ட்வின்ஸ்!



இரட்டைக் கர்ப்பம் சுமக்கும் பெண்களுக்கு கருத்தரித்த நாள் முதல் பிரசவம் வரை ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகவே கழியும். ஒரு குழந்தையை சுமப்பவர்களுக்கு முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கோ மொத்த கர்ப்ப காலமுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதாகவே அறிவுறுத்தப்படும்.

ஒவ்வொரு ட்ரைமெஸ்டரிலும் இவர்கள் சந்திக்கிற பிரச்னைகள் வித்தியாசமானதாகவும் சில நேரங்களில் விபரீதமானவையாகவும் இருக்கும். அப்படி ஒன்றுதான் இரண்டாவது ட்ரைமெஸ்டரில் வருகிற ப்ரீ எக்ளாம்சியா.

அதென்ன ப்ரீ எக்ளாம்சியா?

விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் சந்திரலேகா.‘‘முன்சூல் வலிப்பு எனப்படுகிற இந்தப் பிரச்னை, முதல் முறை கர்ப்பம் சுமப்பவர்கள், குடும்பப் பின்னணியில் கர்ப்பகால ஹைப்பர் டென்ஷன் இருந்தவர்கள், 20 வயதுக்கு முன்பும், 40 வயதுக்குப் பிறகும் கருத்தரிப்பவர்கள், கர்ப்பத்துக்கு முன்பு அதிக ரத்த அழுத்தமோ, சிறுநீரகப் பிரச்னைகளோ இருந்தவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், அதாவது, 30க்கு மேல் பி.எம்.ஐ. உள்ளவர்கள் ஆகியோரை அதிகம் தாக்கும்.

இவர்களைவிட ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமக்கும் பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.இந்த ப்ரீ எக்ளாம்சியாவில் மிதமானது, தீவிரமானது என 2 நிலைகள் உள்ளன. மிதமானதில் உயர் ரத்த அழுத்தம், உடலில் தண்ணீர் சேர்வது, சிறுநீரில் புரதம் தென்படுவது போன்றவை இருக்கும். தீவிரமானதில் தலைவலி, பார்வை மங்குதல், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, களைப்பு, வாந்தி, அடிக்கடி சிறிது சிறிதாக சிறுநீர் கழிப்பது, மேல் வயிற்று வலி, மூச்சுத் திணறல் போன்றவை இருக்கும்.

கர்ப்ப கால மருத்துவப் பரிசோத னைகளின் போது, பிபி, சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகளை செய்வதன் மூலம் ஒருவருக்கு ப்ரீ எக்ளாம்சியா பிரச்னை இருப்பதை மருத்துவர் உறுதி செய்வார்.இந்தப் பிரச்னை சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்படாவிட்டால், தாயின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதாகும் அபாயம் ஏற்படலாம். கருவிலுள்ள குழந்தையையும் இது பாதிக்கும். அதாவது, குழந்தைக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்வதை இது தடுக்கும்.

குழந்தைக்கு குறைந்த அளவு ஆக்சிஜனும் உணவும் செல்வதால், அது எடை குறைவாகப் பிறக்கும்.ப்ரீ எக்ளாம்சியா அலட்சியப்படுத்தப்படுகிற பட்சத்தில், அது மூளையின் சவ்வுகளைப் பாதித்து, தாய், சேய் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். எக்ளாம்சியா எனப்படுகிற இந்த நிலையானது கர்ப்ப காலத்திலோ, பிரசவத்தின் போதோ அல்லது பிரசவமான உடனேயோ ஏற்படலாம்.

 HELLP syndrome என்கிற பிரச்னைக்கும் காரணமாகலாம். கல்லீரல் பாதிப்பும், ரத்தத்தை உறையச் செய்கிற ஆபத்தும் இணைந்த அபூர்வ பிரச்னை இது. பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகே தாக்குகிற இந்த சிண்ட்ரோம், அரிதாக சிலருக்கு கர்ப்பத்தின் நடுவிலும் இன்னும் சிலருக்கு அதற்கும் முன்பாகவும் கூட தாக்கலாம்.

