற வார்த்தைதான் தெரியாது. முருகன்-வள்ளி காதலை அமர காவியமாக்கிக் கூத்துப் பாடலை பாடச் சொன்னால் நம்முடைய காதல் என்ற சொல் வெறுங்கூடாக நிற்கும்!

துயரங்களைக் கடந்து காதல் பாடல்களில் கசிந்துருகிய பெண்கள்தான் அதிகம். காதலிக்கும் துணிவையும் பெண்கள் திரைப்படத்தில் இருந்துதான் பெற்றார்கள்.

(நிறைய பேசுவோம்...
நிறைவாகப் பேசுவோம்!)

அ.வெண்ணிலா