நான் நீ நாம் வாழவே!



கு.உமாதேவி

மீபகாலமாக நான் எப்போதும் முணு முணுத்துக் கொண்டிருக்கிற பாடல்’ என ட்வீட் செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.அத்தனை சேனல்களிலும் டாப் 10  பாடல்களில் முதலிடத்தில் இருப்பதும் இந்தப் பாடலே.‘மெட்ராஸ்’ படத்தில் வருகிற ‘நான் நீ நாம் வாழவே...’ பாடலுக்குத்தான் இத்தனை பெருமையும்.

நண்பனை இழந்து பழிதீர்க்கத் தயாராக இருக்கும் ஹீரோவை அமைதிப்படுத்த காதல் அஸ்திரத்தை வீசுகிற ஹீரோயின் பாடுகிற பாடல்...  அர்த்தமுள்ள,  ஆழமான வரிகளால் அந்தப் பாடலை அழகாக்கியவர் பாடலாசிரியர் கு.உமாதேவி!

தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போல அரிதாக அவ்வப்போது தென்படுகிற பெண் பாடலாசிரியர்களில், இன்று இவர்.‘‘சொந்த ஊர் வந்தவாசி. நினைவு தெரிஞ்ச  நாள்லேருந்தே தமிழ் மேல பற்று அதிகம். 9ம் வகுப்பு படிக்கிறபோது கவிதை எழுத ஆரம்பிச்சேன். அந்தக் கவிதைகளைப் படிச்சிட்டு, அக்காவும் அண்ணனும்  கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தொடர்ந்து எழுதற உத்வேகத்தைக் கொடுத்தது. படிக்கிற காலத்துல எல்லாரும் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டினு ஆர்வமா  இருப்பாங்க. எனக்கு கவிதைகள்தான் தெரியும்கிறதால, கவிதைப் போட்டிகள்ல முதல் ஆளா நிற்பேன். நான் பிறந்தது வந்தவாசியில அத்திப்பாக்கம்னு ஒரு  கிராமம். அங்க பொம்பிளைப் பிள்ளைங்களை படிக்கிறதுக்காக ரொம்ப தூரம் அனுப்ப மாட்டாங்க.

படிச்சு முடிச்சதும் ஒரு வேலையைத் தேடிக்கணும்னு  எதிர்பார்ப்பாங்க. எனக்கும் அந்தச் சிக்கல் இருந்தது. ‘மொழி தொடர்பான படிப்பை முடிச்சா, உடனே டீச்சர் வேலை கிடைக்கும்’னு தமிழோ, ஆங்கிலமோ படிக்கச்  சொன்னாங்க. செய்யாறு ஆர்ட்ஸ் காலேஜ்ல தமிழ் இலக்கியம் படிச்சேன். அப்புறம் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில தமிழ் இலக்கியத்துல முதுகலைப் பட்டம்.  சென்னைப் புதுக் கல்லூரியில எம்.பில். ஆய்வு பண்ணினேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துல பி.ஹெச்டி... இப்படி தமிழ் என் வாழ்க்கையோடவே பயணம்  பண்ணி வந்திருக்கு.

என் பெரிய அண்ணன் மேகநாதனுக்கு டைரி எழுதற பழக்கம் உண்டு. அண்ணனோட டைரியை படிச்சப்ப அதுல இருந்த கவிதைகள் என்னை ஈர்க்க ஆரம்பிச்சது.  அக்காவும் அண்ணனும் வீடு கொள்ளாம அடுக்கி வச்சிருந்த இலக்கியப் புத்தகங்களை வாசிச்சு கவிதைக்கான அரசியலைத் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்து நான்  நன்றி சொல்ல வேண்டியது என் ஆசிரியர்களுக்கு. கிளாசிக்கல் மொழி நடையில இருக்கிற சங்க இலக்கியத்தையும் நீதி இலக்கியத்தையும் அத்தனை  சுவாரஸ்யமா புரிய வச்சு, தமிழை ருசிக்க வச்சதுல அவங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த வகையில இலக்கியம் சார்ந்த பெண்கள் என்னை ரொம்பவே  பாதிச்சாங்க. அதிகாரத் தன்மையுள்ள பெண் படைப்பாளியா ஔவையார் என்னை பிரமிக்க வச்சாங்க. தன் குடும்பம், தன் இல்லறம்னு ஒரு வட்டத்துக்குள்ள  சுருங்காம, சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணிச்ச அறம் தெரிஞ்ச அவங்கதான் என்னோட முதல் ரோல் மாடல். அவங்களைப் போலவே மாதவி, மணிமேகலை,  குண்டலகேசி, கண்ணகினு பலரும் எனக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்தினவங்க. அந்தத் தாக்கத்துடன் இன்னும் வேகமா எழுத ஆரம்பிச்சேன். ‘காலச்சுவடு’,  ‘கணையாழி’ உள்ளிட்ட பத்திரிகைகள்ல என் கவிதைகள் வந்திட்டிருந்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்துல படிச்சிட்டிருந்த நேரம் அது. என் கவிதைகள் மூலமா குட்டி ரேவதியோட அறிமுகம் கிடைச்சது. என்கவிதைகளைப்  பாராட்டினதோட இல்லாம, என் கவிதைகளைத் தொகுத்து,  அவங்களோட ‘பனிக்குடம்’ பதிப்பகத்துல ‘திசைகளைப் பருகியவள்’ என்ற பெயர்ல புத்தகமா  வெளியிட்டு என்னை இலக்கிய இதழ்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க.