இவர்கள் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கிற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணவில் உப்பை அறவே தவிர்ப்பது அல்லது குறைத்து உண்பது, தினம் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, மிதமான உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு ஓய்வெடுப்பது, அடிக்கடி கால்களை சற்றே உயர்த்தி வைத்திருப்பது, கஃபைன் கலந்த பானங்களைத் தவிர்ப்பது போன்று மருத்துவர் அறிவுறுத்தும் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்...’’

பாச மலர்கள்!

வருடங்கள் ஓடி விட்டன. ஆனாலும், நேற்றுதான் குழந்தைகளை கையில் ஏந்திய மாதிரி நினைவுகளின் பசுமை நீங்காமல் பேசுகிறார் நடிகை நளினி.அருண், அருணா என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த நளினிக்கு வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணமும் அதுவாகத்தான் இருக்கிறது.

‘‘என் சித்தப்பாவுக்கு, என் அண்ணா பொண்ணுக்கு... இப்படி எங்கக் குடும்பத்துல ட்வின்ஸ் உண்டு. அந்த வகையில எனக்கும் வந்திருக்கலாம். கல்யாணமாகி ஒன்றரை வருஷம் கழிச்சுதான் கன்சீவ் ஆனேன். ட்வின்ஸ்னு சொன்னப்ப நாங்க அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அத்தனை சந்தோஷத்தையும் காலி பண்ற வகையில அஞ்சாவது மாசம் எனக்கு ப்ளீடிங் ஆச்சு. எல்லாரும் பயங்கர அப்செட். கடவுள் புண்ணியத்துல அந்த ப்ளீடிங் அப்படியே ஸ்டாப் ஆச்சு. ட்வின்ஸை சுமக்கிற பெண்களுக்கு அது சகஜம்னு சொன்னாங்க டாக்டர்.

என் மாமியார் ரெண்டும் பையன்னு சொல்லிட்டிருந்தாங்க. எங்கம்மாவோ ரெண்டும் பொண்னுதான்னு சொன்னாங்க. ரெண்டும் பொண்ணாதான் இருக்கும்கிற நினைப்புல நானும் பொம்பிளைக் குழந்தைகளுக்காக டிரெஸ்சா நிறைய வாங்கி வச்சிட்டேன். ஆனா, பொண்ணு ஒண்ணும், பையன் ஒண்ணுமா என் கையில ரெண்டு குழந்தைகளை கொடுத்தப்ப எல்லாருக்கும் ஆச்சரியம். என் குழந்தைங்களை கையில வாங்கின அந்த நிமிஷம் என்னை அறியாம அழுதேன். வாழ்க்கையில பெரிசா எதையோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு உணர்வு. ரெண்டு பேருக்கும் ஒரு நிமிஷம்தான் வித்தியாசம். சூரிய திசையில பிறந்ததால அருண், அருணானு பேர் வைக்கணும்னு அவங்கப்பாதான் முடிவு பண்ணினார்.

‘ஒரு குழந்தையை வச்சு சமாளிக்கிறதே பெரிய விஷயம்... உனக்கு ரெட்டைப் புள்ளை... எப்படி சமாளிக்கப் போறியோ...’னு நிறைய பேர் பயமுறுத்தினாங்க. ஆனா, அருணும் அருணாவும் அவ்வளவு சமத்து. சொன்ன பேச்சைத் தட்ட மாட்டாங்க. அருணை ஸ்போர்ட்ஸ்ல பெரிய ஆளா கொண்டு வரணும்னு ஆசைப்பட்டு, கராத்தே, டென்னிஸ், ஸ்கேட்டிங், சிலம்பம்னு பலதுலயும் சேர்த்து விட்டேன்.

தனியா போனா கத்துக்க மாட்டான்னு, கூடவே துணைக்கு யாரையாவது அனுப்பு வேன். ஆனா, துணைக்கு அனுப்பற பையன் எல்லாத்தையும் கத்துப்பான். அருண் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு திரும்பி வந்துடுவான். ‘எனக்கு இதெல்லாம் வேண்டாம்மா... நான் நல்லா படிப்பேன்...