சென்னைப் பல்கலைக்கழக விடுதியில தங்கியிருந்த போது, பொதுவா அரசுக் கல்லூரி விடுதிகள்ல தங்கியிருக்கிற பெண்களுக்கு சரியான உணவு, இருப்பிடம்,  கழிவறை வசதிகள் இல்லாம அவதிப்படறது தெரிய வந்தது. அந்த அவலத்தையும் அதிர்ச்சியையும் அரசியல்படுத்த நினைச்சேன். ‘துடி’னு ஒரு இயக்கத்தோட  சேர்ந்து அதுக்கான விழிப்புணர்வுப் பிரசாரங்கள்ல என்னைத் தீவிரமா ஈடுபடுத்திக்கிட்டேன். வெறும் இலக்கிய உலகம் மட்டுமே தெரிஞ்ச என்னை சமூகம்  சார்ந்தும் இயங்க வச்சது ‘துடி’ இயக்கம்.

எம்.ஏ. முடிச்சதும் தியாகராஜா கல்லூரியில விரிவுரையாளரா வேலை கிடைச்சது. கவிதைகள் எழுதறதும் கவியரங்கங்கள்ல கலந்துக்கிறதும்  தொடர்ந்திட்டிருந்தது. என்னோட முதல் கவிதைத் தொகுப்பான ‘திசைகளைப் பருகியவ’ளுக்கு அட்டைப்படம் வரைஞ்சவர் அரசு கவின்கலைக் கல்லூரியோட  அப்போதைய முதல்வர் ஓவியர் சந்துரு. இயக்குநர் ரஞ்சித் அவரோட மாணவர். என்னோட கவிதைகளை ரஞ்சித் தொடர்ந்து கவனிச்சிருக்கார். ‘அட்டக்கத்தி’ படம்  வந்தபோது, ஃபேஸ்புக்ல நான் எழுதின விமர்சனத்தையும் அவர் வாசிச்சிருக்கார். ‘மெட்ராஸ்’ ஷூட்டிங் ஆரம்பிச்ச நேரம்... ரஞ்சித்தோட அசோசியேட்  அதியன்கிட்டருந்து எனக்கு அழைப்பு. ‘பாடல் எழுத விருப்பமா? அப்படின்னா வந்து டியூன் வாங்கிட்டுப் போங்க’னு சொன்னார். எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி.  அடுத்த நாளே ரஞ்சித்தை சந்திச்சேன். சிச்சுவேஷனை விளக்கினார். நண்பனை இழந்த ஹீரோ. அவனுக்குள்ள வன்முறை எண்ணம் தலை தூக்குது... நடக்கப்  போற வன்முறையைத் தடுத்து நிறுத்தி, அதைக் கடந்த இன்னொரு வாழ்க்கை இருக்குனு காட்டறா ஹீரோயின். அதுதான் காட்சி.