 உட்கார்ந்து பார்க்கிற வேலையைத்தான் தேர்ந்தெடுப்பேன்’னு சொல்லிட்டே இருப்பான். அதுக்கேத்தபடி சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ. படிச்சு, இப்ப வெளிநாட்ல வேலை பார்க்கறான். அவன் பேருக்குப் பின்னாடி கிட்டத்தட்ட 12 டிகிரி சேர்த்து வச்சிருக்கான்னா அவனோட படிப்பார்வத்தைப் புரிஞ்சுக்கோங்க!பொண்ணு அருணா 2 வயசு வரைக்கும் பேசவே இல்லை. பயந்து போய், சாமிக்கெல்லாம் வேண்டிக்கிட்டோம். 2 வயசுக்குப் பிறகு பேச ஆரம்பிச்சவ, அப்புறம் வாயையே மூடலை. எனக்குப் பிடிக்கும்னு பாட்டு கத்துக்கிட்டா.

எனக்குப் பிடிக்கும்னு வீணை கத்துக்கிட்டா. எனக்குப் பிடிக்கும்னு கோலம் போடக் கத்துக்கிட்டா. வக்கீலுக்குப் படிச்சிட்டு, இப்ப சிடிஎஸ்ல லாயரா இருக்கா. என் பையன், பொண்ணுகிட்ட ‘நீயும் என்னை மாதிரியே சி.ஏ. படி’னு சொன்னப்ப, ‘சான்ஸே இல்லை... நான் சட்டம் தான் படிக்கப் போறேன்... பெண்களுக்காக போராடப் போறேன்’னு சொன்னா. பொண்ணு, பையன் ரெண்டு பேருக்குமே நடிப்புல துளிக்கூட ஆர்வம் இல்லை.

அருண்-அருணாவோட பாசத்தைப் பார்க்கிறப்ப, ‘பாசமலர்’ படமெல்லாம் சாதாரணம்... அதை நான் கண்கூடாப் பார்த்தது என் மகளோட கல்யாணத்துல... அருணாவுக்கு கல்யாணம் முடிஞ்சு, புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறப்ப, எனக்கு அதைத் தாங்கிக்கிற சக்தி இல்லாம நான் ஓடி வந்து காருக்குள்ள உட்கார்ந்துட்டேன். அவளைப் பிரிய மனசில்லாம, அப்பா ஸ்தானத்துல இருந்து வழியனுப்பினான் அருண். அந்த நிமிஷமே சந்தோஷமா செத்துடலாம் போல இருந்தது.

‘இனி வாழ்க்கையில எதுவுமே வேண்டாம்... இவளைப் பார்த்துக்க அவனும், அவனைப் பார்த்துக்க இவளும் இருக்காங்க’னு மனசு நிறைஞ்சது. கடவுள் எனக்கு எத்தனையோ கஷ்டங்களை கொடுத்தார்... அதையெல்லாம் மறக்கடிக்கிற மாதிரி அருமையான ரெண்டு குழந்தைங்களையும், அவங்க மூலமா சந்தோஷங்களையும் கொடுத்திட்டிருக்கார்... இது போதும் எனக்கு...’’ஆனந்தக் கண்ணீரில் நனைகிறார் அருண், அருணாவின் அம்மா!

நளினியின் டிப்ஸ்


‘‘ரெட்டைக் குழந்தைகள்ல ஒண்ணு சுட்டியா இருக்கும். இன்னொண்ணு கொஞ்சம் சுட்டித்தனம் கம்மியா இருக்கும். ஒண்ணு நல்லா படிக்கும். இன்னொண்ணு சுமாரா படிக்கும். அதைப் பார்த்து ஒருத்தரோட ஒருத்தரை கம்பேர் பண்ணிப் பேசாதீங்க. மந்தமா இருந்த குழந்தை திடீர்னு சுட்டியா மாறலாம்.

சுட்டிக் குழந்தையோட துடுக்குத்தனம் கொஞ்சம் குறையலாம். ட்வின்ஸை பொறுத்தவரை இந்த விஷயம் அடிக்கடி மாறிட்டே இருக்கும். கவலையே படாதீங்க... ஒரு கட்டத்துல ரெண்டு பேரும் நீங்களே அதிசயப்படற மாதிரி ஜம்முனு வளர்ந்து நிப்பாங்க!’’

இவர்கள் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கிற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...- அபாயமான கால் வீக்கம்... அலட்சியப்படுத்தினால் ஆபத்து...அடுத்த இதழில்!(காத்திருங்கள்!)