ஒரு குழந்தைக்குக் கஷ்டம்னா, அதோட தாய் ஆறுதல் சொல்லித் தேற்றுவாள். அதுவே ஒரு இளைஞனுக்குக் கஷ்டம்னா அவனைத் தேற்றக் கூடிய விஷயங்கள்  நட்பும் காதலும்தான். நட்பை இழந்த ஹீரோவுக்கு தன் காதல் மூலமா ஆறுதல் சொல்லி, கண்ணீர்லேருந்து மீட்கற ஹீரோயினுக்கான பாடல். ஒருநாள் முழுக்க  டியூன் கேட்டேன். அன்னிக்கு ராத்திரியே பாடலை எழுதி அனுப்பினேன். ‘அருமையான வரிகள்’னு இயக்குநர்கிட்டருந்து பாராட்டு வந்ததோட இல்லாம, ஒரு  வரியைக்கூட, ஒரு வார்த்தையைக் கூட மாத்தச் சொல்லாததுல பெரிய சந்தோஷம். பாடலுக்குக் கிடைச்சிருக்கிற பரவலான வரவேற்பு பூரிக்க வைக்குது.  தொடர்ந்து தரமான பாடல்களைக் கொடுக்கணும்கிற பொறுப்பை உணர்த்தியிருக்கு. இந்த இடத்துல நான் என் கணவர் பாரதிபிரபுவுக்கு நன்றி சொல்லக்  கடமைப்பட்டிருக்கேன். சினிமாவுக்கு பாடலானு ஒரு கணம் நான் தயங்கின போது, ‘உன்னால முடியும். நான் இருக்கேன். தைரியமா எழுது’னு ஊக்கம்  கொடுத்தவர் அவர்தான்...’’ - அறிமுகம் தொடங்கி, பாடலாசிரியராக அவதாரமெடுத்த கதை வரை நிறுத்தாமல் சொல்லி முடிக்கிறார் உமாதேவி. எப்போதாவது ஒருவர் திடீரென அறிமுகமாவதும், ஒரே படம் அல்லது பாடலோடு காணாமல் போகிற பெண் பாடலாசிரியர்கள் வரிசையில்
இவரும் சேராமல் இருப்பாரா?

‘‘என் விஷயத்துல அப்படி நடக்காதுனு நம்பறேன். காரணம், எனக்குக் கிடைச்ச பலமான அறிமுகம். தவிர, முதல் பாடலுக்குக் கிடைச்ச வீச்சு... இந்த வாய்ப்பை  நிச்சயம் தக்க வச்சுப்பேன்...’’ - நம்பிக்கை தெரிவிக்கிற உமாதேவிக்கு ஓர் ஆதங்கம் இருக்கிறது.‘‘தமிழ் சினிமாவுல ‘கவிதை வேற... பாடல் வேற’னு ஒரு  பிரிவினை இருக்கு. என்னைப் பொறுத்த வரை கவிதைக்கும் பாடலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரு டியூனுக்குள்ள அழகான ஒரு கவிதையைச் சொல்ல  முடியும். அதையும் நான் நிரூபிக்கணும்னு நினைக்கிறேன்...’’ என்பவருக்கு ஆங்கிலம் கலந்த பாடல்கள் எழுதுவதிலும் ஆட்சேபணை இல்லையாம்.
‘‘ஒரு பாடல்ல ஆங்கில வார்த்தை சேர்த்து எழுதினால்தான் அது மக்களுக்குப் புரியும்னா அப்படி எழுதறதுல தப்பில்லைனு நினைக்கிறேன். இன்னும் சொல்லப்  போனா ஒரு மொழியோட இன்னொரு மொழி இணைஞ்சாதான் அது வளரும்...’’ - வெளிப்படையாகப் பேசுபவர், அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘நைட் ஷோ’ என்ற  படத்தில் தாலாட்டுப் பாடல் எழுதியிருக்கிறார்.

‘‘‘நாம் பறவையின் வானம்’ என்ற என்னோட ரெண்டாவது கவிதைத் தொகுப்பை அகநாழிகை பதிப்பகம் வெளியிடப் போறாங்க. முதல் கவிதைத் தொகுப்பு  ‘திசைகளைப் பருகியவள்’ ரெண்டாவது பதிப்புக்குத் தயாராயிட்டிருக்கு. ‘மெட்ராஸ்’ பாடலுக்கு பரவலான பாராட்டு வந்திட்டிருக்கு... அந்தப் பாடலை எழுதினது  நான்தான்னு தெரிஞ்சு என் கல்லூரி மாணவர்கள் பாராட்டறாங்க. வாழ்க்கையில மகிழ்ச்சியான விஷயங்கள் தொடர்ந்திட்டிருக்கு...’’ கபடமின்றி
சிரிக்கிறார் கவிதாயினி.

‘‘தமிழ் சினிமாவுல ‘கவிதை வேற... பாடல் வேற’னு ஒரு பிரிவினை இருக்கு. என்னைப் பொறுத்த வரை கவிதைக்கும் பாடலுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

படங்கள்: ஆர்.கோபால்